121

       121. சிவபரம்பொருளின் சகளத் திருமேனியைப் புராணம் கூறும் முறையிலே கண்டு மகிழ்கின்றார் வள்ளற்பெருமான்; மேனி முழுதும் பொன்னிறம் பொலிந்து விளங்க, கழுத்து மாத்திரம் கருநிறம் கொண்டு அவரது வள்ளன்மைக் குணத்துக்குச் சாட்சியாய் இலங்குவதை முன்பாட்டில் எடுத்தோதிய வள்ளற்பெருமான், சிவபிரானது செம்பொற்றிருமேனியை மறுபடியும் காண்கின்றார். கண்ணுதலும் கரிய கழுத்தும் பெண்ணமைந்த பாகமும் கண்களில் விளங்கக் காட்சி தருகின்றன. வள்ளலார் கருத்தில், இந்த அருமைத் திருமேனியின் திருமுதுகில் புண்ணுண்டாமாறு பாண்டியன் பிரம்படி பட்டதை நினைக்கின்றார். அது தம் கண்ணுக்குத் தோன்றாதவாறு பெருமான் முதுகைக் காட்டுகின்றாரில்லை. இவராலும் அதனைக் காண முடியவில்லை இதற்குக் காரணம் யாதாகலாம் என நினைத்து ஒன்றைக் கற்பனை செய்கின்றார். பேரருட் பிழம்பாகிய சிவபெருமானே, அப் புண்ணைக் காணில் உலகிலுள்ள கல்லும் புல்லும் எல்லாம் உருகிக் கெடும் என்ற அருள் உள்ளத்தால், காண்பார் காணாதபடி ஒளித்தருளினை; என்னே நின் அருள் இருந்தவாறு எனப்பாடுகின்றார்.

2291.

     கண்கொண்ட நெற்றியும் கார்கொண்ட
          கண்டமும் கற்பளிக்கும்
     பெண்கொண்ட பாகமும் கண்டேன்முன்
          மாறன் பிரம்படியால்
     புண்கொண்ட மேனிப் புறங்கண்டி
          லேன்அப் புறத்தைக்கண்டால்
     ஒண்கொண்ட கல்லும் உருகும்என்
          றோஇங் கொளித்தனையே.

உரை:

     கண்பொருந்திய நெற்றியும், கருநிறமும் கொண்ட கழுத்தும், கற்புருவாய் உமைதங்கிய பாகமும் அடியேன் கண்டேன்; முன்பு பாண்டி மன்னனது பிரம்படியால் புண்ணுற்ற முதுகுப்புறத்தை அடியேன் கண்டிலேன்; அதைக் கண்டால் கனத்த கல்லும் உருகும் என்று கருதி இவ்வுலகில் ஒருவர்க்கும் தெரியாவண்ணம் ஒளித்தனை; என்னே நின் அருள்! எ.று.

     சிவனது சகளத் திருவுருநெற்றியிற் கண் கொண்டிருப்பதைக் “கண் கொண்ட நெற்றி” எனக் குறிக்கின்றார். கார் கொண்ட கண்டம் - கரு நிறம் கொண்ட கழுத்து. கார்; கருமையென்னும் பண்படியாக வந்த பெயர். கற்பின் வடிவாயவளாதலின் உமையம்மையைக் “கற்பளிக்கும் பெண்” என வுரைக்கின்றார். மாறன்; பாண்டியர் குடிப் பெயருள் ஒன்று. வையை பெருகிய காலத்து வந்தியாளாய் வந்து சிவபெருமான் பணி முற்றுமுன் படுத்துறங்கிய செயல்கண்டு மிக வெகுண்டு பாண்டியன் தன் கைப்பிரம்பால் பெருமான் முதுகில் அடித்தான் என்பது புராண வரலாறு. முதுகு நோக்குவார்க்குக் கண்கொண்ட நெற்றியும் கார் கொண்ட கண்டமும் பிறவும் காணப்படாவாகலின், நெற்றியும் கண்டமும் பாகமும் கண்ட யான் மேனிப்புறம் கண்டிலேன் என்பாராய், “பெண் கொண்ட பாகமும் கண்டேன்; முன் மாறன் பிரம்படியால் புண்கொண்ட மேனிப்புறங் கண்டிலேன்” எனப் புகலுகின்றார். காண்பது, இறைவன் காட்டினாலன்றி யின்மையின், “காணாவாறு புறத்தை ஒளித்தனை” எனக் கூறுபவர், காட்டாமைக்குக் காரணம் கற்பிக்கின்றார். “அப்புறத்தைக் கண்டால் ஒண்கொண்ட கல்லும் உருகும் என்றோ இங்கு ஒளித்தனையே” எனப் பரவுகின்றார்.

     இதனால், இறைவன் மாறன் பிரம்படிபட்ட எளிமையை வியந்து, அதனை உலகுயிர் காணின் அன்பால் உருகும் திறம் நினைந்து காட்டாத அருணிலையை புகழ்ந்து வள்ளலார் உரைப்பது உணரலாம்..

     (121)