122

       122. தமது, எதிர்கால விளைவுகளை எண்ணிப் பலவேறு வகையான வழிகளில் அவற்றை முன்பே அறிந்து கொள்ள முயல்வது மக்கள் இயல்பு. கட்டுக் காண்பதும் குறிகேட்பதும் விரிச்சி நிற்பதும் பழங்கால மரபு. சோதிட நூல்களும் அவற்றின் ஆராய்ச்சிகளும் தோன்றியபின் சமுதாயத்தில் உயர்ந்தவர் சோதிடம் காண்பாராயின், நல்லது விளையும் என்று சோதிடர் கூறுவரேல் அவர்கட்கு மகிழ்ச்சியால் பொன்னும் பொருளும் தருவர். இந்நாளிலும் அது நம் நாட்டில் சிறப்பாகப் பேணப்படுகிறது. சோதிடம் காண்டற்குக் கருவியாகும் கிரகங்களையும் இந்நாளில் தெய்வமாக்கிக் கோயில்களிலே பிரதிட்டை செய்துள்ளனர். தெய்வங்களை மதியாமல் இக் கிரகங்களைப் பெருந்தெய்வமாகப் பேணிப் பரவும் பெரிய சைவர்களும் நம் நாட்டில் உள்ளனர். அவர்களைக் கண்ட வள்ளற் பெருமான், தனக்கு இறைவன் திருவருள் எய்தும் காலம் கண்டு சோதிடர் கூறுவராயின் அவர் வாய்க்குச் சர்க்கரைத் தருவேன் எனக் கூறுகின்றார்.

2292.

     வேய்க்குப் பொரும்எழில் தோளுடைத்
          தேவி விளங்குமெங்கள்
     தாய்க்குக் கனிந்தொரு கூறளித்
          தோய்நின் தயவுமிந்த
     நாய்க்குக் கிடைக்கும் எனஒரு
          சோதிடம் நல்கில் அவர்
     வாய்க்குப் பழத்தொடு சர்க்கரை
          வாங்கி வழங்குவனே.

உரை:

     உமாதேவியாகிய எங்கள் தாய்க்கு நின் மெய்யில் ஒரு கூறளித்தாய்; நின் அருளும் எனக்குக் கிடைக்கும் என ஒரு சோதிடம் கூறுவராயின், அவர் வாய்க்குப் பழமும் சர்க்கரையும் வாங்கித் தருவேன் காண் எ.று.

     “வேயுறு தோளி” என அம்பிகைக்கு ஒரு பெயுருண்டு, திருவெண்காட்டு அம்பிக்கையை “வேயன தோளி நாச்சி” என்பர். அதற்குப் பொருள் கூறுவதுபோல “வேய்க்குப் பொரும் எழில் தோளுடைத் தேவி” எனக் கூறுகின்றார். வேயைப் போலும் அழகிய தோளை யுடையவள் என்பது கருத்து. இரண்டாம் வேற்றுமையும் நான்காவது வேற்றுமையும் மயங்குதல் இயல்பாதலின், “வேய்க்குப் பொரும் தோள்” என்றார். “அன்ன பிறவும் நான்கனுருபில் தொன்னெறி மரபின தோன்றலாறே” எனத் தொல்காப்பியம் கூறுவது காண்க. இறைவனுக்குத் தேவியாகிய உமையம்மை ஏனை உலகுயிரனைத்திற்கும் தாயாக விளங்குபவளாதலால் “விளங்கும் எங்கள் தாய்” என்றார். அவர்பால் அன்பு மிகுதியால் மனம் கனிந்து தன் உடலில் ஒரு கூறு அளித்து, “குவளைக் கண்ணி கூறன்” என மணிவாசகர் முதலிய பெருமக்கள் பேணிப் பரவும் பெருமை கொண்டது நினைந்து, “தாய்க்குக் கனிந்து ஒரு கூறளித்தோய்” என வுரைக்கின்றார். தயவு - திருவருள். தன்னைப் பிறன்போல் கூறும் குறிப்பில் இழித்துரைக்கின்றாராதலால், “இந்த நாய்” என மொழிகின்றார். சோதிடர் எவரேனும் உரைப்பவருண்டோ என ஏங்கி நோக்கும் வள்ளற்பிரானுக்கு ஒருவர் போந்து திருவருள் நல்கப்படும் எனச் சோதிடம் கூறுவராயின் என்ற கருத்தை, “ஒரு சோதிடம் நல்கின்” எனக் கூறுகின்றார். சோதிடம் கூறுவார்க்குப் பொன்னும் பொருளும் கொடுப்பது நாட்டவர் வழக்கம். அதனால், தமக்குச் சோதிடம் கூறுபவர்க்கு வள்ளலார் பழமும் சர்க்கரையும் தருவதாக உரைக்கலுற்றுப் “பழத்தொடு சர்க்கரை வாங்கி வழங்குவனே” என மொழிகின்றார். 'நல்லது சொன்ன வாய்க்குச் சர்க்கரை கொடு' என்பது உலகுரை.

     இதனால், இறைவனது திருவருள் கிடைக்கும் என்று சோதிடர் போந்து சோதிடம் கூறுவது ஊக்கம் தருவதாம் என்பது உணரப்படுவது காண்க.

     (122)