123

       123. நினைந்து செய்யும் தொழில்கள் நினைந்தவாறு முடியாமல் இடையூறுபடுவதும் இடையீடுபட்டுக் கெடுவதும் கண்டு மக்கள் வருந்துவது எங்கும் காணப்படுகிறது. வருந்துவோருள்ளும் எய்திய கேட்டுக்குரிய காரணம் யாதென ஆராய்பவர் குறைவு; தன்பால் குறையின்றெனவும் பிறரால் அக்குறையுண்டாயிற்றெனவும் கூறுவாரும் உண்டு. இவ்வாறே உலகியலை நோக்கின் வருந்துவோர் அனைவரும் பிறரைக் குறை கூறுவதும் தெய்வத்தை நோவதும் செய்வதை வள்ளலார் வருத்தத்தோடு பார்க்கின்றார். உலகம் நெடுங்காலமாக வாழ்வார்தம் வாழ்வுக்கு வேண்டுவன நல்கி வாழ்வித்து வருகிறது. வாழும் மக்கள் அதன் பரப்பைச் சிறுசிறு பகுதியாக வகுத்து நாடு, ஊர், நிலம் எனக் கொண்டு, அந்த அளவில் தமது பார்வையைச் செலுத்தி வாழ்கின்றார்கள்; அந்த எல்லைக்குள் வேண்டுவன விளைத்துத் தமது வாழ்க்கையை நடத்துகின்றார்கள். வாழும் காலத்தையும் ஆண்டு, திங்கள், கிழமை, நாள், நாழிகை எனப் பகுத்து இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனக் கூறுசெய்து காலத்தைக் கழிக்கின்றார்கள். அக் காலப் பாகுபாட்டில் செய்வன செய்து பெறுவன பெற்று நுகர்வன நுகர்ந்து வாழ்கின்றார்கள். இவ்வாறு இடமும் காலமுமாகிய முதற்பொருளை வாழ்தற்கென்று பல்வகையாக வகுத்துறையும் மக்களை நோக்கிய வள்ளலார், உலகவரே,. இவ்வாறு இடம் காலம் அனைத்தையும் பலவகையாகப் பிரித்தும் வகுத்தும் அவற்றின்கண்ணே ஒன்றி நின்று நெடிது வளர்ந்து வாழ்கின்றீர்கள். இவ் வாழ்வை எண்ணுமின்; வாழ்வின் ஒவ்வொரு பருவமும் கூறும் நிலையின்றிக் கழிந்தவண்ணம் உள்ளன; உடம்பையும் அதன் உள்ளே இயலும் உயிரையும் நோக்கினால், பசுமட்குடத்தில் நீர் நிற்பது போல உடம்பின்கண் உயிர் இருக்கிறது, நிலையில்லாத வாழ்வு தந்து உலகில் வாழச்செய்கிறான் என்று சிவனை நோவதிற் பயனில்லை. அவன் படைத்தளித்த பொருள்களிடத்தே குறையில்லை. அவற்றைப் பயன்கொண்டு வாழவேண்டிய நம்மிடத்தே பல்லாயிரம் குறைகள் இருக்கின்றன. அவற்றை எண்ணியறிந்து வாழ்வதுதான் நாம் செயற்குரியது என அறிவுறுத்துகின்றார்.

2293.

     காண்டத்தின் மேவும் உலகீர்இத்
          தேகம் கரும்பனைபோல்
     நீண்டத்தி லென்ன நிலையல
          வேஇது நிற்றல்பசும்
     பாண்டத்தில் நீர்நிற்றல் அன்றோ
          நமைநம் பசுபதிதான்
     ஆண்டத்தில் என்ன குறையோநம்
          மேற்குறை ஆயிரமே.

உரை:

     இடம் பொருள் யாவையும் பல கூறுகளாகப் பகுத்துண்டு வாழும் இயல்புடைய உலக மக்களே, இவ்வுடல் கரிய பனைமரம்போல நீண்டு வளர்வதால் என்ன பயன்; நிலைக்கொண்டு நிற்பதன்று; இவ்வுடல் உயிர் தாங்கி நிற்பது பசுமட் பாண்டத்தில் நீர்நிற்றல் போல்வதாம்; நிலையா இயல்பினவாகிய உலகு உடல் முதலியன தந்து ஆண்டு கொண்டதால் இறைவன்பால் ஒரு குறையில்லை; இவற்றைக் கொண்டு வாழ்தற்குரிய நாம் வாழாமல் செய்கின்ற குறைகள் ஆயிரமாகும். எ.று.

     காண்டம் - பிரிவுகள், பகுதிகள் முதலிய கூறுகளைக் குறிப்பது. இது கண்டம் என்ற சொல்லடியாக வருவது. சிறுசிறு கூறுகளாக அளந்து பிரிப்பது கண்டித்தல்; கண்டிதம் என வழங்குவர். காணும் உலகையும் அதன்கண் அமைந்த பொருள்களைப் பொதுவென்றும், சிறப்பென்றும் ஒன்றென்றும் பலவென்றும், முதலென்றும் சினையென்றும் கூறுசெய்து ஒவ்வொன்றையும் கண்டறிந்து போற்றுவது மக்கட் செயலாதலின், “காண்டத்தில் மேவும் உலகீர்” என உரைக்கின்றார். இங்ஙனம் கண்டம் கண்டமாகப் பகுக்கப்படும் பொருள்களுள் தேகமும் ஒன்றாதலின், அதனை எடுத்துக் காட்டி இத் தேகம் நாளும் சிறிது சிறிதாக உண்ணப்படும் பொருளால் பருத்தும் நெடிது நீண்டும் வளர்வது காட்டி, இவ்வாறு வளரும் உடல் நீண்டுயர்ந்தும் வளர்வனவாயினும் நிறம் கருமையுடையவனவல்லவாதலால் பனையை மேற்கொண்டு “கரும்பனைபோல் நீண்டத்தில் என்ன” என இசைக்கின்றார். நீண்டதில் எனற்பாலது நீண்டத்தில் என வந்தது; ஆண்டதில் என்பது ஆண்டத்தில் என வந்தது. இவ்வாறு செய்யுட்களில் வருவது வழக்கம். தமிழ் நாட்டவர் பலரும் நிறம் கருமையுடையராதல் பற்றிக் கரும்பனை உவமமாயிற்று. நீண்டு வளருமாயினும் நெடிதிருப்பதில்லை என்றற்கு “நிலையலவே” என வுரைக்கின்றார். நெடிது நில்லாத இவ்வுடல் நிற்பது எங்ஙனம் எனின், “பசுமட்குடத்தில் நீர் நிற்பது போல” என்பார், “நிற்றல், பசும்பாண்டத்தில் நீர் நிற்றலன்றோ” என்று கூறுகின்றார். நில்லாது கெடுவதைத் திருவள்ளுவரும், “பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று” என்பர். பசுமட்கலத்துட் பெய்த நீர் சிறுசிறு துளிகளாகப் பொசிந்து கலத்தின் வலியழித்து முடிவில் கலத்தோடே உடைந்து போம்; அதுபோல உடற்குள் நின்ற உயிர் காலக் கூறுகளாகிய நாள் திங்கள் என்பவற்றால் உடல் வலியழித்து தானும் உயிரோடே கெட்டுப் போகிறது என அறிதல் வேண்டும். இதனைப் பலரும் அறிவதில்லை என்பாராய்த் திருவள்ளுவர், “உயிர் ஈரும் வாள் அது உணர்வார்ப் பெறின்” என உணர்த்துகின்றார். இளமைக்கண் வளர்தலும் முதுமைக்கண் தேய்தலும் உடைமைபற்றி “இத் தேகம் நிலையவே” என்று குறிக்கின்றார். இளமைக்கண் வளர்தல் இயல்பாயினும் நோய் முதலிய பிறகாரணங்களால் வளர்ச்சி தடைப்பட்டுத் தேய்ந்துக் குறைதலும் தேகத்துக்கு இயல்பு. உடல் வளர்ச்சிக்கு ஆக்கமும் அரணும் செய்யும் பொருளனைத்தும் நில்லா இயல்பிற்றாகிய உலகப் பொருளால் ஆவன; ஆதலால், வளர்ச்சியும் வன்மையுமுடையதாகிய உடல் பின்பு தேய்ந்து குறைகிறது. வளர்தலும் தேய்தலும் உடையதாயினும், உடல் தான் நிற்குங்காறும் உயிர்க்கு உறுதுணையாய் நின்று அறிவு விளக்கம் பெற உதவுகிறது. அவ்வகையில் உலகும் உடலும் பிறவும் உயிர்க்கு உறுதுணையாவது கண்ட வள்ளலார், “நம் பசுபதிதான் நம்மை ஆண்டத்தில் என்ன குறையோ” எனத் தெளிவிக்கின்றார். உடல் பொருள் உலகு என்ற இவற்றின் தொடர்பால் உயிர் நாளும் அறிவு சிறந்து மறைப்பு நீங்கித் தெளிவு பெறுகிறது என்பது கருத்து; ஆனால் உயிருணர்வு, உடல் கருவி கரணங்களின் கூட்டுறவால் உண்டாகும் உள்ளொளியை ஓரொருகால் பொருளாகக் கொள்ளாது வேறுபட்டு குற்றமும் குறையும் எய்திக் குழறுபடைக் குள்ளாகித் துன்புறுகிறது. இறைவன் தந்தருளிய கருவிகள் தமக்குரிய நெறியில் தவறாது இயல்வதும், உயிர்கள் தவறுசெய்து குறைக்குள்ளாவதும் விளங்கவே “நம்மேற் குறை ஆயிரம்” என வுரைக்கின்றார். இறைவன் உதவிய உலகில் உணர்வில்லாத பொருளனைத்தும் ஓர் ஒழுங்கிற்கும் நேர்மைக்கும் கட்டுக்கும் அடங்கி இயலுகின்றன; அவற்றை இயக்கினால், அவை ஒரு நேர்கோட்டில் விளைவின்றி இனிது செல்லும்; உணர்வுடைய உயிர்ப் பொருள் யாவும் இயக்கினால் வளையாமல் கோணாமல் நேர்மையிற் செல்வதில்லை. இவையெல்லாம் கருத்திற்கொண்டே வள்ளற்பெருமான், “நம் மேற்குறை ஆயிரமே” என அறிவுறுத்துகிறார். உலகு உடல் கருவி உடல் கருவி பொருள் முதலியவற்றைப் படைத்தளித்து நம்மை ஆண்டருளிய இறைவன்பால் குறையில்லை; குறை முற்றும் நம்பால் உளது என்ற கருத்தை, “நெடுங்தகை நீ என்னை ஆட்கொள்ள யான் ஐம்புலன்கள் கொண்டு விடுந்தகையேனை விடுதி கண்டாய்” என மணிவாசகர் கூறுவது நினையத்தக்கது.

     இதனால், வாழ்வில் உளவாகும் குற்றம் குறைகட்கு முதல் உயிர்களாகிய நாம் என்பதுணராது, பிறவற்றின் மேலும் பிறவுயிர்கள் மேலும் இறைவன் மேலும் சார்த்திக் கூறும் இயல்பு ஏலாததொன்று என்பது உணரற்பாலதாம்.

     (123)