124

      124. உயர்ந்தோரைக் காணச் செல்பவர் வெறுங்கையோடு செல்வது நன்னெறியன்று எனத் தமிழர் கூறுவர். கையில் பழமும் பொன்னும் கொண்டு செல்வது மரபு. சேரன் செங்குட்டுவனைக் காணப் போந்த மலைநாட்டவர் தங்கள் நாட்டு நன்பொருள் பலவற்றைக் கொண்டு சென்றதை இளங்கோவடிகள் கூறுவதால், இவ் வழக்காறு சுமார் 2000 ஆண்டுகட்கு முன்பே தமிழகத்துத் தமிழரிடையே இருந்தமை காணப்படுகிறது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கொங்கு வேளிர், இவ் வழக்காற்றை ஓர் அருவியின் மேல் ஏற்றி,  

     “குன்றயல் பரந்த குளிர்கொள் அருவி

     மறுவில் மானவர் மலிந்த மூதூர்

     வெறிது சேறல் விழுப்ப மன்றெனக்

     கான வாழைத் தேனுறு கனியும்

     அள்ளிலைப் பலவின் முள்ளுடை யமிர்தமும்

     திரள்தாள் மாஅத்துத் தேம்படு கனியும்

     வரைதாழ் தேனொடு காய்விசை சூழ்ந்து

     மணியும் முத்தும் அணிபெற வரன்றிப்

     பணிவில் பாக்கம் பயம்கொண்டு கவரா

     நிறைந்துவந் திழிதரும்”                       (3 : 2 : 26 - 35).

 

என்று கூறுகின்றார். இங்ஙனம் கொணர்ந்து தரப்படுவனவற்றைக் காணிக்கையென்பர், அதனை ஏற்போர் தம் விருப்பப்படி செலவிடுவர்; கொடுத்தோர் பின்பு அதன்மேல் உரிமை கொண்டாடார். இந்நாளிலும் சமயத் தலைவராகவும் துறவுச் செல்வராகவும் விளங்குவோரைக் காணச் செல்வோர் இக் காணிக்கை கொண்டு சென்று கொடுப்பது மரபாகவுளது. இக் காணிக்கையை உயர்ந்தோர் திருவடிக்கண் வைத்து வணங்கிக் கொடுப்பது இயல்பாதல் பற்றி, இதனைப் பாதகாணிக்கை என்பதும் உண்டு. இந்த நன்னெறியை நினைவிற் கொண்ட வடலூர் வள்ளல் சிவபெருமானை வணங்கி முன்னின்று, “ஐயனே, என் நெஞ்சினை நின் திருவடிக்கண் காணிக்கையாக வைத்துள்ளேன்; அதனை யேன்று கொண்டு நின் விருப்பப்படி ஆளுதல் வேண்டும்” என வேண்டுகிறார்.

2294.

     வேணிக்கண் நீர்வைத்த தேவே
          மதுரை வியன்தெருவில்
     மாணிக்கம் விற்றசெம் மாணிக்க
          மேஎனை வாழ்வித்ததோர்
     ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின்
          செய்ய அடிமலர்க்குக்
     காணிக்கை ஆக்கிக்கொண் டாள்வாய்
          எனது கருத்தினையே.

உரை:

     சடையின் கண் கங்கையாற்றை வைத்துக் கொண்ட பெருமானே, மதுரை நகரின் அகன்ற வீதியின் கண் மாணிக்க மணிகளை விற்பனை செய்த சிவந்த மாணிக்கம் போன்ற பெருமானே, எனை இவ்வுலகில் குறைபடாத உடலும் நிறைந்த நலங்களும் படைத்தளித்து அடியேனை வாழச் செய்த உயர்ந்த பொன் போன்ற பெருமானே, தெள்ளிய அமுதம் போல்பவனே, நின் செந்தாமரை போலும் திருவடிக் கண் வைத்த காணிக்கைப் பொருளாக எனது நெஞ்சினைக் கொண்டு ஆள்வாயாக எ.று.

     வேணி - சடை. நீர் என்றது, கங்கையாற்றை, மண்ணகத்தை நோக்கிப் பெருகி வந்த கங்கையாற்றை முடிமேற் சடையில் தாங்கி அடக்கிக் கொண்ட சிவனது பேராற்றலை வியந்து “வேணிக்கண் நீர் வைத்த தேவே” என விளம்புகின்றார். “சலமுகத்தால் அவன் சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம், பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ” எனத் திருவாசகம் தெரிவிப்பது இங்கே காணத் தக்கது. அபிடேகத் தென்னனுக்கு முடிசெய்தல் வேண்டிச் சொக்க நாதன் வணிகனாய் மாணிக்கம் முதலிய விற்றுச் சிறப்பித்த திருவிளையாடலை நினைவிற் கொண்டு, “மதுரை வியன் தெருவில் மாணிக்கம் விற்ற செம்மாணிக்கமே” என உரைக்கின்றார். பொன் மிகவுடையார் உலகில் நல்வாழ்வு பெறுதல்போல மலமாசு கொண்ட உயிர்கள் அது நீங்கிச் சிவபோகப் பெருவாழ்வு பெறற்பொருட்டு உடல் கருவி கரணம் உலகு முதலாம் பொருள்களைப் படைத்தளித்து வாழ்விக்கும் நலம் பற்றி “எனை வாழ்வித்ததோர் அணிப்பொன்னே” என்றும், ஞானப்பேற்றால் சிவபோகம் நுகர்விக்கும் அருட்செயலை வியந்து, “தெள்ளமுதே” என்றும் புகழ்ந்து பாடுகின்றார். இங்ஙனம் பலபடப் பாராட்டிய கருத்து, உலகியற் பொருட் போகங்களை நாடி எங்கும் ஓடி இடர்ப்படும் தன் நெஞ்சினைச் சிவன்பால் நிறுத்திச் சிவப்பேற்றுக்குரிய சிந்தனைக்கண் ஒன்றுவிக்க வேண்டும் என்பது. நெஞ்சம் தனக்குரியதாய் இருக்குமளவும் அதன் செயற்பயன் தன்னையே அடைந்து சிவஞான சிவபோகங்களைப் பெற இயலாது தடுக்கின்றது. அதனைச் சிவனுக்கே உரிய பொருளாய்க் காணிக்கையாக்கிவிடின், அந் நெஞ்சினை அவனே கொண்டு செந்நெறியிற் செலுத்திச் செம்மை பெறுவிப்பன் என்ற எண்ணத்தால், “நின் செய்ய அடிமலர்க்குக் காணிக்கையாக்கிக் கொண்டு ஆள்வாய் எனது கருத்தினையே” என்று முறையிடுகின்றார்.

     இதனால், மனத்தைச் சிவனுக்கே உரிய பொருளாக்கி உய்தி பெறும் முறையை எண்ணி வள்ளலார் முறையிடுவது காண்கின்றோம்.

     (124)