125
125. ‘கலை கலைக்கே’ என்பார் அதனை வளர்த்தற்கு அரும்பாடுபடுகின்றனர். கலை கலை என எழும் வேட்கையால்,
உண்ணும் உணவுக்கும் உடுத்தும் உடைக்கும் பிறவற்றிற்கும் செய்யும் உழைப்பிலும் கலை பரவியிருப்பதறியாது
வறுமைக்கு இரையாகின்றார்கள். கலையுணர்வை அஃதில்லாத செல்வர்பால் காட்டி அவரது இரக்கப் பண்பைச்
சார்பாகக் கொண்டு வாழ முயல்கின்றனர். கலையுணர்வின் பயன் மக்கட்பண்பை இனிது வளர்க்கும்
ஏற்றமுடையதாக வேண்டும். கலைக்கே கலை என்ற கருத்தால் பண்பாடு பயக்கும் திறமிழந்த கலைவாணர்
செல்வரிடம் சென்று, ‘ஐய, யாம் உடுத்தற்குக் கலை தருக; உணவுக்கு நெல் தருக; எமது வேண்டுகோளைப்
புறக்கணிக்காமல் அருளுக’ என முறையிடுகின்றனர். இந்த நிலை ஒழிக என வள்ளலார் முறையிடுகின்றார்.
2295. மாகலை வாணர் பிறன்பால்
எமக்கும் மனைக்கும்கட்ட
நீகலை தாஒரு மேகலை
தாஉண நென்மலைதா
போகலை யாஎனப் பின்தொடர்
வார்அவர் போல்மனனீ
ஏகலை ஈகலர் ஏகம்ப
வாண ரிடஞ்செல்கவே.
உரை: கலையே பெரிது என்ற கருத்தால் அதனையே வளர்த்து வாழும் கலைவாணர் செல்வமுடைய பிறனிடம் சென்று ஆடவராகிய எமக்கு உடையாகிய கலையும், பெண்டிர்க்குச் சீலையும் அதன்மேல் உடுக்கும் மேகலையும் உணவுக்கு நெல்லும் தருக என வேண்டுவர்; அச் செல்வன் அருளி நோக்காது புறக்கணிப்பானாயின், ஒன்றும் கொடாது போகவேண்டா, ஐயா எனப் பின் தொடர்ந்து செல்வர்; ஆகவே மனமே, அவ்வாறே செல்லற்க; சென்றாலும் அவர் ஈகுவாரல்லர்; ஏகம்பவாணராகிய சிவனிடம் செல்க; அவர் வேண்டுவது ஈகுவர் எ.று.
கலை, கலைக்கே என்ற கருத்தால் அதன் பயப்பாடு நாடாது நுண்ணிய கூறுகளாக வகுத்தும் விரித்தும் ஆராய்ந்துரைப்பவர் “மாகலைவாணர்”. கலைவாணர் தமது கலையுணர்வை நாடிப் பெருக்கும்போது, செல்வம் ஈட்டும் செயலிடைத் திகழும் நண்ணிய நலம் காணாது கை விடுதலின், வறியராகின்றனர். வறுமைத் துயரைப் போக்கற்குச் செல்வர் உள்ளத்தில் கலையுணர்வால் அருட்பண்பை எழுப்பினால் அன்றி அவர்தாம் அரிது முயன்று ஈட்டிய செல்வத்தைத் தர ஒருப்படார். கலை, மக்கட் பண்பை மாண்புறுத்தலைப் பயனாகக் கொண்டது; அதன் பொருட்டுக் கலை வேண்டுவது என்று நினையாது மருண்டமையால், செல்வரை நாடிய போதும் அவரது அருட்பண்பைத் தூண்டும் திறமின்மையின், வாய் திறந்து நாகூசாது “எமக்குக் கட்ட கலைதா; எம்மனைக்குக் கெட்ட மேகலைதா” என்றும், உணவுக்கா “நென்மலைதா” என்றும் இரக்கின்றார். கலைக்கே கலை என்ற கருத்தில் வளர்ந்த கலைப்புலமை அருட்பண்பை எழுப்பும் திறமின்மையின் செயலற்றொழிதலின், செல்வர் இரப்புரையைப் பொருளாக மதியாது அவ்விடத்தினின்றும் நீங்குகின்றனர்; அது கண்டு வருத்தம் மிக்கு, ஒன்றும் கொடாது “போகல் ஐயா” என்று சொல்லிக்கொண்டே பின்தொடர்கின்றார்கள் என வருந்திக் கூறுகிறார், அடிகளார். அது மானமிலார் செயலாதலால் அதனைச் செய்தலாகாது என மனத்துக்கு அறிவுறுத்துவாராய், “மனன் நீ ஏகலை” என உரைத்து, நீ அடி பணிந்து இரந்து சென்றாலும், கலைப்புலமை கருத்தில் அருட்பண்பை வளர்க்காமையால் அச்செல்வர் ஈயமாட்டார் என்றற்கு “ஈகலர்” என அறிவிக்கின்றார். மாகலைவாணர், கலைப்பயனை நாடாது கலை கலைக்கே என்பது கை துறந்து, கலைப்புலமை மக்கட் பண்புக்கு மாண்புதரும் ஞானச்செயல், செம்பொருட்பணி என்று தெளிவு பெறுவார் உளராயின், அவர்கள் கச்சி மாநகரில் கோயில் கொண்டருளும் ஏகம்பவாணரிடம் செல்க; அவர் கலைப்புலமையின் நலம் கண்டு வேண்டுவன அருளுவர் என்பாராய், “ஏகம்பவாணரிடம் செல்க” என அருளுகின்றார்.
இதனால், கலைப்புலமை நலம் உணர்ந்து அதனைப் பெருக்கி வாழ்பவர் சிவனைப் பரவுக; அவன் எல்லா நலங்களையும் தந்துதவுவன் என அறிவுறுத்துவது பயன் என்பது அறிக. (125)
|