129
129. ஓய்வு சிறிதுமின்றி உருண்டோடும் பம்பரம் முதலியன போலச் சுழன்றலையும் நெஞ்சின் இயல்பை
எண்ணிய வள்ளலார் இச்சுழற்சிக்குக் காரணம் யாது என நோக்குகின்றார். உடலின் அகத்தே எண்ணிறந்த
நுண்ணிய அணுக்களும், அவற்றால் ஆகிய கருவிகளும் ஓய்வின்றி அசைந்தவண்ணம் இருப்பதும், அவற்றின்
செயல்கள் ஒழுங்காக நடைபெறுவதும், உண்ணும் உணவு உடுக்கும் உடை இருக்கும் இடம், உட்கொள்ளும்
காற்று, மேற்படும் ஒளிவகை ஆகியவற்றால் சில போதுகளில் ஊறுபட்டு நோயுறுவதும் உணர்ந்து உயிரறிவுக்கு
அறிவிப்பதும், நோய் தீர்தல் வேண்டி அதற்குரிய முயற்சியில் செலுத்துவதும் நெஞ்சின் தொழில்
காரணமாதல் தெரிகிறது; புறத்தே காணப்படும் உலகின் அருவும் உருவுமாகிய பொருள்களின் காட்சிகளும்
அவற்றின் கண் எய்தும் மாற்றங்களும் உயிர் அறிந்து உலகியல் வாழ்வை நடத்த வேண்டியிருத்தலால்,
அதன் பொருட்டு உலகியற் பொருள்களைக் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் அறிதல்
வேண்டி, பொறிவாயிலாகப் புலங்களின் மேற்சென்று திரிவது நெஞ்சின் இன்றியமையாப் பணியாகிறது.
கண் முதலிய பொறிவாயிலாகக் கண்டு கொண்டவற்றைத் தெரிந்து ஆய்ந்து தெளிந்து சிந்தித்துச் செய்யத்
தகுவனவற்றைத் தேர்ந்து கைகால் முதலிய கருவிகளால் உயிரறிவைச் செயலின்கண் ஈடுபடுத்துகிறது.
இதனை நன்கு எண்ணிய மேனாட்டறிஞர் ஒருவர், “வாழ்க்கை நலம்படுதற்கேற்ற கருவிகளைப் படைத்தளித்துதவும்
கருவி நெஞ்சின் மிக்கது இல்லை” என வுரைக்கின்றார்.
இம் மனம் அலமரல்
குறைந்து தெளிவுடன் செயல்படுமிடத்து நன்மையும் இன்பமும், மாறிச் சுழன்று திரியுங்கால் தீமையும்
துன்பமும் விளைகின்றன. இந் நிலையில் இன்பம் நெடிது நுகரப்படினும் அதனைச் சுருக்கிக் காட்டுவதும்,
துன்ப நுகர்ச்சி சிறிதாயினும் அதனைப் பெருக்கிக் காட்டுவதும் நெஞ்சின் இயல்பாக இருக்கின்றன.
ஒரு கால் தனக்கு அடங்கியும் ஒருகால் தன்னை அடிமைப்படுத்தும் இயலுவதாகிய நெஞ்சுக்கு இத் தன்மைகள்
ஏன் எப்படி யுண்டாகின்றன என்பதை எண்ணினால்உண்மை
புலனாவது மிகமிக அருமையாகவுளது. துன்பங்கள் மிக்கு அடர்ப்பதற்கு நிலையின்றியலையும் இயல்பினால்
மனமே காரணம் என்று எண்ணியும், அதன் தன்மைகளை ஆய்ந்தறிவதின் அருமை கருதியும், அதனை அளித்த
முதல்வனிடம் முறையிடுவதே தக்கதென நினைக்கின்றார் வடலூர் வள்ளல். ஒருவன் கீழ் தொழில் புரிபவன்,
தொழிற்கென வழங்கிய கருவி செவ்விதாகாவிடின், முதல்வன்பால் தெரிவித்து அதன் தீமையால் தொழில்
ஊறுபடுவதை யுரைப்பன். அந் நெறிபற்றி, “இறைவனே, நான் வாழ்தல் வேண்டி எனக்கு அளித்துள்ள நெஞ்சு
செவ்விதாகாது, நான் வாழ்தல் வேண்டி எனக்கு அளித்துள்ள நெஞ்சு செவ்விதாகாது தீமை செய்யும்
கருவியாகவுளது” என முறையிடுகின்றார்.
2299. என்மேற் பிழையிலை யானென்செய்
கேன்என் இடத்திருந்தென்
சொன்மேற் கொளாதெனை இன்மேல்
துரும்பெனச் சுற்றுநெஞ்சத்
தின்மேற் பிழையது புன்மேற்
பனியெனச் செய்தொழிக்க
நின்மேற் பரம்விடை தன்மேற்கொண்
டன்பர்முன் நிற்பவனே.
உரை: அன்பர் காணுமாறு எருதின்மேல் தோன்றி நின்று அருள் புரியும் பெருமானே, என்பாற் காணப்படும் பிழைக்குக் காரணம் யான் அல்ல, என் நெஞ்சின் பிழைகள்; புன்னுனியிற் பனித்துளி போலப் போக்குவது நின் பாரமாகும் எ.று.
என் உயிரின் நீ அளித்த தொன்றாய் உள்ள மனம் என்ற கருவியால் உளதாகும் பிழை என்று மொழிகின்றாராதலால், எடுத்த எடுப்பில் “என்மேற் பிழையிலை” என்கின்றார். கருவி பிழைபடின் அதனைத் திருத்திச் செய்துகொள்வது கருவியைக் கையாளுவோன் கடமையன்றோ? அதனைச் செய்யாமை பிழையாம் எனின், அக்கருவி என் கண் முதலிய பொறிகட்கும் அறிவுக்கும் புலனாகாத நுண்மையுடையதாதலால், யான் செய்தற்கு ஆகா நிலைமைத் தாகவுளது என்பாராய், “யான் என் செய்கேன்” என மொழிகின்றார். அஃது எங்கே எப்படியுளது எனின், என்னிடத்தே என்போல உயிருடையது போலவும் உணர்வுடை போலவும், போவதும்வருவதும் போலவும் இருக்கிறது. பிழையால் துன்பம் தோன்றிச் சுடுவது காட்டி இன்சொற் கூறினும் வன்சொற்களால் இடிப்பினும் கேளாது தன்னிச்சையே பற்றிச் சுழன்று உழல்கிறது என விளக்கலுற்று, என் இடத்திருந்து “என் சொல் மேற்கொள்ளாது” என விண்ணப்பிக்கின்றார். அதன் செயலால் வரும் துன்பத்தை அதுதானே அடையப் போகிறது? அதற்கு வேறாகிய நீ வருந்த வேண்டாவே எனின், நாற்சுவர்க்குட்பட்ட இல்லின் தரையில் மாசுற்றுக் கிடக்கும்சிறுதுரும்பு காற்று உட்புகுந்து சுழற்றச் சுழன்று அலைவதுபோல என் உயிரறிவு இவ்வுடற்குள் அகப்பட்டு அலைக்கப்படுகிறதற்கு, நெஞ்சின் சுழற்சி காரணமாவது காண் என்று நேராகவுரைக்காமல் சுருங்கிய சொற்களால் “இல் மேல் துரும்பு எனச் சுற்றும் நெஞ்சம்” என்றும், அதனால் பிழைகட்குக் காரணம் நெஞ்சே என்பது நிலை பெறுகிறது என யாப்புறுத்தற்குத் “துரும்பெனச் சுற்றும் நெஞ்சத்தின் மேல் பிழை” யுளதாகிறது என்று இசைக்கின்றார்.
இனி, இப் பிழைபற்றி நெஞ்சினை ஒழித்துவிடலாமோ எனின், அதனை யொழிக்கின் உயிர் தனக்குற்ற பிறப்பின் நற்பெரும் பயனை எய்துதற்கு நலமும் நயமும் அமைந்த கருவி வேறு இல்லையாம்; அதனால் நெஞ்சினை ஒழிக்காமல் அதனால் உண்டாகும் பிழையை ஒழிப்பது நின் பொறுப்பு என இறைவன்பால் முறையிட்டு, “புல்மேல் பனி எனச் செய்து ஒழிக்க; ஒழிப்பது நின் பரம்” என மொழிகின்றார். பிழைகள் பலவாய்த் திரண்டு மலையெனக் குவிந்து கிடக்கின்றன; உடனடியாக, ஒழித்தலும் கூடாது; ஆதலால், மலைபோலுள்ள பிழையைப் பனித்துளி யெனச் சுருக்கிப் போக்குதல் வேண்டும் என வழி கூறுவார்போல “புன்மேற் பனி எனச் செய்து ஒழிக்க” என வுரைக்கின்றார்.
உண்மையுழைப்பின் வடிவமாக விளங்குவது விடையாகிய எருது; ஒளிவு மறைவு இன்றி யுண்மையுடன் உழைப்பவருள்ளம் மெய்யுணர்வு நிறைந்து அறத்தின் உருவாய்த் திகழ்வது; அவர் நினைந்தவுடன் நினைவின்கண் எருதின்மேல் இவர்ந்து வருவதைத் திருத்தொண்டர் வரலாறு தெளிய வுணர்த்துவது பற்றி, “விடை மேற்கொண்டு அன்பர் முன்னிற்பவனே” என மொழிந்தருள்கின்றார்.
இதனால் எப்போதும் சுழலுகின்ற தன்மையால் நிலையா நிலைமையுற்றுப் பிழை பல செய்யும் நெஞ்சின் பிழையைச் சுருக்கிப் போக்கி எனது பிழையின்மை நோக்கி அருள்புரிதல் வேண்டுமென முறையிட்டு வேண்டுவது பயனாதல் காண்க. (129)
|