130

       130. அவரவர் வினைக்கேற்ப மக்கள் பிறவியிலேயே கீழ்மையும் மேன்மையும் எய்துவர். உறுப்புக் குறையுடன் உயிர்நிலையிலும், ஒரு குறையுமின்றி ஒளிரும் உடற்பொலிவுடன் கீழ் நிலையிலும் பிறப்பதுண்டு. இரு நிலையினரும் துன்பமும் மதிப்பின்மையும் எய்தி வருந்துவர். பிறந்த பின் எல்லா வாய்ப்புக்களும் குறைவற நிறைந்த உயிர்குடியில் ஒள்ளிய சூழ்நிலையில் வளர்வோர் சிற்றினச்சேர்க்கையால் சீர்மையிழந்து சிறுமை உறுவதும், உணவுக்கும் உடைக்கும் உறையுளுக்கும் வாய்ப்பின்றிச் சாலைக்கரையிலும் சாக்கடை யேரத்திலும் சந்துபொந்துகளிலும் வாழும் தாழ்ந்த குடியில் வறுமைத்துயர்க்குள் ஆழ்ந்த கூட்டத்திடைத் தோன்றி, அன்பு, நாண், ஒப்பரவு, கண்ணோட்டம், வாய்மையாகிய ஐவகைப் பண்பு அமைந்த சால்புடையராய் நன்மக்கள் மதிக்க வாழ்பவரும் உண்டு. எனினும், உடலளவில் பிறப்புநிலையில் இவ்வேறுபாடுகள் உண்டாகின்றனவேயன்றி, உயிரளவில் உணர்வு நெறியில் வேறுபாடு இல்லை என்பது உளநூல் ஆராய்ச்சியாளர் கண்ட உண்மையாகும். பிறப்பு வேறுபாடு நோக்காமல் ஒத்த கல்வியும் உயரிய ஒழுக்க வுணர்வும் நல்கியவிடத்து, மக்கள் அனைவரும் ஓரளவு உயர்குணமுடையராவர் என்பது அறிஞர் பலரும் நன்கறிந்த செய்தி. எத்துணையும் பேதமுறாது யாவரையும் ஒப்பக் கருதும் மனப்பண்பாடு மக்களினம் தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகள் கழிந்தும் இன்னும் உருவாகவில்லை. நிறவேறுபாடும் பிறப்பு வேறுபாடும் நோக்கி மண்ணில் வாழ்வாங்கு வாழ உரிமை வழங்க மறுக்கும் அரசுகளும் மக்களும் இருந்து வருவது யாவரும் அறிந்ததொன்று. நீர் இன்றி அமையாது உலகியல் என்பர்; நீர்க்குரிய பண்பை மக்களுலகு தனக்கு இன்றியமையாது என எண்ணுகிறதில்லை. தன்னைத் தாங்கும் நிலமட்டத்தில் மேடு பள்ளங்கள் எண்ணிறந்தன இருப்பினும், அவற்றை மறுத்துச் சமநிலையையே காட்டுவது நீர்க்கடலின் நேரிய பண்பு. பல்லாண்டு பல்லாண்டுக் காலமாக அந்த நீரைக் கண்டும் உண்டும் பயன்கொண்டும் வாழும் மக்களினத்துக்குச் சமன் செய்து தாங்கும் மனப்பான்மை இன்னமும் எய்தவில்லை. இந் நாளில் தலைவர் எனப்படும் சான்றோர் சிலர் சமநிலைச் சமுதாய அமைப்பைப்பற்றி நெஞ்சில் நினைக்கின்றனர். தமிழகத்தில் தொல்காப்பியர் திருவள்ளுவர் முதலிய சான்றோரை யுள்ளிட்ட பெரு மக்கள் காலமுதல் இரண்டாயிரம் ஆண்டுகளாக இக் கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. சுருதி மிருதிகளின் பெயரால் பிறப்பில் வேறுபாடு புகுந்து தீண்டுதல் தீண்டாமை என்ற பொய்யுணர்வுகளைப் புகுத்தி மக்களினத்தை வேற்று நாய்வரவு கண்டதும் மேல் வீழ்ந்து வெருட்டும் நாயின மாக்கிவிட்டது. அதனால் மக்களினத்தின் செய்தொழிலில் உயர்வு தாழ்வு நுழைந்து உழவு வாணிகம் முதலிய தொழில்களின் உயர்வைத் தாழ்வுபடுத்தி, மீளா வறுமைக்கு முடி சூட்டித் தீயொழுக்கத்துக்குக் காப்பளித்துக் குற்றங்களாகிய குடிகளிடையே நோயும் துன்பமும் நிலைபெறச் செய்துவிட்டன. இவற்றின் விளைவால் அரசியல் அறமன்றங்களில் நாயும் பேயும் குரங்கும் கூகையும் மக்களுருவில் தோன்றிக் குரைத்தலும் குழறுதலும் செய்கின்றன; அரசு நிலையிலேயே பண்பும் பயனும் இதுவாயின் சமுதாய நிலை எவ்வகைத்தாம்? அரசினை நடத்தும் மன்றங்கள் சமுதாயமாகிய வயலிடை வளர்ந்த பைங்கூழ்ப் பயனன்றோ? பல கூறுவானேன்? சமுதாயத்தின் ஆணிவேர் குடும்பம்; குடும்பங்கள் மக்கட் பயிர் வளரும் பாத்திகள்; ஆணும் பெண்ணும் அதன்கண் வளரும் பயிர்கள். இப்பயிரில் விளைந்தவை நாயும் பேயுமாகத் தோன்றியுள்ளன வெனின், பயிர்கள் முளையிலே எத்துணைக் குற்றங்கள் நிறைந்துள்ளன என்பதை அவரவர் நெஞ்சுதான் நினைத்து நோக்க வேண்டும். இந் நிலையை முன்கூட்டியே நோக்கிய வடலூர் வள்ளல் குடும்ப வாழ்வில் மக்களிடயே காணப்படும் குற்றங்களைப் பார்க்கின்றார். இறைவனிடம் பரிந்துரைக்கின்றார். பிறர்பால் இக்குற்றங்கள் உள்ளன என்றல் பெருந்தகைமை யன்றாதலின் அவற்றைத் தம் குற்றமாக ஏற்கின்றார். பிறருடைய பெருவாழ்வு கண்டு இன்புறாமை, மெய்ந்நெறி யறியாமை, பொய்மை, புலால் விரும்பல், சிற்றின்ப நுகர்ச்சி மிகுதியாகிய குற்றங்களைக் கைவிடாக் கொடுமை யுடையேன் என்பது கண்டு எளியேனைக் கைவிடலாகாது என முறையிடுகின்றார். அருள் புரிந்து ஒளிநெறி காட்டி உய்தியருள்க என வேண்டுகிறார்.

2300.

     மைவிட்டி டாமணி கண்டாநின்
          தன்னை வழுத்தும் என்னை
     நெய்விட்டி டாஉண்டி போல்இன்பி
          லான்மெய்ந் நெறியறியான்
     பொய்விட்டி டான்வெம் புலைவிட்டி
          டான்மயல் போகமெல்லாம்
     கைவிட்டி டான்எனக் கைவிட்டி
          டேல்வந்து காத்தருளே.

உரை:

     மணி கண்டா, இன்பு இலான் மெய்ந்நெறி அறியான், பொய்யன், புலையன் எனக் கண்டு என்னைக் கைவிடல் செய்யாமல் காத்தருள்க எ.று.

     மைவிட்டிடாமணி - நீலமணி . கண்டன் - கழுத்தையுடையவன். வழுத்துதல் - வழிபடுதல். நெய்யிலா வுண்டி இன்பச்சுவை இலதாம்; “நெய்யிலா உண்டி பாழ்” என்பர் சான்றோர். இன்புறும் பண்பு இல்லாதவன் என்றற்கு “இன்பிலான்” என்று உரைக்கின்றார். இனிமையும் நன்மையும் கண்டவிடத்து இன்புறுவது இயற்கைப் பண்பு; பிறர்பால் நலம் பலவும் எய்தக் கண்டு இன்புறுவது தலையாய நல்லறப் பண்பு. இதனை, 'முதித பாவனை' எனப் பௌத்தர்கள் கூறுவர் (மணி. 30 ; 256). நல்லதன் நன்மையும், உயர்ந்ததன் உயர்வும், உள்ளதன் உண்மையும் இவ்வாறே தீயதன் தீமையும், தாழ்ந்ததன் தாழ்வும், இல்லதன் இன்மையும் உள்ளவாறு உணர்தல் மெய்ந்நெறி; மாறிக் காண்பது பொய்ந்நெறியும் தீ நெறியுமாகும். மெய்ந்நெறி நாடாது மெய்ம்மையும் தீமையும் பொருந்திய நெறி மேற்கொள்ளாமை விளங்க “மெய்ந்நெறி” அறியான் என்று உரைக்கின்றார். அறிவின் பயன் மெய்ந்நெறியறிந்து மேற்கோடல்; மேற் கொள்ளாமை பற்றி “மெய்ந்நெறி” அறியான் என இசைக்கின்றார். உயிர், அறிவு வடிவிற்றாதலால் உயிருடையார் அனைவரும் அறிவுடையவரே; ஆயினும் அவ்வறிவு தனக்குரிய மெய்ம்மை அறிவதைச் செய்யாமை தோன்ற மெய்ந்நெறி அறியான் என உரைக்கின்றார். அஃதாவது மெய்ந்நெறி அறிவு இல்லாதவனல்லன்; உடையவனாயினும் அதனை மெய்ந்நெறிக் கண் செலுத்தி அறிகிறான் இல்லை என்பது கருத்து. ஒருவனுடைய நினைவிலும் சொல்லிலும் அமைவன மெய்யும் பொய்யும் என இரண்டல்லது வேறில்லை. ஒளியில் வழி இருள் உளதாவது போல், மெய்யில்வழிப் பொய் இடம் பெறுதலால், மெய்யறியாவிடத்துப் பொய் அமைவதுபற்றிப் “பொய் விட்டிரான்” என்று புகல்கின்றார். மக்கள் உண்ணும் உணவுப் பொருள் காய்கறி யுணவும் ஊனுணவும் என இருவகைப்படும். சில நாடுகளில் ஊனுணவல்லது பிற கிடைப்பதில்லை. சில நாடுகளில் இரண்டும் கிடைக்கும். இரண்டும் கிடைக்காத நாட்டில் உயிரினம் வாழ்வதில்லை. இரண்டும் கிடைக்கும். நாட்டில் வாழ்பவர்க்குப் புலால் உணவு வேண்டாத ஒன்று; அவ்வுணவு அது கிடைக்கும் நாட்டவர் உணர்வைக் கொலைத்தொழிலில் ஈடுபடுத்தும் என அறிஞர் கண்டுள்ளனர். “படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன் உடல் சுவையுண்டார் மனம்” எனத் திருவள்ளுவர் எடுத்துரைக்கின்றார். பிறிதொன்றின் உடல் (ஊன்) சுவை யுண்ட மனம் நன்று ஊக்காது எனவே, தீது புரியும் என்பது தானே விளங்கும். உடல் வளமும் உருநலமும் ஒருங்குடைய பிறவுயிர்களைக் காணின், புலால் உண்போர் மனம் அவற்றின் அழகிலும் வனப்பிலும் ஈடுபட்டு இன்புறாது அதன் ஊர் சுவையில் வேட்கையுற்றுக் கொன்று உண்டற்கு வேண்டுவன நினைந்து செயற்படுவது நாளும் மக்களிடையே காணப்படுகிறது. இதுகண்டே திருவள்ளுவர், பிறவற்றின் உடல் சுவையுண்டார் மனம் அவற்றை வாழவிடுவதாகிய நன்று ஊக்காது என உரைத்தருளினார். உலகுயிர்கட்கு இடமாகிய உடம்பு பிறிதோர் உடம்பினின்று தோன்றுவதாகலின் ஒன்றன் உடல் வளர்ச்சிக்குப் பிறிதோர் உடல் உணவாவது இயற்கை யறமாகிறது. ஓரறிவுயிர்களாகிய நெல் முதலியவற்றிற்கு நெல்லே உடல்; காய்த்து உணவான நெல் கோதுமை முதலியவற்றிற்கும் நெல்லே உடல்; காய்த்து உணவான நெல் கோதுமை முதலியவற்றிற்கும், கனிந்து உணவான பழவகைகள் தாவரங்களாகிய இவற்றிற்கும் பிற உயிர்வகைகட்கும் விளைவின்கண் வேறுபாடு உண்டு. விதை ஒன்றிலிருந்து மிகப்பலவாய் விளைவது தாவரங்களின் தனிப்பண்பு. பிறவற்றுள் சிலவாய் விளைவனவும், ஓரிரண்டாய் விளைவனவும் உண்டு. மிக்க அளவில் விளைவுப்பன்மை உளதாவதன் நோக்கம் ஒன்று மிகப்பலவாய் விளைவதன் நோக்கம் அவற்றையுண்டு பிறவுடல்கள் ஆக்கம் பெறுதற்கென அறிஞர் கண்டனர். ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் ஈறாக உயிரினங்களைத் தொல்காப்பியர் முதலிய தமிழ்ச்சான்றோர் வகை செய்தது, அவ்வவற்றின் உடற்கூறு பற்றியே; விளைவின் குறைவு நெறிபற்றியே உடற்கூறுகள் ஈரறிவு மூவறிவு முதலாக உளவாயின. ஓரறிவுயிர்களின் விளைவுப் பண்மையை நோக்கின் ஆறறிவுயிரின் தொகையினும் எண்ணிறந்த அளவில் பெருகித் தோன்றும். அவற்றை உண்டு உடல் ஓம்புதலால் உலகுயிர் வாழ்க்கைக்குக் கேடில்லை என்று கண்டே நுண்புலச் சான்றோர் நெல் முதலிய காய்கறியுணவை வற்புறுத்தினர்; தாவரவுணவு பெருகவுள்ள நாட்டவர் பிறவுயிர்களின் உடலாகிய ஊனுணவு நாடுதல் அருள் நெறிக்கு மாறானது எனக்கண்டு அதனைப் புலால் உணவு என இகழ்ந்து மறுத்தனர். செல்வம் பெரிதுடைய ஒருவன், எளியோன் ஒருவனது சிறு செல்வத்தைக் கவர்ந்து கொள்வது அறமாகாது என்னும் அறவோர், எண்ணுநிலைக் கெட்டாத உணவுப் பொருளை நல்கும் தாவரப்பிறவிகள் இருக்க, அவற்றினும் குறைவுடைய பிறவிகளை யுண்டல் அறமாகாது என்று கண்டனர். அதனைக் கருத்துட் கொண்டே “செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்” எனத் திருவள்ளுவர் தெளிவித்துரைத்தார். தாவரவுணவே காய்கறியுணவே விளையாத நாட்டவர்க்கு வேண்டப்படும் ஊனுணவு, காய்கறியுணவு மிகைப்படக் கிடைக்கும் நாட்டவர்க்கு வேண்டப்படாமையை நுனித்துணரும் சான்றோரை, “செயிரின் தலைப்பிரிந்த காட்சியார்” என்று திருக்குறள் குறிக்கிறது. காய்கறியுண்போரும் ஊனுணவுண்போரும் என்ற இருதிறத்தோரும் கலந்தபோது, அவர் வாழ்ந்த நிலத்து விளைவுப் பன்மை நோக்கிக் கொள்ளுவதும் தள்ளுவதும் செய்யும் நல்லறிவு தோன்றிக், காய்கறியுணவே கோடற்குரிய தென்ற உணர்வு பிறந்தது; ஒருபால், ஊனுணவே மிகவுண்டு பழகிய பழக்கம் எழுந்து அதனையே வற்புறுத்திற்று. இவ்வுணவுப் போரில் திருவள்ளுவரும் திருமூலரும் ஊனுணவைப் புலால் உணவு என்று மறுத்தனர்; பின்பு சமயங்கள் இருதிறத்தார் பக்கலும் சேர்ந்தன. இவர்களைக் கண்ட திருஞானசம்பந்தர், “ஊனொடு உண்டல் நன்றென ஊனொடுண்டல் தீதென, ஆன தொண்டர் அன்பினால் பேசநின்ற தன்மை யான்” (ஆனைக்கா) எனவுரைப்பது இருதிறத்தார்க்கும் அமைதி தந்ததாயினும், காலவெள்ளத்தில் புலாலுணவு சிறந்ததன்றென்ற கொள்கை ஒருபால் நின்று நிலவுவதால், வடலூர் வள்ளல், அதனைக் குற்றமெனக் கொண்டு “வெம்புலை விட்டிடான்” என விளம்புகின்றார். பொய்யும் புலையும் கூறியவர் ஏனைய கள்ளுண்டலும் காம நுகர்ச்சியுமாகியவற்றை “மயல்போகம்” எனக் குறிக்கின்றார். திருவருள் நெறி நிற்பவர்க்கு இவை ஆகாதவை என்றற்கு “மயல் போகமெல்லாம் கை விட்டிடான்” என வுரைக்கின்றார்.

     இங்கே கூறிய குற்றமனைத்தும் மக்களிடையே காணப்படுதல் கண்ட வடலூர் வள்ளல், அவரின் வேறாகத் தம்மை நினைப்பவரல்லராதலால் தம்மேல் ஏற்றி, இவற்றைத் திருவுள்ளத்திற் கொண்டு எங்களைக் கைவிடாமல் வந்து காத்தருள்க என முறையிடுகின்றார்.

     (130)