131
131. சீகாழிப்பதியில் தோன்றிய திருஞானசம்பந்தர் சிவ
ஞானப்பால் உண்டு செந்தமிழ்ப்பாடல்களாற் சிவபெருமானைச் சிறப்பித்த திருவருள் வரலாற்றை
வடலூர் வள்ளல் மனத்தே நினைக்கின்றார். அப் பெருமான் மயிலாப்பூரில் என்புருவாகிய பெண்ணை
நன்மகளாக உருப்பெற்றெழச் செய்த வரலாற்றை நினைந்து இன்புறுகிறார். இறவாமை வேண்டித் தேவர்கள்
கூடிக் கடலைக் கடைந்து அமுதம் பெற்ற புராணச் செய்தியை எண்ணுகிறார். மலையை மத்தாகவும்
வாசுகிப் பாம்பை நாணாகவும் கொண்டு, அரும்பாடுபட்டுக் கடைந்து பெற்ற கடலமுதம் முடிவில் இறைவாமையைத்
தரவில்லை; நெடிது வாழச் செய்ததேயன்றி இறப்பைத் தவிர்க்கும் ஆற்றல் இலதாயிற்று. “விண்ணோர்
அமுதுண்டும்” செத்தே போயினர் என இளங்கோவடிகள் எடுத்துரைக்கின்றார். இத் தேவர்கள் திருஞானசம்பந்தரைக்
கண்டு அடிபணிந்திருந்தால் இறப்பைத் தவிர்த்திருக்கலாமே; இறந்து என்பாகிய பெண்ணை நல்லெழில்
நங்கையாக்கிய திருவருட் செல்வரன்றோ திருஞானசம்ப்ந்தர் என வியந்து பேசுகின்றார். நல்லெழில்
நங்கையான பூம்பாவையின் பொற்பை,
“கற்பகம் ஈன்ற செவ்விக்
காமரு பவளச் சோதிப்
பொற்றிரள் வயிரப் பத்திப்
பூந்துணர் மலர்ந்த போலும்
நற்பதம் பொலிவு காட்ட
ஞாலமும் விசும்பு மெல்லாம்
அற்புதம் எய்தத் தோன்றி
அழகினுக் கணியாய் நின்றாள்”
எனச் சேக்கிழார் பெருமான் தெரிவிக்கின்றார்.
இந்த அருள் நலம் வள்ளலார் உள்ளத்தைக் கொள்ளை கொண்டமையின், அதனை வியந்தும், தேவர்களின்
தெளிவின்மையை எடுத்துக் காட்டியும் இன்பம் கிளரப் பாடுகின்றார்.
2301. நல்லமு தம்சிவை தான்தரக்
கொண்டுநின் நற்செவிக்குச்
சொல்ல முதந்தந்த எங்கள்
பிரான்வளஞ் சூழ்மயிலை
இல்லமு தந்திகழ் பெண்ணாக
என்பை எழுப்பியநாள்
சில்லமு தம்பெற்ற தேவரை
வானஞ் சிரித்ததன்றே.
உரை: உமையம்மை யருளிய அமுதுண்டு சிவபெருமான் திருச்செவிக்குச் சொல்லமுதம் தந்த ஞானசம்பந்தப் பெருமான் திருமயிலையில் என்பைப் பெண்ணமுதமாக எழுப்பிய நாளில், பெருங்கடலைக் கடைந்து சிறிதாகிய அமுதம் பெற்ற தேவர்களைக் கண்டு, மண்ணுலகேயன்றி வானுலகும் எள்ளிச் சிரித்தது, காண். எ.று.
பரமனைச் சிவன் என்பதனால் அவன் தேவியாகிய உமையைச் சிவை என்பது வழக்காயிற்று. அவள் தந்தது சிவம் பெருக்கும் அருள்ஞானப் பாலாதலின், அதனை நல்லமுதம் எனச் சிறப்பிக்கின்றார். ஞானத்தினும் நல்லது பிறிது இன்மைபற்றி நல்லமுதம் என்பது பொருத்தமாயிற்று. இந்த ஞானத்தை “தேவருக்கும் முனிவர்க்கும் தெரிவரிய பொருளாகும் தாவில் தனிச் சிவஞானம்” எனச் சேக்கிழாரடிகள் தெரிவிக்கின்றார். திருஞானசம்பந்தர் பாடத் தொடங்கிய முதற்பாட்டில், முதலில் சிவனுடைய தோடணிந்த திருச்செவியை விதந்து “தோடுடைய செவியன்” எனப் பாடினார். அதனை நோக்கிய சேக்கிழார் பெருமான், “பல்லுயிரும் களிகூரத் தம்பாடல் பரமர்பால், செல்லுமுறை பெறுதற்குத் திருச்செவியைச் சிறப்பித்துப் பாடினார்” என்பர். அந்த நயம் தேர்ந்து உரைக்கின்ற வள்ளலார் “நின் நற்செவிக்குச் சொல்லமுதம் தந்த (எங்கள்) பிரான்” என விளக்குகின்றார். ஞானசம்பந்தர்க்கும் தமக்கும் உள்ள தொடர்பு புலப்பட “எங்கள் பிரான்” என இசைக்கின்றார். மயிலைப் பதியை 'மயிலாப்பு' எனப் பழங்கல் வெட்டுக்கள் குறிக்கின்றன. அதன் வளமையை, “மட்டிட்ட புன்னையங்கானல்” எனவும், “ஊர்திரை வேலையுலாவும் உயர் மயிலை” எனவும், “மடலார்ந்த தெங்கின் மயிலை” எனவும், “கண்ணார் மயிலை” எனவும் ஞானசம்பந்தர் பாடுகின்றார். அதனைச் சுருக்கமாக ஒரு சொல்லால் “வளஞ்சூழ்மயிலை” என வள்ளலார் வடித்துரைக்கின்றார். என்பாக இருந்த பூம்பாவை, மனையறம் புரிதற்கொத்த மங்கையாக உருநிறைந் தெழுந்தமை விளங்க “இல்லமுதம் திகழ் பெண்ணாக என்பை எழுப்பிய நாள்” என வுரைக்கின்றார். சேக்கிழார் “பினியவிழ் மலர்மென் கூந்தல் பெண்ணமு தனையாள்” எனப் புகழ்கின்றார். தேவர்கள் கடல் கடைந்து பெற்ற அமுதம் அளவிலும் ஆற்றலிலும் சிறுமையுடையதாதல் கண்டு, அதற்காக அரிதுமுயன்ற தேவர்களை மண்ணவரும் விண்ணவரும் இகழ்ந்தனர் என்றற்குத் “தேவரை வானம் சிரித்தன்றே” எனத் தெரிவிக்கின்றார். தொக்கி நிற்கும் எச்சவும்மை வானமேயன்றி மண்ணும் சிரிக்கிறதென்று காட்டுகிறது.
மலையையும் பாம்பையும் கடலையும் கொண்டு கடைந்தெடுத்து அமுதத்துக்கில்லாத சிறப்பு சிவனது திருவருட்கிருப்பது காட்டுவது இத் திருப்பாட்டின் பயன் என உணர்க. (131)
|