133

       133. திருவெற்றியூரில் சங்கிலியாரைச் சுந்தரர் மணந்து கொண்ட செய்தி திருவாரூரில் பரவையார்க்குப் புலவியை உண்டு பண்ணியிருந்தது. சுந்தரர் திருவாரூர்க்கு வந்தபோது, பரவையார் பிணக்கமுற்றுச் சுந்தரரைத் தமது திருமனைக்கு வருதல் கூடாது என மறுத்துவிட்டதோடு, சுந்தரர் பிணக்கைப் பொருளாகக் கருதாது வருவராயின் தாம் உயிரைத் துறக்கப்போவதாகவும் தெரிவித்தார். இச் செய்தி சுந்தரர்க்கு மிக்க வருத்தத்தை விளைவித்தது. தமக்குப் பரவையாரைத் திருமணம் செய்வித்தவர் திருவாரூர் இறைவன் என்பது கொண்டு, சுந்தரர், கோயிற்குச் சென்று இறைவனைப் பணிந்து, “பெருமானே, திருவெற்றியூரில் நீரே அருள்செய்ய யான் சங்கிலியை மணந்த திறம் எல்லாம் பரவை அறிந்து, அடியேன் தன்பால் அணைந்தால் முடிவேன்” என உரைக்கின்றார். “எனக்குத் தலைவன் நீர்; யான் உமக்கு அடியனாயினேன்; நீர் எனக்குத் தாயின் நல்ல தோழரும் தம்பிரானும் ஆயினீர்; இப்பொழுது அடியேன் அறிவு இழந்து அயர்கின்றேன்; இவ்விரவே சென்று பரவையின் புலவி தீர்த்தருளும்” என வேண்டிப் பரவினார். அடியார் வேண்டிற்றே வேண்டுபவர் சிவபெருமான்; அதனால், அவர் சுந்தரரை நோக்கி, “துன்பம் ஒழிக; யாம் உனக்கு ஒரு தூதனாய்ப் பரவை மனைக்குச் சென்று புலவிதீர்த்து வருகின்றோம்” என்று சொல்லிப் பரவை மனைக்குச் சென்று தகுவன பேசினார். பரவையாரும் தெளிவுற்று, “சுவாமி, தங்கள் செய்ய பாதம் வருந்த இரவின்கண் அன்பர்க்காக அங்கொடு இங்கு உழல்வீராகி எளிவருவீரானால், யான் இசையாது என் செய்ய வல்லேன்” என்று உரைத்தார். பின்பு சுந்தரர் பரவை மனைக்குச் செல்ல, அவரும் அன்பும் பரிவும் சிறக்க அவரை வரவேற்றார். இருவரும் இறைவன் திருவருளால், “ஒருவருள் ஒருவர் மேவும் நிலைமையில் உயிர் ஒன்றானார்.” இந் நிகழ்ச்சியை நினைந்து, இறைவன் திருவருளையும் வியந்து பரவுகின்றார் வடலூர் வள்ளல். சுந்தரருடைய இந்தத் திருவருள் வாழ்வு இறைவனது திருவருளின் இயல்பை உலகறியச்செய்ததைச் சிந்திக்கின்றார். இதனால் சுந்தரர்க்கு இவ்வுலகு என்ன கைம்மாறு செய்ய வல்லதாம் என வியந்து பாடுகின்றார். இப் பாட்டை இறைவனையே முன்னிலைப்படுத்து வள்ளலார் பாடியருளுகின்றார்.

2303.

     சடையவ நீமுன் தடுத்தாண்ட
          நம்பிக்குச் சற்றெனினும்
     கடையவ னேன்செயுங் கைம்மா
          றறிந்திலன் கால்வருந்தி
     நடையுற நின்னைப் பரவைதன்
          பாங்கர் நடத்திஅன்பர்
     இடைவரும் உன்றன் இரக்கத்தைத்
          தான்வெளி யிட்டதற்கே.

உரை:

     திருமுடியிற் சடையுடைய பெருமானே, நீ முன்பு வெண்ணெய் நல்லூரில் தடுத்தாட்கொண்ட நம்பியாரூரர்க்கு யான் என்ன கைம்மாறு செய்வேன்? எதற்காக எனின், நின்னைப் பரவையார் பால் தூது நடப்பித்து, அன்பர்பால் நின் திருவுள்ளத்திற் பெருகியிருக்கும் இரக்கத்தை உலகறிய வெளிப்படுத்தினா ராதலால் எ.று.

     கங்கையும் பிறையும் தாங்கி உலகிற்கு அருள் வழங்கும் இறைவனது பெருநலத்தைக் காட்டுதலால், அதனை நினைந்து, “சடையவ” எனப் புகழ்கின்றார். பெற்றோர் குறித்த பெண்ணை மணந்து, ஏனோர்போல உலகியற்கு அடிமையாகச் சமைந்த நம்பியாரூரரைத் தடுத்துத் தமக்கே ஆளாகச் செய்துகொண்டமை நினைந்து கூறுதலின், “நீ முன் தடுத்தாண்ட நம்பி” என நவில்கிறார். நம்பியாரூராரின் தனிச்சிறப்பு தடுத்தாட்கொண்டதனால் இனிது விளங்குகிறது. எனினும் ஆட்கொள்ளப்பட்ட அவரது செயலால் பெருமானாகிய உனது எளிமை உலகறியத் தெரிந்தது. அதுபற்றி அவர்க்குக் கைம்மாறு செய்வது கடனாகிறது. அவர் செயலின் பெருமையையும் கைம்மாறு செய்யக் கருதும் அடியேனது சிறுமையையும் சீர்தூக்குங்கால் எனது நிலையும் செயலும் மிகவும் கடையாயவை என்றற்கு, “சற்றெனினும் கடையவனேன் செய்யும் கைம்மாறு” என்றும், கைம்மாறு யாதாகலாம் என நினைத்தவிடத்து ஒன்றும் புலனாகாமை விளங்கக் “கைம்மாறு அறிந்திலன்” என்றும் கூறுகின்றார். கைம்மாறு யாதானும் ஆகுக; எதற்காகக் கைம்மாறு நினைக்கப்படுகிறது என்று எழும் வினாவுக்கு விடை கூறலுறும் வள்ளற்பெருமான், சுந்தரர் செயலின் அருமையைப் புலப்படுத்துகிறார். ஏயர் கோன் கலிக்காமர் முதலியோர் பரவையார் மனைக்குச் சிவனை சுந்தரர் தூது செலுத்தியது சீர்மையுடையதன்று என எண்ணி வருந்தியுள்ளனர். ஆனால், நம் வள்ளற்பெருமான், அச் செயல் சிவபெருமானுடைய அருணலத்தை வெளிப்படுத்தியது என மகிழ்கின்றார். பரவையார் மனைக்குச் சுந்தரர் நின்னைச் செல்ல வுய்த்தது, நினது பெருந்தன்மையை நோக்க உலகியற்கு ஒத்ததன்றாயினும், அருள் வழி நின்று ஒழுகிய சுந்தரர்க்கு ஒவ்வாததாகத் தோன்றவில்லை; அதனை நன்கு எண்ணியே தூது செலுத்திய திறத்தை, “கால் வருந்தி நடையுறப் பரவை தன் பாங்கர் நடத்தி” என விளக்கி யுரைக்கின்றார். இவ்வாறு இறைவனைத் தூதுவிடுத்த செயல் உலகிற்குப் பெரியதோர் உண்மையை வெளிப்படுத்திற்று. தன்பால் அன்பு செய்யும் அடியவர்பால் இறைவன் பேரருள் செய்பவன்; அவர்கட்கு நலம் உண்டாதல் வேண்டி எத்தனைச் சிறு பணியையும் செய்யப் பின்னிடான்; தன்னடியே நினைந்து உருகும் அன்பர்பால் அவனுக்கு உள்ள அன்பு பெரிது என்பது இதனால் வெளியாகியது என்பாராய், “அன்பர் இடைவரும் உன்றன் இரக்கத்தைத் தான் வெளியிட்டதற்கே” என விளம்புகிறார். இரக்கத்தை வெளியிட்டதற்கு யான் செய்யும் கைம்மாறு அறிந்திலேன்; அதற்கும் நினது அருளறிவு இன்றியமையாதது என்பது இப் பாட்டினால் நாம் அறிய விளங்குகிறது.

     (133)