134

      134. பாண்டி மன்னன் வேண்டுகோட் கிசைந்து குதிரை வாங்குதற்குச் சென்ற வாதவூரடிகள், திருப்பெருந்துறையில் சிவஞானியாக மாறிச் சிவபிரான் திருக்கோயில் திருப்பணியில் குதிரைக்கெனக் கொண்டு சென்ற பொன்னைச் செலவிட்டதனால், அவர் பொருட்டுச் சிவபெருமான் நரிகளைப் பரியாக்கித் தான் ஓர் குதிரைச் சேவகனாக வந்த வரலாறு நாடறிந்ததொன்று. “அரியொடு பிரமற் களவறி யொண்ணான், நரியைக் குதிரையாக்கிய நன்மையும்” எனவும், “மதுரைப் பெருநன் மாநகர் இருந்து குதிரைச் சேவனாகிய கொள்கையும்” எனப் பலவகையாக மணிவாசகரே பல திருப்பாட்டுக்களில் குறிக்கின்றார்.

 

     “பெற்றி பிறர்க்கரிய பெம்மான் பெருந்துறையான்

           கொற்றக் குதிரையின் மேல் வந்தருளித் தன்னடியார்

     குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டிச்

           சுற்றிய சுற்ற தொடர் வறுப்பான்”

 

என்ற திருப்பாட்டில் குதிரைமேல் வந்த கருத்தையும் விளக்குகின்றார். நரிகளைக் குதிரையாக்கிக் கொணர்ந்த சிவன், தானும் ஒரு நரிக் குதிரையில் தான் வந்தானோ என்பார் ஐயம்தீர, வேதங்களைக் குதிரையாக்கி அதன்மேல் இவர்ந்து வந்தார் எனப் புராணம் கூறுகிறது. இவ் வரலாற்றைச் சிந்திக்கின்றார் வடலூர் வள்ளல். இறைவன் குதிரைச் சேவகனாகி வந்தபோது கண்டவர் அவரது கண்கொள்ளாப் பேரழகை வியந்து பரவினர். மகளிர், இறைவன்,

 

     “புரவியின் மேல் வரப் புந்தி

           கொளப்பட்ட பூங்கொடியார்

     மரவியல் மேற்கொண்டு தம்மையும்

           தாம் அறியார் மறந்தே”                       (பாண்டிப்)

 

என்ற வாதவூரரே ஓதுகின்றார். குதிரைச் சேவகனாகிய கோலம் வடலூர் வள்ளலின் திருவுள்ளத்தைச் சிந்தனையில் ஆழ்த்துகிறது. அத் திருக்கோலத்தைக் காண்டல் வேண்டுமென்னும் வேட்கையெழுந்து விசும்புவிக்கின்றது. அந்த அழகு திகழும் குதிரைமேல் வரும் கோலத்தைக் காட்டியருளுமாறு வேண்டுகின்றார்.

2304.

     திருவாத வூரெம் பெருமான்
          பொருட்டன்று தென்னன்முன்னே
     வெருவாத வைதிகப் பாய்பரி
          மேற்கொண்டு மேவிநின்ற
     ஒருவாத கோலத் தொருவாஅக்
          கோலத்தை உள்குளிர்ந்தே
     கருவாத நீங்கிடக் காட்டுகண்
          டாய்என் கனவினிலே.

உரை:

     திருவாதவூரராகிய எங்கள் பெருமான் பொருட்டுப் பாண்டியன்முன் வைதிகப் பரியின் மேலிவர்ந்து வந்த நின் திருக்கோலத்தை என் கருவாதம் நீங்குமாறு கனவின்கண் எனக்கும் காட்டுக. எ.று.

     மணிவாசகர்க்குத் திருவாதவூரர் என்று பெயருண்டு; அதுவும் பாண்டி நாட்டு வாதவூரின் பெயர் அடிப்படையில் தோன்றியது. அதனால், “திருவாதவூர் எம்பெருமான்” என்று பாடுகின்றார். குதிரை வாங்குதற்கென்று வேந்தன் தந்த பொன்னைத் திருப்பெருந்துறைக் கோயில் திருப்பணியிற் போக்கிய காரணம்பற்றிக் குதிரைச் சேவகனாய்க் குதிரைத் திரளுடன் சிவபெருமான் எழுந்தருளிய திறத்தைத் “திருவாதவூர் எம்பெருமான் பொருட்டு” என்றும், பொன்னுக்குரிய பாண்டியன் கண்காணக் குதிரைச் சேவகனாக வந்ததை நினைந்து கூறலின் “தென்னன் முன்னே” என்றும் உரைக்கின்றார். கரிய சிறிய நிழலைக் காணினும் வெருவும் இயல்புடையது குதிரை; சிவபிரான் இவர்ந்து வந்த குதிரை, “வேதமாகிய குதிரை” யாதல் பற்றி, “வெருவா வைதிகப் பாய்பரி” என விளம்புகிறார். இதனைப் பரஞ்சோதி முனிவர், “அண்டகோடிகள் அனைத்துமோர் பிண்டமா அடுக்கி, உண்ட நீரதாம் முதுகின்மேல் உபநிடதக் கலனை, கொண்ட வாலிய வைதிகப் புரவி மேற்கொண்டான்” என்று கூறுகின்றார். குதிரைமேல் தோன்றிய கோலம் சிவபெருமானை விட்டு என்றும் நீங்காமல் நிலைபெற்ற கோலம்; அதனை “ஒருவாத கோலம்” எனச் சிறப்பிக்கின்றார். ஒருவன் - ஒப்புயர்வற்ற பெருமான், இது “ஒருவா” என விளியேற்றது. குதிரைச் சேவகனாகிய கோலத்தைக் காண விழையும் காரணத்தை, “கருவாதம் நீங்கிட” எனக் கட்டுரைக்கின்றார். கருவாதம் - பிறவித் தொடர்பு. அதனைப் புறக்கண்களால் காண்டல் அரிது; கனவிடை அறிவுக் கண்களால் காண்பது நேரிதாதலின், “என் கனவினிலே காட்டுக” என வேண்டுகிறார். கண்டாய்; முன்னிலையிசை.

     திருவருளாற் காட்டினாலன்றி மக்கள் காண்பதில்லை என்பது பற்றி, இவ்வாறு முறையிடுகின்றார் என அறிக.

     (134)