135

       135. திருவைந்தெழுத்தை ஓதுவது பாவமாகிய பெருங்கடலினின்று கரையேறும் வழி எனச் சான்றோர் கூறுவர். அதனை எடுத்தோதித் தம்மையும் அக் கடலினின்றும் கரையேற்ற வேண்டுமென அடிகளார் முறையிடுகின்றார்.

 

2305.

     சீர்தரு நாவுக் கரையரைப்
          போலிச் சிறியனும்ஓர்
     கார்தரு மாயைச் சமணான்
          மனக்கருங் கல்லிற்கட்டிப்
     பார்தரு பாவக் கடலிடை
          வீழ்த்திடப் பட்டுழன்றே
     ஏர்தரும் ஐந்தெழுத் தோதுகின்
          றேன்கரை ஏற்றரசே.

உரை:

     அருளுரசாகிய சிவபெருமானே, நாவுக்கரசரைப் போல் மாயையாகிய சமணால் மனமாகிய கல்லொடு கட்டிப் பாவமாகிய கடலில் வீழ்த்தப்பட்டுக் கரையேறும் திறமின்றி வருந்தித் திருவைந்தெழுத்தை ஓதுகின்றேன்; என்னைக் கரையேற்றி யருள்க எ.று.

     சமயவுணர்விலும், உலகியல் வாழ்வியல் பரந்து விளங்கிய பெருஞானத்தால் புகழ்மிக்கவராதலின், திருநாவுக்கரசரை,. “சீர்தரு நாவுக்கரையர்” எனச் சிறப்பிக்கின்றார். தன்னைப் பிறன்போற் கூறுதலால், “இச் சிறியன்” எனவும், நாவுக்கரசரின் பெருமையை நோக்கத் தான் ஒன்றுக்கும் பற்றாத சிறுமையுடையனாகக் காண்கின்றாராதலால், “சிறியனும்” எனவும் உரைக்கின்றார். நாவுக்கரசர் சமணரால் கல்லிற் பிணிக்கப்பட்டனர் என்பது வரலாறு; அதனைக் கல்லினோடெனைப் பூட்டிய யமண்கையர், ஒல்லை நீர்புக நூக்க என் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக்குடியரன், நல்ல நாமம் நவிற்றி யுய்ந்தேன் அரோ” என்று பாடித் தெரிவிக்கின்றார். நாவுக்கரசருக்குச் சமணரும் கல்லும் போலத் தமக்கு மாயையும் மணமும் அமைந்ததாக உரைக்கின்றார். உலகு உடம்புகட்கு முதற்காரணமாக இருக்கும் மாயை மயக்கித் தன் வயப்படுத்தும் இயல்பிற்றாதலால், “மாயைச் சமணல்” எனப் புகல்கின்றார். மொழியும் மெய்யும் ஆகிய இரண்டையும் துணைக்கொண்டு நினைப்பு என்னும் வினைசெய்து உலக வாழ்வில் ஆழ்த்துதல்பற்றி மனத்தை “மனக் கருங்கல்” எனக் குறிக்கின்றார். பாவம் - தீவினை; வினை செய்யும் இடம் மூவுலகமாதலால், “பார்தரு பாவக் கடல்” எனப் பகர்கின்றார். உலக வாழ்வில் ஈடுபட்ட உயிர்கள் அவ் வாழ்வு தரும் இன்பத்தை நுகர்ந்து அதனையே தொடர்ந்து பெற விரும்புவது பெரும்பான்மையாதலால் “கடலிடை வீழ்த்திடப்பட்டு உழன்று” எனத் தெரிவிக்கின்றார். பிறவிக் கடலுள் அழுந்தாமல் எழச்செய்யும் ஏற்றமுடைமை தோன்ற, “ஏர்தரும் ஐந்தெழுத்து” என்று இயம்புகின்றார். “ஓதுபவரை நன்னெறிக் குய்ப்பது” எனத் திருஞானசம்பந்தர் முதலிய சான்றோர் கூறுவதால், “ஓதுகின்றேனாதலால் கரையேற்றுக” என வடலூர் வள்ளல் ஓதுகின்றார்.

     இதனால், திருவைந்தெழுத்தை ஓதுபவர் உரிமையுடன் வீடு அருளுமாறு சிவனைக் கேட்பது தெரிகிறது. திருநாவுக்கரசரும், “சிவாய நம என்று நீறணிந்தேன், தருவாய் சிவகதி” எனக் கேட்பதும் இங்கே நமக்கு ஆதரவு தருகிறது.

     (135)