136

      136. நாடும் ஊரும் நிலமும் பொன்னும் பொருளும் நல்ல உணவும் உடையும் நல்லறிவும் நன்கு அமைந்த வாழ்வுடைய நன்மக்களைக் காண்கின்றார் வள்ளற்பெருமான். எல்லாம் இனிதிருப்பினும் தூக்கமும், சோம்பலும், துக்கமும், நோயும், பிறவும் உற்று அவர்களும் துன்பத்துக்குள்ளாகின்றார்கள். அவர்கள் நினைவின்கண்ணும் மலமாசு காரணமாகத் தவறான எண்ணங்கள் தோன்றித் துன்பம் விளைவிக்கின்றன. அமைதியே குடிகொண்ட அவர்களிடத்தே அலமரலும், நிறைவுடைய உள்ளத்தில் குறைவும், இறைவன்பால் இருக்கவேண்டிய அன்பு இன்மையும் காணப்படுகின்றன. இக்குறைகள் நீங்குதற்கு திருவருள் வேண்டப்படுவதுபற்றி அது நோக்கி முறையிடுகின்றார்.

 

2306.

     தூக்கமும் சோம்பலும் துக்கமும்
          வாழ்க்கையைத் தொட்டுவரும்
     ஏக்கமும் நோயும் இடையூறும்
          மற்றை இடரும்விட்ட
     நீக்கமும் நின்மல நெஞ்சமும்
          சாந்த நிறைவும் அருள்
     ஆக்கமும் நின்பதத் தன்பும்
          தருக அருட்சிவமே.

உரை:

     அருளுருவாகிய சிவமே, தூக்கம், சோம்பல், துக்கம், ஏக்கம், நோய், இடையூறு, இடர் ஆகிய இவற்றுள் ஒன்றும் இல்லாமையும், மலமற்ற நெஞ்சமும், சாந்தத்தோடு கூடிய நிறைவும், அருளாகிய செல்வமும், நின் திருவடிக் கன்பும் தருக எ.று.

     தூக்கம் மேற்கொண்ட செயல்களைத் தாழ்த்துச் செய்யும் தன்மை தூங்காமை, கல்வித் துணிவுடைமை ஆகிய மூன்று தன்மையும் மக்கட்கு நீங்காதிருக்க வேண்டிய பண்புகள் என்று திருவள்ளுவர் வற்புறுத்துவர். இனி, தூக்கம் என்பதை உறக்கம் என்பதும் உண்டு. உறக்கம் உடல் நலத்துக்கு வேண்டுவதொன்று. தூக்கம் வினையாண்மைக்கு வேண்டாததொன்று. இரண்டினையும் வேறுபடுத்துணர்தல் நன்று. சோம்பல் - ஆக்கத்துக்குக் கேடு விளைவிக்கும் தீச்செயல். துக்கம் - வேண்டியது எய்தாவழி மனத்துயர். பௌத்தர்கள் பொருள்மேற் செல்லும் பற்றுக் காரணமாக வுண்டாவது துக்கம் என்பர். இல்லாமை, இழப்பு முதலிய ஏதுக்களால் மனத்திடை யுண்டாகும் செயலறுதி இடையூறு. ஒரி செயல் மேற்கொண்டவிடத்து அது முடிவதன்முன் இடையில் தோன்றித் தடை விளைப்பதும் கேடு செய்வதும் இடையூறு; வினையின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் உறுதலால், இடையூறு; வினையின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் உறுதலால், இடையூறு எனப்படுகிறது. இடர் - துன்பம் பயப்பது. இவையனைத்தும் வாழ்வார் வாழ்வுக்குத் தடையும் கேடும் தந்து துன்புறுத்துவது பற்றி, இவற்றின் இன்மை வாழ்வுக்கு ஊக்கம் தருதலால் “இவை விட்ட நீக்கம் தருக” என வள்ளலார் வேண்டுகிறார். மக்கட்குப் பொறிபுலன்கட்கும் வேறாய், அறிவின்வழி நின்று அறிகருவி செயற்கருவி என்ற இரண்டினையும் இயக்கும் நுண்ணிய கருவியாகிய நெஞ்சம் தன்னிலையிற் தூயதாயினும், மலத்தொடக்கினால் தீ நெறியில் சென்று இயங்கும் இயல்பு பற்றி, “நின்மல நெஞ்சம் தருக” என்று வேண்டுகின்றார். மலம் என்றது, ஆணவத்தை. விரிந்தும் பரந்தும் நுணுகியும் சென்று பொருணலம் காணும் உயிரறிவை நுணுக்கி அணுத்தன்மைத் தாக்குவதுபற்றி மலம் ஆணவம் எனப்படுகிறது என்று சைவ நூல்கள் உரைக்கின்றன. நிறைகுடம் துளும்பாது என்பது போல நற்பண்புகளால் நிறைந்தவழி மனத்தின்கண் அசைவும் அதிர்வும் இன்றி அமைதி குடிகொள்ளும்; அதனை வள்ளற்பெருமான் “சாந்த நிறைவு” எனக் குறிக்கின்றார். அருளாள்வார்க்கு அல்லல் எஞ்ஞான்றும் இல்லையாதல் பற்றி அருளாக்கம் என அதனை வியந்து புகழ்கின்றார். உலகியற் செல்வமும் செல்வக்குறைவால் உளதாகும் நல்குரவும் இறைவன் திருவடிக்கு அன்பு செய்யவிடாது தடுப்பனவாதலின், “நின்பதத் தன்பும் தருக” என முறையிடுகின்றார்.

     இதனால், நன்னெஞ்சமும் சாந்தப்பண்பும் அருட்செயலும் தந்து இறைவன் திருவடியை மறவாத இனிய செயன்மையும் தருமாறு வேண்டுவது காண்கிறோம்.

     (136)