137
137. மக்களுலகில் காலந்தோறும் நல்லறிஞர் தோன்றிச் செய்வனவும் தவிர்வனவும் இவையென வற்புறுத்தியுள்ளனர்.
மக்களின் வன்முறைகள் ஒருகாலத்தில் தோன்றி நிறைவுற்று நின்றொழியவில்லை. ஒவ்வொரு காலத்திலும்
அப் பெருமக்கள் தோன்றி அறிவுரைகள் பல வழங்கியவண்ணம் இருக்கின்றனர். இச் செயல் உலகில்
நடந்தவண்ணம் இருப்பது ஏன்? சங்க காலத்தில் தோன்றிய சான்றோர்களும், அக் காலத்திடையே
விளங்கிய திருவள்ளுவரும், எத்துணையோ பல அறிவுரைகள் உரைத்திருக்கின்றனர். அது மாத்திரமன்று;
அவர்கட்கு முன்பு கழிந்த காலத்திலும் சான்றோர் பலர் சால்புரைகள் தந்திருக்கின்றனர் என
அவர்களே குறித்துள்ளனர். மேலைநாடுகளில் மிகப் பழமையான காலங்களில் கிரேக்கரும் உரோமானியரும்
மேம்பட்டிருந்த காலமுண்டு. அவர்கள் வகுத்துரைத்த அறங்களையும் அறிவுரைகளையும் கண்ட மேனாட்டவர்
நிலவுலகிலேயே இத்தகைய உரைகளை யுரைத்தோர் இலர் எனப் புகழ்கின்றனர். அவ்வாறே நமது பாரத நாட்டிலும்
அக் கிரேக்க ரோமானியரிலும் நுண்ணிய கருத்துரைகள் உரைத்திருக்கின்றனர். நம் பாரத நாட்டுச்
செம்புலச் செல்வர்போல இம் மண்ணுலகில் எந்நிலத்தும் எக்காலத்தும் தோன்றியதில்லை என எடுத்தோதுகின்றார்கள்.
இவ்வாறே சீன நாட்டவரும் பிறரும் பேசுவதில் வாய் ஓய்வதில்லை.
இவ்வாறு அனாதி காலமாக அறிஞர் கூட்டம்
வற்றாத பெருநீர்ப் பெருக்குப்போல அறிவு வழங்கி வந்துள்ளனர். அத்தனையும் மக்களின மென்னும்
மன்பதைக் கடலுள் பாய்ந்துள்ளன. இவற்றால் நல்விளைவு தோன்றியதாக எண்ண முடியவில்லை. நல்விளைவு
வாய்த்தபோது நீர் பாய வேண்டாமை போல மக்களிடையே நன்மை விளைந்திருக்குமாயின் அறிவுரையாகிய
பெருக்கு இடையறவின்றித் தோன்றியிராது. தோன்றிய வண்ணம் இருத்தலால், மன்பதையுலகில் நன்மைப்
பயன் விளையவில்லை என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. பல்லாயிரமாண்டுகளாகப் பெய்த மழைநீர்
பாய்ந்தமையால் கடல்நீர் அனைத்தும் உப்பாய் விட்டது என்பது போலாது, பல்லாயிரமாண்டுகளாகச்
சான்றோர் தோன்றி வழங்கிய அறிவுரைப் பெருநீர் பாய்ந்து மக்களினம் அறவுக் கடலாக மாறவில்லை;
இன்றும் அறிவுரை தோன்றி மக்களிடையே பெருகியபடியே உளது.
மக்களிடையே பிறத்தலும் மாய்தலும்
இடையறவு படுவதில்லை; பனழயோர் கழிதலும் புதியோர் தோன்றலும் என்றும் எங்கும் நடைபெறுகின்றன.
இதனால் புதியோர்க்குப் புதிய புதிய அறிவுரை வேண்டியிருத்தலால், ஆன்றோர் தோற்றமும் அறிவுரை
வழக்கும் என்றும் வேண்டப்படுகின்றன. முத்து விளிதலும் பிறந்து வளர்தலும் இன்றி மக்களினம் ஒரு
தன்மைத்தாய் இருக்குமாயின், அனாதியாகப் பெருகி வந்த அறிவுப் பெருக்கு மக்களினத்தில் நன்மையை
விளைவித்திருக்கும். அஃது இல்லாமையால் அறிஞரும் புதியர் புதியராய்த் தோன்றி அறிவுரை வழங்கியவண்ணம்
இருப்பது நீங்கா நிலைமை பெற்றிருக்கிறது எனச் சிந்தையாளர் தெரிவிக்கின்றார்கள்.
பழையோர் அறக் கழிந்தபின்
புதியோர் மேவுதல் இல்லை; புதியோர் நிறைந்தபின் பழையோர் மறைவதில்லை. பழையோரும்
புதியோரும் கலந்தது மக்களுலகம். பழையோர் மறைவதும் புதியோர் பழையராதலும் உலகத்தியற்கை;
இங்ஙனம் முதுமையும் இளமையும், பழைமையும் புதுமையும் கலந்திருக்கும் வாழ்வில் அறிவு நிலை இடையற்றொழிதற்கிடமில்லையே;
வேறு வேறு தோன்றுதற்கும் வாய்ப்பில்லையே! இந் நிலையில் அறிவு நிறைந்து நிறைகுடம்போல் தெளிவும்
ஒளியுமுடையதாக மன்பதையுலகம் வயங்கவில்லையே என்று சிந்திப்பார் சிந்தனை மேன்மேலும் நுணுகிச்
செல்கிறது.
இனி, உலகியலுக்கென அமையும் ஒழுகலாற்று
அறங்களையும் விதிமுறைகளையும் நோக்கின் அவை காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப வேறுபடுகின்றன.
பனியுறைந்த நாட்டவருடைய வாழ்க்கை விதிமுறைகள் பல வெப்பநாட்டவர்க்கு வேண்டாதனவாகின்றன; வெப்ப
நாட்டவர்க்கமைந்தவை பிற நாட்டவர்க்கு ஏலாதவையாக உள்ளன. மேட்டில் விளைவன பள்ளப்பகுதியிலும்,
பள்ளத்தன மேட்டிலும் நன்கு விளையாமையின் உணவுவகையினும், இவ்வாறே உடைவகையிலும் விதிமுறைகள்
வேறுபடுகின்றன. எல்லார்க்கும் ஒப்பன பொதுவிதியெனவும், ஒவ்வொரு நாட்டவர்க்கும் தனிமுறையில்
அமைவன சிறப்புவிதி எனவும் வழங்குகின்றன. இங்ஙனமே வாழ்க்கைக்குரிய தொழில்செய் முறையிலும்
பொதுவிதியும் சிறப்புவிதியும் தோன்றுகின்றன. மக்களிடையிலும் ஆடவர்க்கும் மகளிர்க்கும் வேறுவேறு
விதி முறைகளும் இளையார்க்கும் முதியர்க்கும் வேறு வேறு விதிமுறைகளும் வேண்டப்படுகின்றன. மக்களினம்
பெருகப் பெருக வாழ்க்கைத் துறையிலும் தொழில்துறையிலும் புதிய புதிய வேறுபாடுகளும் மாற்றங்களும்
உண்டாகின்றன. உலகியலறிவு வளர வளரப் புதிய வாழ்வியல் வசதிகளும் வாய்ப்புக்களும் பிறந்து
மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இவற்றிற் கேற்பச் சமுதாயத்தில் ஒழுக்க நெறிகளும், அரசியலமைப்பு
நெறிமுறைகளும் அவ்வப்போது மாறியவண்ணம் இருக்கின்றன. சமயத்துறையிலும், உணர்வு வளர வளரப் பல
தெய்வ வழிபாட்டில் கருத்து வேற்றுமையும் ஒரு தெய்வ வழிபாட்டில் உள்ள ஒருமையும் தோன்றிக்
கடவுட்கொள்கையிலும் வழிபாட்டு விதிமுறைகள் வேறு வேறாகி உள்ளன; செல்வப்பெருக்கும் செல்வாக்குமுடைய
கோயில்களிலும் அவையில்லாத கோயில்களிலும் விதிமுறை வேறுபடுகிறது. இவ்வாறே சமய தத்துவ நெறிகளில்
வேறுபாடும் மாறுபாடும் தோன்றியுள்ளன. சாதியின வேறுபாடுகளால் ஒரு குலத்துக்கொரு நீதியும், நிறைவேறுபாட்டால்
ஒரு நிறத்தவர்க்கொரு நீதியும் உருக்கொண்டு நிலவுகின்றன. இங்ஙனமே நாடு மொழி வேற்றுமைகளும்,
செல்வப் பெருமை சிறுமைகளும் தொழில்வளம்வளமின்மைகளும், அரசியல் முறைகளில் பெரும்பான்மை சிறுபான்மைகளும்,
அறிவுப்பேற்றில் மக்களிடை நிலவும் அறிவு அறியாமைகளும், அறிஞருள்ளும் அறிவு வேற்றுமைக்கொத்த
காட்சிக் கொள்கை வேறுபாடுகளும் இவ்வாறே பிறவும் பலதலைப்பட்டு எண்ணிறந்த விதி விலக்குகள்
பல்குதற்கு இடமாகியுள்ளன.
இனி, விதிகளும் விலக்குகளும் தோன்றியதற்குக்
காரணம் எல்லார்க்கும் இவ்வுலகியல் வாழ்வு இனிது நடந்து இன்பம் பயத்தல் வேண்டும்; விதித்தன
செய்யா வழியும் விலக்கியன ஒழியாதவழியும் வாழ்வு துன்பமாகும். இன்பமும் துன்பமும் தோன்றியபோது
மக்களது மனநிலை அமைதி பெறுவதில்லை. இன்பத்தைப் பெருக்குதலில் ஆசையும் துன்பத்தைத் தவிர்ப்பதில்
சூழ்ச்சியும் பெருகி அலைக்கின்றன. ஆசையும் சூழ்ச்சியும், மக்களது நல்லறிவைத் தமக்கு அடிப்படுத்தி
நல்லவும் தீயவும் ஆகிய நெறிகளைப் புதுமுறையில் கண்டறிந்து படைக்கின்றன. இவை செயற்படுங்கால்
பழையவும் புதியவுமாகிய அறவினைகளும் ஒழுக்க நெறிகளும் வாழ்வியற் சமுதாயம், தொழில் வணிகம்,
சமயம், அரசு முதலிய துறைகட்கமைந்த விதிவிலக்குகள் உடைந்து தவிடு பொடியாகின்றன. வல்லோர்
வகுத்தது வாய்க்கால்; பல்லோர் வகுப்பது பண்பாடு என்பது இடம் பெற்று, உண்மை நெறி இதுவென உணர்வுக்
கெட்டாத அளவில் அதன் ஒளியைக் குறைத்து ஒடுக்கிவிட்டன. ஒளி குறைய இருள் படர்ந்து மறைப்பதுபோல,
உண்மையொளி தளரவும் பொய்ம்மையிருள் படர்ந்து பெருகி ‘வாழ்வு துன்பமே; துன்பமல்லது அதன்பால்
தொழுதகவு இல்லை‘ என்னுமாறு நிலைமை மாறிவிட்டது. வாழ்கின்ற மக்கள் செயல்புரிதற் கமைந்த
மனமும் மொழியும் மெய்யும், துன்பம் தோன்றுதற்குரிய நினைவும் சொல்லும் செய்கையும் செய்தொழுகுவதே
எங்கும் எவர்பாலும் பெருகியிருக்கிறது. மன முதலிய கருவிகள் செல்லாமையால் விளைந்த துன்பவிருட்
சூழலிற் கிடந்து மக்களுயிர் மருண்டு உழலுகிறது. இன்பவேட்கை பெருகியிருக்கிறதே யன்றி அதனைப் பெறவியலாத
மாறான நெறியில் நினைவு முதலிய செய்வது காணப்படவில்லை. இவை யனைத்தையும் நீடு நினைந்து நினைவு
பெருகிய வடலூர் வள்ளல் இத்துன்பச் சூழலினின்று உய்திபெறுதற்கு இறைவன் திருவருள் ஒளியல்லது வாழத்
துணையாவது பிறிதில்லையெனத் தெளிந்து, உள்ள நோயை ஒளியாது உரைத்தாலன்றி மருத்துவன் உண்மை
மருந்து கொடுக்க இயலாது என்பதற்கொப்ப, உலகியலில் உற்றது கூறி முறையிடுகின்றார்.
2307. பொய்வந்த வாயும் புலைவந்த
செய்கையும் புன்மையெல்லாம்
கைவந்த நெஞ்சமும் கண்டேன்
இனிநற் கனிவுடன்யான்
மெய்வந்த வாயும் விதிவந்த
செய்கையும் வீறன்பினால்
தைவந்த நெஞ்சமும் காண்பதென்
றோசெஞ் சடைக்கனியே.
உரை: சிவந்த சடையைச் சென்னியிற் கொண்டு செங்கனிபோல் திருவருள் இன்பம் தருகின்ற பெருமானே, பொய்யுரைக்கும் வாயும் புலைச் செய்கையும் புன்மைபடிந்த நெஞ்சும் கொண்டு துன்பமே விளைத்து வருந்தும் வாழ்வைக் கண்டு கொண்டேன்; இனி, உய்தி காண்பதற்கு மெய்யே மொழியும் வாயும், விதிமுறை பிறழாத செய்கையும் மெய்யன்பே கொண்ட நெஞ்சும் வேண்டும்; அவற்றைக் கொண்டு இன்பமே விளைக்கும் வாழ்வைக் காண்பது என்றோ? அருள் புரிக எ.று.
பொய் சொல்வதும் இழி செயல் புரிவதும், கீழான எண்ணங்களை நினைப்பதும் வாழ்க்கையில் துன்பத்தைத் தருவன. இவற்றை நூலோர் உரைக்கக் கேட்பதே யன்றி யானும் இவற்றைச் செய்து துன்பங்கள் எய்தப் பெற்றிருக்கிறேன். இனி, இவை மிக்க துன்பம் தந்து வாழ்வைப் பாழ்படுத்துவன என்பது ஒருவர் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, என்று வள்ளலார் உரைக்கின்றார். உள்ளத்தின் நினைவை உள்ளீடாகக் கொள்ளாமல் வாயளவாய் எழும் சொல்லுருவில் நிற்பதுபற்றிப் பொய் கூறும் வாயைப் “பொய் வந்த வாய்” எனப் புகல்கின்றார். மனதால் நினைப்பதும் வாயாற் சொல்வதும் மெய்யாற் செய்வதும் ஆகிய இம்மூன்றுமே வினைக்குரிய கருவிகளாகும். வினை நிகழ்ச்சிக்கும் இவையே யிடமாதலால் இவற்றையே வள்ளற்பெருமான் வரைந்து கூறுகின்றாராதலால், முதலிற் பொய்கூறும் வாயைக் கூறுகின்றார். மெய்யாற் செய்யப்படும் செய்கைகளில் (வினைகளில்) மிக்க துன்பம் தரும் இழிசெயலைப் புலைச் செயல் என்று இகழ்வர். அதனால் “புலைவந்த செய்கை” என்று உரைக்கின்றார். “உள்ளுவ எல்லாம் உயர்வுள்ளல்” என்பர் திருவள்ளுவர். உயர்வானவற்றை எண்ணும் நெஞ்சமும், உயர்வும் மேன்மையும் எய்துவிக்கும் நினைவுகளையே தோற்றுவிக்கும். அந் நினைவுகள் உயர்ந்த அறம் நிறைந்த சொற்களைப் பேசுவித்து, யாவரும் மதித்துப் பாராட்டும் நல்லறச் செயல்களையே செய்விக்கும்; மாறானவற்றை நினைப்பது மேன்மையை நல்காது புன்மையையே உண்டாக்கும். மேன்மை நினைவார்க்கு எய்தும் மேன்மையினும் கீழ்மை நினைபவர்க்குக் கீழ்மை மிக விரைவில் வருவதுபற்றிப் “புன்மையெல்லாம் கைவந்த நெஞ்சம்” என்று சொல்லி, இத்தகைய வாயும் மெய்யும் நெஞ்சும் உடையார் துன்புற்று வருந்தும் கொடுமையை உலகியலிற் பலகாலும் பலவிடத்தும் பல்வகையாலும் தாம் நேரிற் கண்டமை புலப்பட, 'கண்டேன்' எனத் தெளிவாகக் கூறுகின்றார் நம் வள்ளலார். மெய்யுரைப்பதால் உளதாகும் மேன்மையும் மேதக்க செயலால் விளையும் நன்மையும், நன்றே நினைப்பதால் தோன்றும் நலங்களும் நான் கண்டதில்லை; காண்பதும் அரிதாக வுள்ளமையால், கண்டு மகிழ அருளவேண்டும் என வேண்டுகிறார்; அதற்காகவே “இனி நற்கனிவுடன் யான் மெய்வந்த வாயும் விதிவந்த செய்கையும் வீறு அன்பினால் தைவந்த நெஞ்சமும் காண்பது என்றோ” எனக் கையறவுபட்டு முறையிடுகின்றார். பொய்வந்த சொற்களை கண்டோர் வாயெல்லாம் கஞலியது கண்டு உள்ளத்தில் துனியுற்று வருந்தினேன்; மெய்ம்மொழி காணின் துனி நீங்கி மனம் கனிவு பெறுவேன் என உரைப்பாராய் “நற்கனிவுடன்” என நவிற்றுகிறார். புலைவந்த செய்கைகளை அறவோர் அவ்வப்போது காணுமிடத்தெல்லாம் வேண்டாதவையை விலக்கியுள்ளனர்; நன்மையும் புகழும் தருவனவற்றையே நாடிச் செய்க என விதித்துள்ளனர். விதித்தவற்றைச் செய்வதால் நன்மை விளைவதேயன்றிப் பிற எவ்வுயிர்க்கும் தீமையுண்டாவதில்லை எனக் காண்பதால் “விதிவந்த செய்கை” என விளம்புகிறார். வாயில் மெய்ம்மையும், செய்கையில் அவ்விதியுடைமையும் பொருந்த வேண்டின் நெஞ்சில் அன்பு உயர்ந்தோங்கும்; அதனால் அதனை “வீறு அன்பு” என விதந்து கூறுகிறார். வீறு, பிறிது எதற்கும் இல்லாத அழகென்பர் நச்சினார்க்கினியார், “ஆறதேறும் சடையான் அருள்மேவ அவனியர்க்கு, வீறுதேறும் தமிழால் வழி கண்டவன்” (“சண்பை விருத். 5) என்று நம்பியாண்டார்நம்பி கூறுவது காண்க. மெய்விளங்கும் மொழியும் விதி தழுவிய செய்கையும் வீறுடைய அன்பு நெஞ்முசம் உடையாரைக் காண்பது சமுதாயத்தில் ஏலாமை பற்றி, “காண்பது என்றோ” எனக் கவலுகின்றார். இத்தகைய சமுதாயத்தைக் காண்பது அணிமையில் இல்லை என்று கருத்துப்பட வடலூர் அடிகள் கூறியது, அவர் தோன்றி ஒரு நூறு ஆண்டு கழிந்தும் தோன்றாமை அவர் கூற்றை மெய்பிக்கிறது. இது திருவருளால் உளதாக வேண்டும் என்பது பற்றியே இறைவன்பால் முறையிடுகின்றார். (137)
|