138

       138. சிவனுடைய சகளத் திருமேனியை நினைக்கின்றார். அதன் கண் கங்கையும் உமை நங்கையும் காட்சி தருகின்றார்கள். வியக்கின்றார்; அந்நிலையில் சிவபெருமானை நோக்கி இருமகளிரைக் கொண்ட நீ வேறொருத்தியைக் கொள்ள நேரின் அவளை எங்கே வைப்பாய்? என உவகைமிக உரையாடுகின்றார்.

 

2308.

     கங்கைகொண் டாய்மலர் வேணியி
          லேஅருட் கண்ணிமலை
     மங்கைகொண் டாய்இடப் பாகத்தி
          லேஐய மற்றுமொரு
     நங்கைகொண் டால்எங்கு கொண்டருள்
          வாயென்று நண்ணுமன்பர்
     சங்கைகொண் டால்அதற் கென்சொல்லு
          வாய்முக்கட் சங்கரனே.

உரை:

     மூன்று கண் கொண்ட பெருமானே, சங்கரனே, கொன்றை மலர் சூடிய சடையிலே கங்கையைக் கொண்டுள்ளாய்; அருளொழுகும் கண்களையுடைய மலைமகளான உமாதேவியை இடப்பாகத்தில் கொண்டாய்; ஐயனே, நீ மேலும் ஒரு நங்கையைக் கொள்வதாயின் எங்கே வைத்துக் கொள்வாய்? என்று நின்னை அடைந்து காணும் மெய்யன்பர் ஐயம் கொண்டு வினவுவராயின், அதற்கு யாது விடை கூறுவாய், கூறியருள்க. எ.று.

     கொன்றை மலர் சூடும் சடைமுடியாதலால், மலர் வேணி என்றதற்குக் கொன்றை மலர் சூடிய சடை என உரை கூறல் வேண்டிற்று. அமுதம் பொழியும் அருடகண்ணாள் உமாதேவி; அதனால் அவளை “அருட்கண்ணி” என உரைக்கின்றார். மலையரையன் மகளாதலின் உமையை “மலைமங்கை” எனப் பரவுகின்றார். மேலும் ஒருத்தியைக் கொள்ளான் என்பது உலகறிந்த உண்மை; எனினும், சிவனை நண்ணும் அன்பர் ஒருத்தியைக் கொண்டால் எங்கே வைப்பான் என்று ஐயுறலாம் என்றற்கு, “நண்ணும் அன்பர் சங்கை கொண்டால்” என்று சொல்லுகின்றார். அன்பர்கள் அன்புமிகுதியால் சங்கையுறலா மாதலின், “நண்ணும் அன்பர்” என்கின்றார். அன்புடையாரன்றிப் பிறர் எவரும் நண்ணார் என்றற்கு “நண்ணும் அன்பர்” என்று சிறப்பிக்கின்றார். உவகை மிகுந்தவிடத்து சான்றோர் சிலர் இவ்வாறு இறைவனோடு உரையாடிய காட்சிகள், திருநாவுக்கரசர் திருமுறைகளுலும், சேரமான் பெருமான் திருவந்தாதியிலும் காணப்படுகின்றன.

     (138)