139

        139. உலகிற் பிறந்து வாழும் மக்கள் தமக்கு இவ்வாழ்வு வந்தது ஏன் என எண்ணுவதில்லை; “வாழப் பிறந்தோம் வாழ்ந்தே தீர்வோம்” என முழங்குகின்றனர். இறைவனோடு எண்ணும் இயல்புடைய சான்றோர், “மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே” என எடுத்துரைக்கின்றார்கள். வாழ்வு ஏன்? அஃது எப்படி வந்தது? என்று நினைத்தனர். செந்நெறி மேற்கொண்டு சான்றோர் வாழ்வதால், அறிவு விளக்கமும் தூய்மையும் அடைகிறது; அதற்காவே இவ்வாழ்வு வந்தது. அது பற்றியே மணிவாசகர் ‘மக்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தான் சிவன்’ என்று அறிவுறுத்துகிறார். உடம்பொடுகூடி உலகில் வாழும் வாழ்வு மாயை என்ற நுண்ணிய ஆற்றல் வடிவாய பொருளால் ஆக்கப்பட்டது என்பர். உடலும் உலகும் மாயையால் ஆகியன; அவற்றையின்றி உயிர் அறிவு விளக்கம் பெறாது என்ற கருத்தையே மெய்கண்டதேவர், “மாயா தனு விளக்காய் மற்றுள்ளம் காணாதேல் ஆயாதாம் ஒன்றை யதுவது வாய்” என வுரைக்கின்றார். மாயையால் உண்டாகியது பற்றி, உலக வாழ்வை “மாயா விகாரம்” என்பர். “மாயா வாழ்க்கை” என மணிவாசகரும் கூறுவது காண்க. உலகில் வாழும் உயிர் வாழ்வின்கண் பெறலாகும் இன்பத்தை முடிந்த இன்பமாகக் கருதித் துன்பத்துக்குள்ளாவதுண்டு. உயிர்க்கு உடலாய் வாழ இடம்தந்த மாயை பிறவுயிர்கட்கு வேண்டும் உடம்புதந்து வளர்க்கும் பணியைச் செய்யுமாற்றால் உயிர்க்கு இன்பம் தந்து ஊக்குகிறது. அப் பணி ஓரளவு முடிந்ததும் சோர்வுற்றுத் துன்பமாகிவிடுகிறது. ஆகிவிடினும் அதுதந்த இன்ப மயக்கில் உயிர் வீழ்ந்து அதுவே முடிவாக நினைந்து கெடுவது முறையன்று என உணர்வது நன்ஞானமாகும். அந்த ஞானமெய்தினோர் சிவபரம்பொருளின் திருவடியையே சிந்திப்பர். “சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானம்” என்று சேக்கிழார் எடுத்து மொழிகின்றார். அத்தகைய சிவஞானத்தை அடியேனுக்கு அருளுக; உடலோடு கூடி உலகில் வாழ்வதாகிய நிலையை அருளி ஆட்கொண்ட நீ இனியும் அதன்கண்ணே புதைந்து கிடக்க விடலாகாது என வள்ளற்பெருமான் முறையிடுகின்றார்.

2309.

     வாட்கொண்ட கண்ணியர் மாயா
          விகார வலைபிழைத்துன்
     தாட்கொண்ட நீழலில் சார்ந்திடு
          மாறென் றனக்கருள்வாய்
     கீட்கொண்ட கோவணப் பேரழ
          காஎனைக் கேதமற
     ஆட்கொண்ட நீஇன்று வாளா
          இருப்ப தழகல்லவே.

உரை:

     பேரழகு படைத்த பெருமானே, மகளிர் ஆசை வலையிற் படாது நின் தாணிழல் சார்ந்திடுமாறு அருள் செய்க; மலக்குற்றம் அறும்பொருட்டு என்னை ஆட்கொண்ட நீ வாளா இருப்பது அழகாகாது எ.று.

     மகளிர் உடல் மக்களுயிர்க்கு வேண்டிய உடம்பு விளையும் புலம்; ஆடவர் உடல் அவ்வுடம்பு தோன்றுதற்குரிய வித்துறையும் இடம்; ஆடவர் மனத்தை யீர்த்து விதைபெற்று உடம்பு விளைவிக்கும் பொறுப்பு மகளிர் உடற்கு உண்டு. இருவர் உடலும் மாயையின் காரியம். மகளிர் உடல் ஆடவர் மனதை யீர்த்துப் பிணிக்கும் திறம் மாயையின் செயல்; அவ்வாறே மகளிர் மனதை ஈர்த்துக்கொள்ளும் திறம் ஆடவர் உடற்கும் உண்டு. இங்ஙனம் ஆடவரும் மகளிருமாகிய இருவரையும் ஒருவரையொருவர் ஈர்த்துப் பிணித்து உடம்பு தோற்றுவிக்கும் செயல் மாயா காரியமாதல் தெளிய உணர வேண்டியதொன்று. மாயா காரியமாகிய உடல், உயிர்வாழ்வு நடத்துவதற்கு வாய்த்த கருவியாய் உயிரறிவின் ஒண்கருவியாகும். இக்கருவி தரும் இன்பத்து மகிழ்தலும் துன்பத்துத் துயர்தலும் உயிரறிவின் இயல்பு. இன்பத்தைப் பெருக்குதற்கும் துன்பத்தைத் தவிர்ப்பதற்கும் உயிரறிவு முயன்றவண்ணம் இருக்கின்றது. இன்பத்தையும் துன்பத்தையும் வேறுபிரித்து நோக்காமல், இரண்டையும் ஒப்ப நோக்கி, விழைவு வெறுப்பின்றி வாழ்க்கையை நடத்தி ஞானம்பெற்றுமேலும் பிறவா வாழ்வுபெறல் வேண்டுமென்பது வாழ்க்கையின் குறிக்கோள். அதனை கைவிட்டு மாயை விளைக்கும் இன்பத்துக் கடிமையாகித் துன்புறுவது உயிரறிவின்பால் காணப்படுகிறது. அஃது உண்டாவதற்குக் காரணம் மாயையின் வயப்பட்டுழலும் உயிரறிவின் மென்மைத் தன்மை. அந்நிலையில் மகளிர் மேனிக்கண் இச்சை மிகுந்து உயிரறிவு பிறவிக்கே உரிய செயலில் ஈடுபடுகிறது. அதனினின்றும் விலகுதற்கேற்ப உயிரறிவு வன்மைபெற வேண்டும் என்பதற்காக, “வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலை பிழைத்து” என வள்ளலார் உரைக்கின்றார். “ஒருபாற் கிளவி எனைப்பாற் கண்ணும் வருவகை தானே வழக்கென மொழிப” என்ற தொல்காப்பியப்படி, இது ஏனை மகளிரக்கும் உரிய வழக்கு; அவர்களும் “ஆடவர் மாயா விகார வலைபிழைத்து” விலக வேண்டுமென முறையிடற்குரியர். உடம்பு தருபணி இனிது எளிது நடைபெறல் வேண்டி, மகளிர் மேனிக்கண் நிலவும் மாயா வீர்ப்பு மிக்கிருத்தல்பற்றி, “வாட்கொண்ட கண்ணியர் மாயா விகார வலை” என உரைக்கின்றார். உலக வுயிர்களில் ஆணும் பெண்ணுமாய்ப் பிரிந்துறையும் அனைத்திலும் பெண்ணுடம்பில் கவர்ச்சி மிக்கிருப்பது உயிர்நூல் வல்லார் நன்கு அறிவர்; உடம்பு படைக்கும் காலம் எய்துங்கால் பெண்ணுயிர் அனைத்தும் பொலிவுமிக்கு கவர்ச்சியுற்று விளங்குவது கண்கூடு. பிறவுயிர்கட்கு உடம்பு படைத்தற்கென ஆண்டில் ஒரு பாவம் இருப்பதுபோல மக்களுக்கின்மையின், மகளிர் மேனிக்கண் “மாயா விகார நிலை” எப்போதும் இருத்தல் தோன்ற, அதனை ஈங்குப் பாரித்துரைக்கின்றார். ஆடவர் மனத்தை ஈர்த்தற்கு மகளிர்க்கு மாயை தரும் கருவி ஒளிகலந்த பார்வையாதலின், அதற்குரிய கண்களை வியந்து, “வாட்கொண்ட கண்ணியர்” என மொழிகின்றார். காணப்பட்ட ஆடவன் மனத்தைப் பிணித்து ஈர்க்கும் இயைபு பற்றி, “கண்ணியர் மாயா விகார வலை” என்று இயம்புகின்றார். பார்வையால் பிணிப்புண்ணும் நிலை படைப்போன் செய்திறன்; அவன் அருள் பெற்றாலன்றி அச்செயலை வெல்வது எளிதன்று என்பது புலப்பட, “வலை பிழைத்து உன் தாட்கொண்ட நீழலில் சார்ந்திடுமாறு என்றனக்கு அருள்வாய்” என வள்ளலார் வேண்டுகின்றார். வலைப்படுதலும் பிழைத்தலும் இறைவன் திருவருளால் அமைவன என்ற கருத்தும் உள்ளுறுவது காணத்தக்கது. இறைவன் திருவருள் நிலையைத் திருவடி நீழல் என்பது பற்றி, “தாட்கொண்ட நீழல்” எனக் கூறுகின்றார். கீள் - துணியால் அமைந்த அரை ஞாண்; இடைக்கும் முழந்தாட்கும் இடையில் உடுக்கப்படும் உடையுமாம். கீள் இடையிலும் கோவணம் அரையிலும் கிடந்து அழகு செய்தலால், “கீட்கொண்ட கோவணப் பேரழகா” எனப் புகழ்கின்றார். “கீளொடு கோவணம் சார்த்திக் கேடிலா வாள்விடு நீற்றொளி மலர்ந்த மேனி” (பெரிய. பு. 370) என்று சேக்கிழார் உரைப்பது நோக்குக.

     உயிரறிவை அனாதிபற்றி மறைந்திருக்கும் மலவிருளைப் போக்கற்கென்றே உடல் கருவி யுலகு கூடிய வாழ்வு தந்து இறைவன் ஆட்கொண்டது உரைத்தலால், “எனைக் கேதமற ஆட்கொண்டநீ” என விளம்புகிறார். கேதம் அற ஆட்கொண்ட நீ அக்கேதத்தோடு பிணிப்புண்டு பிறப்பிறப்புக்கட் குள்ளாக்குவது நேரிதன்று என்பதற்காக, “இன்று வாளா இருப்பது அழகல்லவே” என முறையிடுகின்றார்.

     இதனால், வாழ்வுதந்து ஆட்கொள்ளற்குக் காரணமாயிருந்த உனது திருவருள் வாழ்வின்கண் நிலவும் மாயாவிகார வலைக்குட்பட்டு வருந்த விடலாகாது என வேண்டுவது காணலாம்.

     (139)