140

       140. மக்கள் உடம்பிற்குத் தலையே தலைமை வாய்ந்தது. உடம்பு கொண்டு மக்கள் செய்வன அறிதலும் செய்தலுமென இரண்டேயாக. அவற்றுள் அறிகருவி ஐந்தனுள் நான்கு தலையில் உள்ளனவாதல் பற்றி அஃது அறிவால் தலையாயது  என்கின்றோம். அதனால்தான் போலும், ‘இறைவன் தாளை வணங்காத் தலை பயனில்லை’ எனத் திருவள்ளுவர் உரைக்கின்றார். வள்ளலாரும் அந்நெறியே பின்பற்றுகின்றார்.

2310.

     வீட்டுத் தலைவநின் தாள்வணங்
          கார்தம் விரிதலைசும்
     மாட்டுத் தலைபட்டி மாட்டுத்
          தலைபுன் வராகத்தலை
     ஆட்டுத் தலைவெறி நாய்த்தலை
          பாம்பின் அடுந்தலைகற்
     பூட்டுத் தலைவெம் புலைத்தலை
          நாற்றப் புழுத்தலையே.

உரை:

     பிறப்பிறப்பில்லாத வீடு பேற்றுக்குத் தலைவனாகிய சிவபெருமானே, நின் திருவடிகளை வணங்காதவருடைய மயிர் விரிந்த தலையை நமது மாடுகளின் தலையாயக் கூறலாம்; கட்டுக்கடங்காமல் திரியும் பட்டிமாட்டின் தலை என்னலாம்; இழிந்த பன்றியின் தலையெனச் சொல்லலாம்; ஆட்டின் தலையென்றும் வெறிகொண்ட நாயின் தலையென்றும் பேசலாம்; வண்டி நுகத்தில் மாட்டின் கழுத்தைப் பிணிக்கும் பூட்டுத் தலை என்றும், அழுக்கேறித் தீ நாற்றம் நாறும் புலைத்தலை என்றும், புழுமலிந்து தவழும் புண்ணுடைத் தலை என்றும் இகழலாம். எ.று.

     இறைவன் தாளை வணங்காத தலை பயனில்லாத தலை எனப் பொதுப்பட மொழிந்தார் திருவள்ளுவர்; பயனில்லாத தலை என்பதை விளக்கி எல்லாரும் அறிய உரைப்பது எங்ஙனம் என்பார்க்கு விடை கூறுவதுபோல, வணங்காதார் தலை எண்ணெய் முதலியவற்றால் பேணப்படாத தலை எனற்கு “விரிதலை” என உரைக்கின்றார். பேணப்படாது சிதறிக் கிடக்கும் மயிர் பரந்த தலையுடையானைத் “தலைவிரி கோலமாக உள்ளான்” என்பது வழக்கு. நாம் உணவளித்துக் காத்துப் பணி கொள்ளும் எருதையும் பசுவையும் எருமையையும் மாடு என்பது மரபு. ஒரு காலத்தில் இவையே பொன்னும் பொருளும்போலக் கருதி வழங்கினமைபற்றி இவற்றை மாடு என்பது வழக்கமாயிற்று. மாடு என்ற சொல்லுக்குப் பொருள் என்றுதான் பண்டையோர் கொண்டனர். பொன்னை 'மாடை' என்பதும் இதுபற்றியே என உணர்க. பட்டிமாடு, இராப்பொழுதுகளில் கட்டறுத்து வேலிகடந்து சென்று மேயும் மாட்டைப் பட்டி மாடு என்பர். வரம்பின்றிச் சென்று திரிபவரையும் பேசுபவரையும் 'பட்டி' என்பது தமிழ் மரபு. வடமொழியில் இப் பட்டி என்னும் சொல் உயர்ந்தோர்க்குரியதாகவும் கருதப்படுகிறது. ஆட்டுத் தலை, ஆட்டின் தலை என்றும், ஆடுதற்கென்றே அமைந்த பயனில்லாத தலை என்றும் பொருள்படும். வெறி கொண்ட நாய் யாரையும் கடிப்பதுபோல யாரையும் இகழ்ந்து பேசுவோர் தலையை “வெறிநாய்த் தலை” என இகழ்கின்றார். விடம் தாங்கியிருத்தலால் யாவர்க்கும் தீங்கு விளைப்பதுபற்றிப் “பாம்பின் அடுந்தலை” எனப் பழிக்கின்றார். மாடுகளைப் பணிகொள்ளக் கருதினார், அதன் கழுத்தை நுகத்திற் பிணிக்கும் கயிற்றுக்குப் பூட்டு என்று பெயர்; கழுத்தும் தலையும் சேர்த்து முடியிடாது மாட்டிவிடுவதுபற்றி அதனைப் பூட்டுக் கயிறு என்பது மரபாயிற்று. பருத்த முடியொடு கிடக்கும் அதன் தலையைப் பூட்டுத்தலை என்கிறார்கள். மிக்க அழுக்கேறி நீ நாற்றம் நாறும் தலையை “வெம்புலைத் தலை” என விளம்புகிறார், புண்ணுற்றுப் புழுத் தோன்றி நெளியும் தலை என வெறுத்துரைக்கின்றார்.

     இதனால், இறைவன் தாளை வணங்காத தலை இகழப்படுவது பயன் என்க.

     (140)