141

       141. அகளமாய் யாரும் அறிவரிதாய பரம்பொருளாகிய சிவன், மக்கள் உருவில் வைத்துச் சிந்தித்து வணங்கி வழிபடுமாறு கொண்ட திருவுருவைக் கொண்டு வணங்குவது, காணும் கண்ணுடையார் செய்யத் தக்க வழிபாடாகும். அதனைச் செய்யாதவருடைய கண்கள் இழிக்கப்படும் திறத்தை இப்பாட்டில் காட்டுகின்றார்.

2311.

     தெண்ணீர் முடியனைக் காணார்தங்
          கண்இருள் சேர்குருட்டுக்
     கண்ணீர் சொரிந்தகண் காசக்கண்
          புன்முலைக் கண் நகக்கண்
     புண்ணீர் ஒழுகுங் கொடுங்கண்
          பொறாமைக்கண் புன்கண் வன்கண்
     மண்ணீர்மை யுற்றகண் மாமனி
          நீத்தகண் மாலைக்கண்ணே.

உரை:

     தெளிந்த கங்கை நீரை முடியிலேயுடைய சிவன் திருவுருவைக் காண விழையாதார் கண்கள் குருட்டுக்கண், நீரிழி கண், காசக் கண், முலைக் கண், நகக் கண், புண் வைத்த கண், பொறாமைக் கண், புன்கண், வன்கண், மண்கண், மணியிழந்த கண், மாலைக்கண் என்று பல்வகையால் பழிக்கப்படும். எ.று.

     தெண்ணீர் - கங்கையாறு. குற்றம் பொருந்திய கண்களைக் குருட்டுக் கண், நீரிழி கண், மாலைக் கண், காசக்கண் என்பது வழக்கம். குருட்டுக் கண் இருளிலேயே கிடப்பதால், “இருள் சேர் குருட்டுக் கண்” எனக் குறை கூறுகின்றனர். பொருள்களை இனிது பார்க்காதபடி நீர் சூழ்ந்துகொள்ளும் கண்கள் உண்டு; அதற்குக் காரணம் கண்ணிடத்துள்ள குறை என்பர். அதனால் அதனை “நீர் சொரிந்த கண்” என வுரைக்கின்றார். நாட்டவர் அக் கண்ணைப் “புளித்த கண்” என்பர். காசக் கண், காச நோய் உற்றவர் கண்; அது கருவிழியில் வெள்ளிய பாசம் படிந்ததுபோலத் தசை வளர்ந்திருப்பது. முலையிடத்துள்ள துவாரத்தை முலைக்கண் என்பர். பால் சுரப்பதில்லாத முலை புன்முலை யாகும்; அதனால், பால் சுரவாத முலைக்கண்ணை “புன் முலைக் கண்” எனப் புகல்கின்றார். நகத்தின் அடிப்பகுதி நகக்கண் எனப்படுகிறது. உடலில் புண்கள் தோன்றும்போது, சிலவற்றுள் சிறு சிறு துவாரங்கள் தோன்றிச் சீயும் குருதியும் ஒழுக்கித் துன்பம் செய்யும்; அத்துவாரங்களையும் கண் என்பது வழக்கம். இரண்டு கண், மூன்று கண், நான்கு கண் வைத்துளது இப்புண் என வழங்குவதுண்டு. இக்கண்களைப் “புண்ணீர் ஒழுகும் கொடுங்கண்” என்பர், உள்ளே புடை வைத்துச் சேறல் இப்புண்கட்கு இயல்பாதலால், “நீர் ஒழுகும் கொடுங்கண்” எனக் கூறுகின்றார். பிறர் நலங்களைக கண்ணாற் கண்டு வருந்துகிறவர் கண்களைப் “பொறாமைக் கண்” என்பர், ஒருவன் எய்தி வருத்தும் துன்ப நிலையைப் “புன்கண்” என்பர். வன்கண், மனம் தளராத தன்மை; இதனை வன்கண்மை என்றும் குறிப்பர். மண்ணீர்மையுற்ற கண், முழவு, முரசு ஆகியவற்றில் வட்டமாய்க் கண்போல் மண்ணும் பிறவும் கொண்டு பூசப்பட்டிருப்பது; மண்கண் எனவும் மார்ச்சனை எனவும் கூறப்படும். “செவ்வரிப் பறையின் கண்ணகத் தெழுதிய குரீஇ” (நற். 58) எனச் சான்றோர் கூறுவது காண்க. மையுற்ற கண் - மை தீட்டப்பட்ட கண், மையுண் கண் என வழங்கும். கண்ணில் மணியுண்மையின் அது இல்லாது கெட்ட கண்ணை “மாமணி நீத்த கண்” எனப் பழிக்கின்றார். மாமணி - கருமணி. மாலைப் போதில் காணவியலாத கண்ணை “மாலைக் கண்” என்பர்.

     இதனால், சிவபெருமான் திருமேனி காணாத கண்ணின் பழி கூறப்பட்டமை காண்க.

     (141)