142
142. சிவனது உருக்காண விழையாத கண்களைப் பழித்த வள்ளற் பெருமான், சிவபெருமானுடைய புகழ்களைக்
கேட்க விரும்பாதவர் செவிகளை இழித்துக் கூறுகின்றார்.
2312. கண்ணுத லான்புகழ் கேளார்
செவிபொய்க் கதைஒலியும்
அண்ணுற மாதரு மைந்தருங்
கூடி அழுமொலியும்
துண்ணெனுந் தீச்சொல் ஒலியும்அவ்
வந்தகன் தூதர்கண்மொத்
துண்ணுற வாவென் றுரப்பொலி
யும்புகும் ஊன்செவியே.
உரை: இறைவனது புகழ்களைக் கேளாதவர் செவி, பிறர் கூறும் பொய்க் கதை ஒலிகளும், நெருங்கிய மகளிரும் ஆடவரும் கூடி அழும் அழுகையொலியும், திடுக்கிடச் செய்யும் தீச் சொற்களின் ஒலியும் எமதூதர் போந்து வா என உரப்பும் ஒலியும் சென்று புகும் ஊன் செவியாகும் எ.று
கண்ணுதலான் - கண்ணை நெற்றியிலே யுடைய சிவபெருமான். தெய்வங்களைப் பற்றியும் தேவர்களைப் பற்றியும் மக்களைப் பற்றியும் எண்ணிறந்த பொய்க்கதைகள் உரையாலும் பாட்டாலும் புனைந்து கூறப்படுகின்றன. இசையிலும் கூத்திலும் திரையோவியத்திலும் வைத்து இரவும் பகலும் இப் பொய்க் கதைகள் உரைக்கப்படுவதுண்டு. அவை பொய்யாயொழிதலின், கதையொலி செவிகளிற் கேட்கப்படுவது பற்றி, “பொய்க் கதை ஒலி” எனப் புகன்றுரைக்கின்றார். அண்ணுறல் - நெருங்குதல். உற்றாரும் உறவினரும் நண்பருமாய் மக்கள் இறந்த வண்ணம் இருக்கின்றனர்; அது குறித்து மனைகளில் அழுகையொலி எழுகிறது. மகளிரும் ஆடருமாய்த் தனித்தும் கூடியும் இறந்தவர் பொருட்டுக் கதறியழுகிற ஒலி செவிநிறையக் கேட்பது கொண்டு, “அண்ணுற் மாதரும் மைந்தரும் கூடி அழும் ஒலியும்” என வள்ளலார் உரைக்கின்றார். இனி, மக்களிடை யுண்டாகும் குற்றங்களும் கொண்டு போரும் பூசலும் இடக் காரணமாகின்றன. அவற்றால் ஒருவரையொருவர் மாறுபட்டு, வன்சொல்லும், கடுஞ்சொல்லும், தீச்சொல்லும் வழங்கி மனம் புண்படுவதும் புண்படுத்துவதும் செய்கின்றனர். அதனைத் “துண்ணெனும் தீச் சொல் ஒலி” என விளம்புகின்றார். இனி, இறக்கும் தருவாயில் சிலர் மிக்க துன்பத்துக்காளாகி வருந்துகின்றார்கள்; பழமையில் அவர்கள் பிறர் அறியாமற் செய்த குற்றங்கள் தோன்றி, அவர்களை ஒறுத்து வருத்தப் போகிறார்கள் என்ற அச்சம் வேறு தோன்றி அவர்கட்கு வேதனை தருகிறது. யம்படர்கள் பிறர் கண்கட்குத் தெரியாமல் வந்து அவர் உயிரைக் கவர்தற்குச் செய்யும் ஆரவாரமும் அல்லலும் அவர் செவிகளில் மாத்திரம் புகுந்து பொறுக்க மாட்டாத துன்பம் செய்வது தெரியுமாறு, “அந்தகண் தூதர்கள் மொத்துண்ணுற வா என்ற உறுப்பொலி” என விளக்குகின்றார். அவரவர் செய்த தீவினைகட்கேற்ற தண்டத்தை யமதூதர் செய்ய அழைப்பதை “மொத்துண்ணற வா” எனக் கூறிக் காட்டுகின்றார். மொத்துண்டல் - அடிபட்டும் இடிபட்டும் குத்துண்டும் மோதப்பட்டும் வருந்துதல்.
இறைவனது இனிய புகழை இன்பமுடன் கேட்டு மகிழ வேண்டிய செவிகளில் அச்சமும் அவலமும் நல்கும் தீயோசை புகுவது தீது என்பது இதனாற் பயன் எனக் கொள்க. (142)
|