143

      143. உணவுண்டு உடல் வளர்க்கும் வாய்க்கு இறைவனை வாழ்த்துவதாகிய நல்ல திரும்பணியுண்டு. “வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும், தாழ்த்தச் சென்னியும்” தலைவன் தந்துள்ளான் என்று சான்றோர் வற்புறுத்தியுள்ளனர். தாழ்த்த வேண்டிய தலை தாழாதவிடத்து எய்தும் குற்றத்தை முன்னமே மொழிந்துள்ளாராதலால், வாழ்த்தாத வாயின் குற்றத்தைப் பல சொற்களால் பழித்துக் காட்டுகின்றார். பழிக்கஞ்சியேனும் வாயுடையோர் இறைவனை வாழ்த்தி வழிபடும் நற்பணியை மேற்கொள்வர் என்பது கருத்து.

2313.

     மணிகொண்ட கண்டனை வாழ்த்தார்தம்
          வாய்த்தெரு மண்ணுண்டவாய்
     பிணிகொண்ட வாய்விடப் பிச்சுண்ட
          வாய்வரும் பேச்சற்றவாய்
     துணிகொண்ட வாயனற் சூடுண்ட
          வாய்மலஞ் சோர்ந்திழிவாய்
     குணிகொண்ட உப்பிலிக் கூழுண்ட
          வாய்எனக் கூறுபவே.

உரை:

     நீலமணி போலும் கழுத்தினையுடைய சிவபெருமானை வாழ்த்தாதவருடைய வாயை, தெருவிடை மண்ணையுண்ட வாய் என்றும், நோயும் பிணியும் பொருந்திய வாய் என்றும், விடம் பொருந்திய வாய் என்றும், பித்துறுவிக்கும் பொருளையுண்ட வாய் என்றும், பேசும் திறமில்லாத வாய் என்றும், அறுபட்ட வாய் என்றும், நெருப்பால் சூடுபட்ட வாய் என்றும், மலம் ஒழுகும் வாய் என்றும், கரிக்கும் உப்பில்லாத கூழ் உண்ட வாய் என்றும் அறிவுடையோர் பழித்துரைப்பர் எ.று.

     மணியெனப் பொதுப்படக் கூறினமையின், சிறப்புடைய நீலமணி கொள்ளப்பட்டது. கண்டம் - கழுத்து; கழுத்துடையவனைக் கண்டன் என்கின்றார். “வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்” என ஞானசம்பந்தர் கூறுவது காண்க. தெருவில் பரந்து படிந்து கிடக்கும் மண், தூயதல்லாத பொருள்பல கலந்து இழிக்கத்தக்கதாக இருத்தலால் “தெருமண்” என்றும், வாயால் உண்ணலாகாமை புலப்படத் “தெருமண் உண்ட வாய்” என்றும் இகழ்ந்து பேசுகின்றார். இதழின் அகத்தும், புறத்தும், பல்லிலும், நாவிலும் புண்ணுற்று வருத்தும் வாய் “பிணி கொண்ட வாய்” எனப்பட்டது. சிலருடைய வாய் நீர் பிறவுயிர் கட்குக் கேடு பயத்தல் உண்மையின் “விடமுண்ட வாய்” என்றும், சிலரது வாயாற் கடியுண்டவர் பித்தராய் வருந்துவதுண்டாதலால் “பிச்சுண்ட வாய்” என்றும் பேசுகின்றார். ஊமையின் வாயை “பேச்சற்ற வாய்” என்றும், அதனிடத்தே சொற்கள் இனிது தோன்றல்பற்றி “வரும் பேச்சு” என்றும் உரைக்கின்றார். வாயிதழ் நன்கு கூடாது கிழிபட்டது போல்வனவும், போர்ப் பூசல்களால் வேறு இடர்ப்பாடுகளால் துண்டுபட்டாற்போலவும் சிலருடைய வாய் பொலிவிழந்தமை காட்டற்குத் “துணி கொண்ட வாய்” எனச் சொல்லுகின்றார். வாய் வழியாக வரும் காற்றும் பொருள்களும் மலத்தின் நாற்றமுடையவாக இருப்பதுபற்றி, “மலம் போந்து இழிவாய்” என இகழ்கின்றார். குணி - கல்; இது குணில் எனவும் வழங்கும். கரிக்கும் புண்புடைய உப்புக்கல்லைக் “குணி கொண்ட உப்பு” என்றும், “உப்பில்லா பண்டம் குப்பைக்கே” என்று இழிக்கப்படுவது கண்டு, கூழேயாயினும் உப்பில்லது உண்டவிடத்து வாய் சுவையிழந்து கீழ்மையுறுவது புலப்பட “உப்பிலிக் கூழுண்ட வாய்” என்றும் கூறுகின்றார். இவ்வாறு இறைவன் புகழை ஓதி வாழ்த்தாத வாய் பல கூறுகளில் வைத்து இகழ்ந்து மக்களால் உரைக்கப்படும் நிலையை எடுத்துரைப்பாராய், “கூறுபவே” என எடுத்துக் காட்டுகின்றார்.

     (143)