144
144. உடலொடு கூடி உலகில் வாழ்வார்க்கு அமைந்த அறிவுக் கருவிகளில்
நெஞ்சம் அரியதொன்றாகும். அது கொண்டு நல்லன அல்லாதனவற்றைப் பகுத்துணர்ந்து நல்லது கோடலும்
அல்லதை விலக்குதலும் மக்களுயிர் செய்து வாழ்கிறது. அதன் செயல்வகையால் மக்களாகிய நாம் இன்பமும்
துன்பமும் எய்துகிறோம். நல்லதைக் கோடலால் இன்பமும் விலக்குதலால் துன்பமும் அடைகின்றோம்;
இவ்வாறே தீயதை விலக்காது மேற்கொண்டு துன்பத்துக்கு உள்ளாகிறோம். இத்தகைய தடுமாற்றங்கட்கு
இரைாயாகித் துன்பமே பெறும் நிலையின் நீங்கி அமைதி பெறும் சூழ்நிலையுண்டாதற்கு இறைவன் புகழை
நினைந்து பரவுதல் வேண்டும். இதனைச் செய்யாதார் நெஞ்சம் வருந்தும் திறத்தை வடலூர் அடிகள் இனிது
விளக்கிக் காட்டுகின்றார்.
2314. சகமிலை யேஎன் றுடையானை
எண்ணலர் தங்கள்நெஞ்சம்
சுகமிலை யேஉணச் சோறிலை
யேகட்டத் தூசிலையே
அகமிலை யேபொரு ளாவிலை
யேவள்ள லாரிலையே
இகமிலை யேஒன்றும் இங்கிலை
யேஎன் றிரங்கு நெஞ்சே.
உரை: சிவபெருமான் இவ்வுலகினையே தனக்கு இல்லமாக வுடையன் என்று அவனுடைய உடைமைத் தன்மையை எண்ணாத மக்களின் நெஞ்சத்தை நினைக்குமிடத்து, வாழ்விற் சுகமில்லை, உண்ணச் சோறில்லை, இடையில் உடுக்க உடையில்லை, தங்குதற்கு வீடில்லை, வேறு பொருளில்லை, கொடுக்க வள்ளன்மை யுடையவர்கள் இல்லை, இகபரம் என்ற வாழ்வே எமக்கு இங்கு இல்லை என வருந்தும் நெஞ்சம் உடையவராவர் எ.று.
சகம் - இவ்வுலகம். இறைவனாகிய சிவபரம் பொருட்கு இடம் யாதாம் என எண்ணுவார்க்கு, அவன் இவ்வுலகையே தனக்கு இல்லமாகவும், அதனைத் தனக்கு உடைமையாகவும் கொண்டவன் என்று ஞானிகளாய் உள்ளவர்கள் நன்குணர்ந்து உரைக்கின்றார்கள். அது கேட்கும் எவரும் அவ்வாறே எண்ணி வழிபடற்கு உரியவராவர்; அவரது நெஞ்சம் இன்பம் குடிகொண்டிருப்பதாகும். எண்ணாதவர் நெஞ்சம்மிகவும் வருந்துவர். மனவமைதியின்றி வருந்தும் நெஞ்சினராவர் என்றற்குச் “சுகம் இலையே” என்பர் என்று கூறுகிறார். அவர்கள் வறுமைமிக்கு “உண்ணச் சோறு இலை” என்றும், உடுக்க உடையில்லை என்பதைக் “கட்டத் தூசு இல்லை” என்றும் வருந்திக் கூறுவர். தங்குதற்கு வீடு இல்லை, தங்கினும் ஏதேனும் பெற்று உண்பதற்கு பொருளும் இல்லை என்பாராய், “அகம் இலை, பொருள் இலை” எனப் புலம்புவர். எவரேனும் கொடுக்கும் இயல்புடையவர் எங்கேனும் இருப்பாரோ என்று தேடிச் சென்றபோதும் ஒருவரும் கிடைக்காமை விளங்க, “வள்ளலார் இலையே” என ஏங்குகின்றார்கள். இவ்வாற்றால் எமக்கு இகபரம் என்ற வாழ்வு வகையே இங்கும் எங்கும் இலை என நொந்து கூறும் மனமுடையவராவது தெளிந்து, “இகமிலையே ஒன்றும் இங்கிலையே என்று இரங்கும்” நெஞ்சராவர் என இரங்குகின்றார். (144)
|