145
145. உலகில் மக்களினம் ஒருவரோடொருவர் கூடி வாழ்வது இயற்கைப் பண்பு. கூடுமிடத்து
ஒருவர்க்கொருவர் உதவி செய்வதும் இயல்பு. இவ்வுதவி கூடியவரைப் பிரியாமைப் பிணிக்கும் பெற்றிவாய்ந்தது.
எங்ஙனம் எனின், செய்த உதவி செய்யப்பட்டார் உள்ளத்தில் செய்தார்பால் அன்பு தோற்றுவிக்கிறது;
அந்த அன்பு, செய்தார் செய்யப்பட்டாராகிய இருவர் உள்ளங்களையும் பிணித்து விடுகிறது. இப்பிணிப்பு,
உதவி செய்யப்பட்டார்க்கு அதனைச் செய்தாரைப் பாராட்டி அவர் உவப்பன செய்தற்குத் தூண்டுகிறது.
இவ்வகையில் அன்பால் உதவி செய்வார்க்கு அதனைப் பெறுவோர் தம்மால் இயன்றன செய்தல் வேண்டும்
என்ற மனவுணர் வுடையராகின்றனர். செய்த உதவியைக் கடனாகக் கொண்டு திரும்பத் தருவதுநாடும்
ஒருவகை நினைவும் உதவி பெற்றோர் உள்ளத்தில் உருவாகிறது; உதவினார் கருத்துக்கு மாறாகச் செய்வது
நன்றன்றென எண்ணி அவர் விருப்புவழி நிற்கும் மனமாற்றம் ஒன்று உதவப்பட்டோர்க்கு உண்டாகிறது.
இதனை ‘ஆளாதல்’ என்றும், ‘ஆட்படுதல்’ என்றும் அறிவுடையோர் கூறுவர். இவ்வாறே ஒருவர்க்கு
உதவுவதை ஆளுதல் என்று ஆட்கொள்ளுதல் என்றும் கூறுகின்றனர்.
உலகில் வாழ்வு பெற்றவருள்
நல்லறிஞர் சிலர் தமக்கு இவ்வாழ்வு ஏன் வந்தது என எண்ணினார். இதற்கொரு காரணம் இருந்தே
தீர்தல் வேண்டும் எனக் கருதினோர் உயிரையும் உயிரின் வேறாகிய உலகப் பொருள்களையும் தனித்தனிப்
பிரித்து நோக்கினர்; உயிரின்பால் உணர்வும், ஏனையதன்பால் அஃது இல்லாமையும் கண்டு வேறுபட்ட
இவ்விரண்டையும் ஒன்று கூட்டி வாழச்செய்வது யாதாம் என எண்ணினர். உயிரே ஓர் உடம்பொடு கூடி
உலகில் வாழப் பிறந்ததோ என ஆராய்ந்தபோது, தானே உடம்பெடுப்பதாயின் எல்லா உயிரும் உறுப்புக்
குறைவின்றி அழகமைந்த உடம்பையே கொண்டிருக்கும்; அவ்வாறு இல்லாமையால், உயிரே தனக்கு இவ்வுடம்பை
ஏற்கவில்லை எனக் கண்டனர். உலகியற் பொருளை உண்டு வளரும் உடம்பு தானே உயிரைப்பற்றித்
தன்பாற் புகுத்தி கொண்டதோ என எண்ணினவர், உயிரில்லாத உடம்புக்கு உணர்வும் செயலும் இல்லாமையால்
அவ்வாறு கருதுதற்கு இடமில்லாமை அறிந்தனர். இவர்களுடைய காட்சியும் அறிவும், இவ்விரண்டினும் வேறாய்
இவற்றின் பண்பும் தொழிலும் அறியவல்லதாய் இரண்டையும் கூட்டி வாழச்செய்யும் பொருள் ஒன்று காரணமாகும்
என்று தெளிந்தனர். இரண்டின் எல்லையைக் கடந்துள்ளமைபற்றி அதனைக் கடவுள் என்றும், இரண்டினும்
கலந்து இயக்குவது கண்டு இயவுள் என்றும் குறித்தனர். உயிர்ப்பொருள் உலகப்பொருள் என்ற இரண்டிற்கும்
மேலாதலால் பரம்பொருள் என்றும் பெரும்பொருள் என்றும் மொழிந்தனர். பெரும்பொருள் என்பதை
வடவர் வடமொழியில் பிரமம் என்பர்; தென்னாட்டவர் தமிழ் மொழியில் சிவம் என்பர்.
சிவமாகிய பரம்பொருள்
உயிர்களை உடம்பொடு கூட்டி உலகில் வாழச் செய்வது ஏன் என்று எண்ணினர். உடம்பொடு கூடி உலகில்
வாழும் உயிர்த் தொடக்கத்தில் அறிவு நிரம்பாமல் இருந்து நாளாக நாளாக, உடல் வளரவளர அறிவு
விளங்கப் பெறுகிறது. கண், காது, மூக்கு முதலிய கருவிகளால் உலகைக் கண்டும், கை, வாய், கால் முதலிய
கருவிகளால் செயல் புரிந்தும் அறிவு பெருகுகிறது. உலக வாழ்வில் அறிவதும் செய்வதும் அல்லது உயிர்க்கு
வேறு செயலில்லை எனத் தெளிந்தோர், செயலும், அறிவு பெருகுதற்கு வாயில் எனக் கண்டு உயிரின்
வாழ்வு, அறிவு பெருக்கமும் விளக்கமும் பெறுவதையே காரணமாகக் கொண்டது என உணர்ந்தனர். இவ்வுணர்விற்
சிறந்தோர், அறிவின்கண் சுருக்கமும் பெருக்கமும் குறுக்கமும் விரிவும் இருப்பது கண்டு இவற்றிற்குக்
காரணம் யாது என ஆராய்ந்தனர். வாழ்நாள் பெருகப் பெருக, உயிரறிவு சுருக்கம் நீங்கிப் பெருகுவதையும்,
குறுக்கம் தேய்ந்து விரிவதையும் கண்டு, சுருக்கத்துக்கும் குறுக்கத்துக்கும் காரணமொன்று இருத்தல்
வேண்டும் என எண்ணினோர் ஒளியுருவாகிய உயிரறிவைக் குறுக்கிச் சுருக்கிப் பிணிக்கும் இருட் பிணிப்பு
காரணமாகத் தெளிந்தனர். பின்னர், வாழ்நாள் பெருகி வாழ்க்கை வளம்பெறுகையால் இருட்பிணிப்பில்
நெகிழ்ச்சியும் அறிவின் திறத்தில் வளர்ச்சியும் உண்டாதல் கண்டு, உயிர் விளக்கம் பெறுவது
காரணமாக இவ்வுலக வாழ்க்கை தோன்றியுளது; சிவபரம்பொருள் இதனைப் படைத்தளித்திருக்கிறது என்று
தெளிந்தனர். இத்தெளிவு வேறோர் ஐயத்தை எழுப்பிற்று. உயிரின் பொருட்டு உலகவாழ்வைச் சிவபரம்பொருள்
படைத்தளிப்பதற்குக் காரணம் யாது? என்ற ஐயம் அறிவுடையோர் அறிவைக் கலக்கிற்று. உலகப்பொருட்கு
வேறாய், உயிர்ப் பொருட்கு மேலாய் உள்ள பரம்பொருளாகிய சிவபெருமான் பேரறிவும் பேராற்றலும்
பேரின்பமும் திரண்ட திருவுருவினனாதலால், அறிவுநிறைந்து இன்பம் பெறுதற்குரிய உயிர், இருள் பிணிப்புற்று
அறிவுச்சுருங்கிக் குறுகிக் கிடப்பது கண்டு, அருள்கூர்ந்து உடம்பையும் உலகையும் படைத்து அதன்கண்
வாழ்வு தந்து அதனால் இருள் நீங்கி இன்பம் பெறுவிக்கின்றான் எனத் தேர்ந்து தெளிந்தார்கள்.
திருஞான சம்பந்தர் “ஞான்த்திரளாய் நின்ற பெருமான் நல்ல அடியார்மேல் ஊனத்திருளை நீக்குமதுவும்
உண்மைப் பொருள் போலும்” என அறிவுறுத்துகின்றார். இருளிற் கிடந்த உயிர், இருள் நீங்கி இன்பம்
பெறுதற்கு உலகில் வாழ்வு அருளிய நல்லுதவியைப் பெற்றது ஆளாதலும் ஆட்படுதலுமாயிற்று; இதனை
அருளியது ஆளுதலும் ஆட்கொள்ளுதலும் ஆயின. இருள் நீங்கி இன்பம் பெறுதற்கு வாழ்வளித்து ஆட்கொண்ட
வள்ளலாகிய நீ, இருளிற் கிடந்து துன்புறுமாறு செய்வதன் காரணம் யாது? அது நினது அருட்கு நேரிதன்று
என வடலூர் வள்ளல் முறையிடுகின்றார்.
2315. பொங்கரும் பேர்முலை மங்கைக்
கிடந்தந்த புத்தமுதே
செங்கருங் பேநறுந் தேனே
மதுரச் செழுங்கனியே
திங்களுங் கங்கையுஞ் சேர்ந்தொளிர்
வேணிச் சிவக்கொழுந்தே
எங்களை ஆட்கொண்டும் என்னே
துயரில் இருத்துவதே.
உரை: பழுத்த முகை போன்ற மார்பையுடைய உமை நங்கைக்குத் தன் திருமேனியில் இடப்பாகம் தந்த புதிய அமுதம் போன்றவனே, செங்கரும்பே, நறிய மணம் கமழும் தேனே, இனிய வளமிக்க கனி போன்றவனே, பிறைத் திங்களும் கங்கையாறும் சேர இருந்து வெள்ளிய ஒளி செய்யும் சடையையுடைய சிவபிரானே, உலக வாழ்க்கையைத் தந்து ஆட்கொண்ட் பின்னரும் அதற்கு இடையூறாகிய துயரத்தில் கிடந்து வருந்தச் செய்கின்றாய்; இஃது ஏனோ எ.று.
பொங்கு அரும்பு ஏர் முலை - இதழ் விரியப் பழுத்து முதிர்ந்த தாமரை அரும்பு போன்ற மார்பு. “அரும்போட்டும் முலைமடவாள் பாகந் தோன்றும்” எனத் திருநாவுக்கரசர் குறிப்பது காண்க. பெண்ணொரு கூறனாய் மனக்கண்ணில் காட்சிதரும் சிவபெருமான் திருமேனியில் அம்மையின் மார்பு எடுப்பாய்த் தோன்றுதல்பற்றி அதனைக் கிளந்து கூறுகின்றார். காணுந்தோறும் புத்தின்பம் விளைவது தேர்ந்து “புத்தமுதே” என்று புகழ்கின்றார். சிவக்காட்சியில் ஊறிப் பெருகும் அருளின்பத்தில் மூழ்கிப் பேசுதலால், செங்கரும்பும் தேனும் செழுங்கனியும் குறிக்கப்படுகின்றன. தூய ஞானவொளி பரந்து தோன்றும் அறிவு, வொளியில் மின்னிப் பொலியும் சடை தாங்கிய சிவவுருவத்தைத் தெளியக் காணுமாறு விளங்க, “ஒளிர் வேணிச் சிவக்கொழுந்தே” எனச் செப்புகின்றார். திங்களும் கங்கையும் வெண்ணிற முடையவை. இறவா இன்பம் பெறுதற் பொருட்டு வாழ்வளித்து ஆட்கொண்ட முதல்வன் துன்பத் துயரில் இருத்தி வருந்தச் செய்வது நேரிதன்று என அவன் செயலிற் குறை கண்டாற்போலக் கூறுதலால், தன் கூற்றை மறுக்காமல் ஏற்றற் பொருட்டு அமுதே, கரும்பே, தேனே, கனியே என ஆர்வ மொழிகளை அடுக்கி வழங்குகிறார். துயரில் இருத்து துன்புறும் நிலையை மாற்றி இன்பம் பெருகும் திருவருளில் இருத்தி வாழ்வித்தல் வேண்டுமென இதனால் வடலூர் வள்ளல் முறையிடுவது காணத்தக்கது. மக்களினத்துக்காகப் பரிந்து மொழிதலால் “எங்களை” எனப் பன்மையாற் கூறுகின்றார். (145)
|