146
146. திருவாரூரில் பங்குனிப்
பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். விழாக் காலத்தில் செல்வர்களின் கொடையும்
வழிபாடும் சிறந்து விளங்கும். சுந்தரர் திருவாரூரில் இருந்தருளுகையில் பங்குனி விழா நெருங்குவதாயிற்று.
விழா வருவதறிந்து பரவையார் அதற்குரிய முன்னேற்பாடுகளை முறையே செய்யலுற்றார்; எனினும்
பொருட்குறை தோன்றி அவர் மனத்தை வருத்திற்று; அதனைச் சுந்தரரிடத்தும் தெரிவித்தார்.
பொன் பெறுதற்குப் புகல் யாது எனப் புந்தியில் எண்ணிய சுந்தரர்க்குப் புகலூர் நினைவில் தோன்றிற்று.
திருப்புகலூரை யடைந்து அங்கே கொண்டருளும் சிவபெருமானைப் பாடிப் பரவினார். பகற்பொழுது கழிந்தது.
இரவு வரவும், கோயிலின் முற்றத்தில், அன்பர்கள் கொணர்ந்த செங்கற்களைப் பரப்பி அதன்மேல்
தமது பட்டாடையை விரித்து ஒரு கல்லின்மேல் தலைவைத்து உறங்கலானார். அயர்வுநீங்கத் துயின்றவர்
கண் விழித்தார். மூடிவைத்திருந்த செங்கல் உயிரிய பொன்னாய் விளங்கக் கண்டார். வியப்பும்
மகிழ்ச்சியும் மேலிட்டு இது புகலூர் இறைவன் திருவருள் எனத் தெளிந்து போற்றுவாராயினர். இதனைச்
சேக்கிழார் “வெற்றி விடையார் அருளாலே வேமண் கல்லே விரிசுடர்ச்செம், பொற்றிண் கல்லாயின
கண்டு புகலூர் இறைவர் அருள் போற்றி” வணங்கினார் என வுரைக்கின்றார். திருப்பதிகம்
பாடுங்கால், தமக்கு வேண்டியது பொன் என்ற குறிப்பறிந்து புகலூர்ப் பெருமான் அருளியது நினைவில்
நிலைபெற்றதும், சிவன்பால் ஒன்றிய சிந்தையுடன் அன்பு செய்து பணிபுரிபவர்க்கு அப்பெருமான் வேண்டுவார்
வேண்டுவதை விரும்பியளிக்கும் மேன்மை யறிந்தும், புலவர்கள் இன்றிருந்து நாளை மறைந்துபோகும்
பொய்யாய செல்வர்களைப் பாடி மனம் புண்பட்டு வருந்துகிறார்களே என்று சுந்தரர் எண்ணுகின்றார்.
புலவர்கட்காகப் பரிந்து அழகிய பதிகமொன்றைப் பாடுகின்றார். அதன் முதல் திருப்பாட்டு,
“தம்மையேபுகழ்ந் திச்சைபே
சினும்
சார்கினும்
தொண்டர் தருகிலாப்
பொய்ம்மை யாளரைப் பாடாதே யெந்தை
புகலூ
ர்பாடுமின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும்
கூறையும்
ஏத்தலாம்
இடர் கெடலுமாம்
அம்மையே சிவலோக
மாள்வதற்கு
யாதும் ஐயுற
வில்லையே”
என வருவது.
இதனைத் தொடர்ந்து திருப்பதிகமுற்றம் புலவர்கள் பிறரைப் பாடி வருந்தும் திறத்தை எடுத்தோதிப்
புகலூர்ப் பெருமானைப் பாடிப் பெறுவன பெற்று இன்புறுமாறு அறிவுறுத்தினார். இந் நிகழ்ச்சி வடலூர்
வள்ளலின் உள்ளத்தைக் கவர்ந்து கொள்கிறது.
சுந்தரர்க்குப்
பின் பல நூற்றாண்டுகள் கழிந்து போயின; நூற்றாண்டு தோறும் புலவர் பலர் தோன்றி மறைந்தனர்;
அவர் பலரும் சுந்தரர் இத் திருப்பதிகத்திற் பாடிய கருத்தை மனத்திற்கொள்ளாமல் கீழ்மக்களையும்
கயவர்களையும் பொன்னுடைமை ஒன்றே தகுதியாகக் கருதி பாடிப் பாடி நாப் புலர்ந்து கெடுகின்றார்களே,
என்னை காரணம் என எண்ணுகிறார் வடலூர் வள்ளற் பெருமான். புலவரது புலமைக்கும் அவர் பாடும் தொழிற்கும்
நல்ல தொடர்பில்லாமை அவர் மனத்தை வருத்துகிறது. பாடுகின்றார்.
2316. வில்லாப் பொன்னாங்கரங் கொண்டோய்வன்
தொண்டர் விரும்புறச்செங்
கல்லைப்பொன் னாக்கிக் கொடுத்தோய்நின்
பாதங் கருத்தில்வையார்
புல்லைப்பொன் னாக்கொள்ளும் புல்லர்கள்
பாற்சென்று பொன்னளிக்க
வல்லைப்பொன் னார்புய என்பார்
இஃதென்சொல் வாணர்களே.
உரை: பொன் மலையை வில்லாக்கிய பெருமானே, வன்தொண்டராகிய சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கித் தந்தாய்; அதனையறிந்தும் நின் பாதம் கருத்தில் கொள்ளாமல், புலவர்பாற் சென்று, “பொன்னார் புயனே” என்று சொல்லின் வாழ்நராகிப் பாவலர்கள் பாடி மனம் மடிந்து வருகிறார்களே, இதற்குக் காரணம் யாதாகலாம்? எ.று.
'பொன்னை வில்லாக் கரம் கொண்டோய்' எனற்பாலது, வில்லைப் பொன்னாக்கரம் கொண்டோய் என மாறி நிற்கின்றது. பொன்னிறமான மேருமலையை வில்லாக வளைத்துக் கையிற் கொண்டவனே என்பது பொருள். சுந்தரர்க்கு வன்றொண்டர் என்பது சிறப்புப் பெயர். இதனைத் “தன்மையினால் அடியேனைத் தாம் ஆட்கொண்ட நாள் சபைமுன், வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வு தந்தார்” என்று சுந்தரர் தாமே கூறுகின்றார். மேலும் பொன் வேண்டிய உள்ளத்துடன் திருப்புகலூர் இறைவனைப் பரவின சுந்தரர்க்கு அவர் தலையணையாக் கொண்ட செங்கல்லைப் பொன்னாக்கித் தந்த வரலாற்றை நினைந்து, “செங்கல்லைப் பொன்னாக்கிக் கொடுத்தோய்” என்று சிவபிரானைப் பாராட்டுகின்றார். சிவன் திருவடியை யல்லது பிறிது எதனையும் விரும்பாத மாண்புடைமையால் சுந்தரர்க்குச் செங்கலைப் பொன்னாக்கியது, சிவன்பால் அமைந்திருந்த அவரது அன்பை மேலும் திண்மையுறுவித்தமை விளங்க “விரும்புற” எனச் சிறப்பிக்கின்றார் வடலூர் வள்ளல். இத்தகைய இனிய அரிய நிகழ்ச்சி கண்டும் கவிபாடும் சொல்வாணர்கள் பொருள்நச்சிப் பிறரைப் பாடித் திரிவது பயனில் செயல் என்ற கருத்துடன் வடலூர் பெருமான் அவர்களை நோக்குகின்றார். அவர்கள் உள்ளத்தில் சிவபெருமானது திருவடி நினைவே யில்லை; அதனால் “நின்பாதம் கருத்தில் வையார்” என மொழிகின்றார். அவர்கள் தம் கருத்தில் நினைக்கப்படுவர், “புல்லைப் பொன்னாக் கொள்ளும் புலவர்கள்” என வுரைக்கின்றார். காய்ந்து கெடும் புல்லையும் பொன்போலுக் கருதிப் பிறர்க்கு ஈயாது இறுகப் பற்றும் அற்பர்களை இவ்வாறு குறிக்கின்றார். பயனின்றிக் கழியும் புல்லையும் பொன்னுக்கு விற்கும் புல்லியோர் என்றும் கூறலாம். இப்புல்லரை அடைந்து “பொன்மலை போல் உயர்ந்த தோளை யுடையவனே” என்று புகழ்ந்து, “பாடி வருபவர்க்கு மிக்க பொன் கொடுக்கும் வள்ளலே” என இரக்கின்றார்கள், இதனை, “பொன் அளிக்க வல்லை; பொன்னார்புய” என உரைத்துக் காட்டுகின்றார். நல்ல புலமையின்றிப் பொருளற்ற வெறுஞ்சொற்களையே கருவியாகக் கொண்டு பாடித் திரியும் பாவலரை, இங்கே “சொல்வாணர்” என இகழ்கின்றார். தூய புலமை கலந்தால்தான் பாவன்மையும் மேன்மையுறும் என வுணர்தல் வேண்டும். நாவலராயினார்க்கும் புலமையின்றியமையாதது, புலமையில்லாத பாவலரையும் நாவலரையும் சேரத்தொகுத்தே, “சொல்வாணர்” எனச் சுட்டிக் கூறியுள்ளார். பாவன்மையும் நாவன்மையும் பெற்ற இவர்கட்கும் புலமை எய்தாதொழிந்தும், சிவபெருமான் திருவடியை நினையாமை உண்டாக்கியதும் எண்ணி மருளுகின்றாராதலால் வள்ளல் பெருமான், “இஃது என்!” என வுரைக்கின்றார்.
இதனால், கற்றுப் புலமை பெறுதற்குப் பயன் சிவன் திருவடியை மறவாது கருத்தில் இருத்திப் பெறுவன பெற்று உய்யவேண்டுமென்பதாம். (146)
|