147
147. உணவு கொள்ளற்கமைந்த
சான்றோனொருவன், தன் கையில் ஏந்திய உணவைக் கண்டதும் அவனது உணர்வு ஆழ்ந்து எண்ணத் தொடங்கிற்று.
அவ்வுணர்வு தன் கைக்கு வருதற்கு எத்துணை மக்களின் உழைப்புக் கலந்திருக்கிறது என்று எண்ணத்
தலைப்பட்டான். உணவைப் பொறுமையுடன் சமைத்தவரும், சமையற்குரிய கலங்களைத் தேய்த்துத் தூய்மை
செய்தவரும், அதற்குரிய நீர் கொணர்ந்தவரும், கலங்களை அடுப்பில் வைத்து சமைத்தற்கு எரிமூட்ட
விறகு தந்தவரும் நினைவில் தோன்றினார். பின்பு அவரவர்க்குரிய கருவிகளையும் அவற்றைக் கைக்கொண்டு
ஆளுதற் கின்றியமையாத அறிவையும் உதவிய நன்மக்களை நினைந்தான். இந்த நினைவு முடிவில்
உழவரையும், வணிகரையும் காவலரையும் மனக்கண்முன் நிறுத்தியது. ஒரு பிடியுணவுக்காக நான் உலகமக்கள்
அனைவருக்கும் கடமை ப்பட்டிருக்கிறேனே, யான் இதனைக் கையேந்தி வாய்வைத்து உண்பதற்கு எண்ணிறந்த
மக்கள் உழைத்துள்ளனரே, அவர்கட்கு எவ்வாறு நன்றி செலுத்துவேன் எனக் கருத்திற் சிந்திக்கலானான்.
செய்நன்றி கொன்றார்க்கு உய்தில்லை என்பது சிந்தையில் தோன்றி, தன் உணவுக்கும் உடைக்கும்
உறையுளுக்கும் மருந்துக்கும் பிற பொருள்கட்கும் உழைத்துதவிய மக்களினத்தின் தொடர்பும், அதுகொண்டு
தான் அவரைச் சார்ந்திருக்கும் சார்பும் அவனுடைய மனவுணர்வில் தோன்றின. எண்ணங்கள் அலையலையாய்
எழுந்தன. உணவை முடித்துக்கொண்டு எழுதற்குள், உலகில் மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும்
சார்பு நிலை தெளிவாகத் தெரிந்தது. தாழ் வீழ்வார் பிறர்க்கு ஊன்று கோலாகார்; அதுபோல,
தமக்குச் சார்பு பிறரை வேண்டுபவர் தாம் பிறர்க்கு எங்ஙனம் சார்பாவார்? சார்புவேண்டும் மக்கள்
அனைவரும் சார்பாவதற்கும்த் தகுதியுடையாராகார்; சார்பாகவார் பிறரைச் சார்பாக வேண்டாத் தகுதியுடையராதல்
வேண்டும். தமக்குச் சார்பொன்றும் வேண்டாது, பிறர் அனைவர்க்கும் பிற அனைத்துக்கும்
சார்பாகும் தகுதி எல்லாம்வல்ல சிவனுக்கன்றியில்லை என்பது சான்றோர் உரைகளால் தெளிந்த
வுண்மை. சிவனொருவற்கே தன்னைச் சாரும் அனைத்தையும் தாங்கும் தனிப்பெரும் வன்மையுண்டு; இவ்வன்மை
நூல்களில் நோன்மை என்று சிறப்பிக்கப்படும். தனிப்பெரு நோன்மை சார்பாம் பொருட்குச்
சால்பு; அது சார்ந்த தனைத்தையும் தாங்கி இன்புறுத்தும் மேன்மையுடையதாகும். “சார்ந்தவர்க்
கின்பங்கள் தழைக்கும் வண்ணம் நேர்ந்தவன்” (திருவல்லம் - 5) என்று திருஞானசம்பந்தர் கூறுதலால்
உண்மைத் தகுதி சான்றது சிவமே எனத் தெளிகின்றார் வள்ளற் பெருமான். இத்தகைய சார்பாகும்
தன்மை ஓரளவு உலகில் வேந்தர்கட்குண்டு; அதுவே வேந்தர்க்குள்ள வேந்தாம் தன்மை. அதனை
முற்றவுடைய வேந்தரும் இல்லாமை கண்ட வடலூர் அடிகள் சிவன்பால் முறையிட்டுப் பாடுகின்றார். அது
வருமாறு.
2317. கூத்துடை யாய்என் னுடையாய்மூத்
தேவரும் கூறுகின்ற
ஏத்துடை யாய்அன்பர் ஏத்துடை
யாய்என்றன் எண்மைமொழிச்
சாத்துடை யாய்நின் தனக்கே
பரம்எனைத் தாங்குதற்கோர்
வேத்துடை யார்மற் றிலைஅருள்
ஈதென்றன் விண்ணப்பமே.
உரை: ஆடல் புரியும் சிவனே, என்னைத் தன்னவனாகவுடையவனே, தேவர் மூவரும் வணங்கி ஏத்துதலை யுடையவனே, அன்பர்கள் இடையறவின்றி வழிபடும் வழிபாட்டை யுடையவனே, எனது எளிய சொற்களால் தொடுக்கப்படும் பாமாலையை ஏற்பவனே, எனக்கு அருள் புரிவது உனக்கே கடன்; எளிய என்னைத் தாங்கியருளுதற்கு உரிமையும் நேர்மையும் உடையவர் உன்னைத்தவிர ஒருவரும் இல்லை; அதனால் என்னை ஆண்டருள்க; இதுவே என் விண்ணப்பம் எ.று.
பொன்னம்பலத்திலும் ஞானமாம் பேரம்பலத்திலும் ஆடல்புரியும் நிலையிலும் யாவர்க்கும் காட்சி தருவது தோன்ற “கூத்துடையாய்” எனக் கூறுகின்றார் நம் வள்ளற்பெருமான். சேக்கிழார் முதலிய தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியச் செல்வர், “அம்பலத்து ஆடுவான்” என ஆர்வத்தோடு புகழ்தல் வள்ளலார்க்கு வழிகாட்டும் அருளொளி. உடல் கருவி கரணங்களைத் தந்து உலகியல் வாழ்வு தந்து வாழ்முதலாக வயங்குமாறு புலப்படற்கு “என் உடையாய்” என வுரைக்கிறார். உருத்திரன் திருமால் அயன் என்ற மூவரும் பரவிப் புகழ்ந்துரைக்கின்றார். உருத்திரன் திருமால் அயன் என்ற மூவரும் பரவிப் புகழ்ந்துரைக்கும் உண்மைச் சிறப்புக்களை உடையதனால்பற்றி “முத்தேவரும் கூறுகின்ற ஏத்துடையாய்” என்று தாமும் ஏத்துகின்றார். இங்ஙனம் திருக்கூத்தும், ஆளுடைத் தலைமையும் மூவர் புகழும் முதன்மையும் சிவன்பால் உண்மை கூற உவந்த வடலூரடிகள் தனக்கு அருள்புரிதற்குரிய முறைமையை மொழிகின்றார். தனது தாங்கப்படும் தன்மையும் இறைவன்பால் தாங்கும் நோன்மையும் கடமையும் இருக்கும் முறையை நோக்கித் “தனக்கே பரம்” என்றும், அதற்கும் காரணம் வேந்தாம் இயல்பு பிறரிடதிதின்றி இறைவன் ஒருவன்பால் இருப்பதனால் அதனை விதந்து, “எனைத் தாங்குதற்கு ஓர் வேத்துடையார் மற்று இலை” என்றும் உரைக்கின்றார். வேத்து, வேந்து என்பதன் வலிந்த தோற்றம். வேந்தாவது, தன்னால் ஆளப்படும் உயிர் என்பதன் வலிந்த தோற்றம். வேந்தாவது, தன்னால் ஆளப்படும் உயிர்கட்குச் சார்பாய் நின்று தாங்கும் தன்மை. மன்னர்கள்பால் இப்பண்புண்மை கண்டே சான்றோர மன்னனை வேந்து என்றனர். இந் நிலையில் எனக்கு வேண்டுவன அருளி யாள்வதன்றி வேறு செயலில்லை என விண்ணப்பம் செய்வதை, “அருள்; ஈது என்றன் விண்ணப்பமே” என்று உரைக்கின்றார். இதனால் ஆளப்படுதற்குரிய என்னை ஆளுதல் இறைவன் நின் கடன் என முறையிடுவது பயன் எனவுணர்தல் வேண்டும். (147)
|