148
148. பிறர் மெய்யுழைப்பால் விளையும் பொருள் பெற்றுண்பவர் யாவராயினும், அவரைத் தொழுதூண்
வாழ்க்கையர் என்றே, உழைப்பின் உறுதியுணர்ந்த மேலோர் வகுத்துரைத்தனர், “உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்று திருவள்ளுவர் பன்னெடுங் காலத்துக்கு
முன்பே தெளிவாக உரைத்தனர். உழுது பயன் விளைப்பாரை யொழியப் பிறர் அனைவரையும் தொழுதூண்
வாழ்க்கையர் என்றல் பொதுக் கருத்தாதல் இனிது விளங்கும். உண்பொரு ளொழியப் பிற உடுப்பன,
அணிவன, காப்பன முதலிய அனைத்தையும் பெறுதற்குரிய தொழில்வகை பலவும் தொழுதூண் தொழில் வகையாகும்.
நாடு காத்தல் முதல் இசை நாடகம் ஓவியம் சிற்பம் ஈறாக அனைத்தும் தொழுதூண் தொழில். உழுதூண்
விளைக்கும் உழவர் செயல் மாண்பு கண்டே திருவள்ளுவர் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்றும்,
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்றும் வற்புறுத்தினார். உழுது வரும் ஊணைத் தனியே உழவரிடமிருந்து
பெற வேண்டுதலின், பிற தொழில் தொழுதூண் தொழில் எனப்படுகிறதே யின்றி, உழுதூணில் தாழ்ந்தது
தொழுதூண் தொழில் என்பதன்று. உண்பொருளை விளைப்பவன்பால் தொழுது பெற வேண்டியிருப்பது பற்றி
இவ்வாறு கூறப்படுகிறது. தொழுதல் என்பது ஈண்டுக் கொடுப்பக் கோடல். உளது என்று கொடுக்கும் உளம்
முதற்கண் வேண்டப்படுகிறது; அது எளிதில் நிகழ்தற்காகத் தொழுது என்பது இன்றியமையாத தாகிறது.
தொழுதூண் வாழ்க்கையில்
இசைவாணரும் கூத்தரும் ஓவியரும் சிற்பியரும் புலவரும் தனிவகைத் தொழிலினர். ஏனையோர்
அளிக்கும் செய்பொருள் போலாது புலவுணர்வை மகிழ்விக்கும் நுண்பொருள் ஆதலின், இவரது கலைப்புலமையும்
வளமையும் உழுதூண் செல்வரும் தொழுதூண் தலைவரும் செய்யும் உதவியைச் சார்ந்தே வளர்கின்றன. அந்
நிலையில் கலைவாணர் தொழில் தொழுதூணாகவே உணரப்படுகிறது.
இவருள் தெளிவுணர்வால் சிவனைப் பாடி மகிழ்விப்போரும்,
அதனை மறந்து உலகியல் வாழ்வுக்குரிய பொருள்வேண்டி, அதனையுடைய செல்வரிடம் சென்று அவரது
உடைமையைப் புகழ்ந்து தமது இன்மை கூறி இரக்கும் இரவலரும் உண்டு. அவருள் பின்னோர் நிலை
வள்ளலார் உள்ளத்தை வருத்துகிறது. அவர் கூறுவனவற்றை நோக்குகின்றார். உணவுக்கு உப்பில்லை, வேறு
வேண்டுவனவற்றுக்குப் பொருளில்லை என்பனவே மிக்கு நிற்கின்றன. அவருள்ளம் இவ்வாறு வருந்துதற்குரிய
தவறு எங்கே உளது என நினைக்கின்றார். உணர்வின்கண் தெளிவின்மை காரணமாகத் தோன்றினும்,
அதுவும் ஒரு காரணத்தை அடிப்படையாகக் கொண்டிருத்தல் வேண்டுமென ஒன்றையொன்று தொட்டுத் தொடரந்து
நிற்பது தெரிகிறது. பலபடச் சிந்தித்த வள்ளற்பெருமான், இக்கலைவாணராகிய
இரவலர்பால் இத் தவறு உண்டாதற்குக் காரணம் இல்லை; அஃது அவர் தலைமேல் எழுத்து எனக் கூறி இரங்குகின்றார்.
2318. வெப்பிலை யேஎனும் தண்விளக்
கேமுக்கண் வித்தகநின்
ஒப்பிலை யேஎனும் சீர்புக
லார்புற்கை உண்ணுதற்கோர்
உப்பிலை யேபொரு ளொன்றிலை
யேஎன் றுழல்பவர்மேல்
தப்பிலை யேஅவர் புன்தலை
ஏட்டில் தவமிலையே.
உரை: ஒளிவிளக்காகத் திகழ்கின்ற விளக்காயினும் அதனிடத்து வெப்பம் இல்லை என ஞானச் செல்வர் உரைக்கும் குளிர்ந்த ஒளிவிளக்கே. மூன்று கண்களையுடைய பெருமானே, ஒப்பில்லது எனச் சான்றோர் பரவும் நின் புகழை விரும்பிப் புகலாத கலைப்புலவர், புற்கையுண்பதற்குச் சிறிதும் உப்பிலையே, பிற துணை பொருள்களை வாங்கியுண்பதற்குக் கைப் பொருள் இல்லையே என்று வருந்துமிடத்துத் தவறு அவர்பால் இல்லை; அவர் தலையெழுத்தில் தவக்கூறு இல்லை எ.று.
ஞாயிறு, திங்கள், நெருப்பு என்ற மூன்றும் இருள்நீக்கி விளக்கம் தருமியல்பின வாதல்பற்றி அவற்றை விளக்கெனல் மரபாயிற்று. விளக்கம் தரும் அனைத்தும் வெப்பமுடைய நெருப்பின் தொடர்புடையவாக உள்ளன. திங்கள் விளக்கம் தரும் பொருளாயினும், அதன் ஒளியும் ஞாயிறு தந்த வெப்புடை ஒளியே என விஞ்ஞான நூல் கூறுதலால், வெப்பமில்லாத ஒளியுடைய விளக்கு உலகில் இல்லை என்பது உண்மையாகிறது. இறைவனிடத்துத் திகழும் அருளொளி வெம்மை சிறிதுமில்லாத தண்ணொளி எனச் சான்றோர் புகழ்தலின், “வெப்பிலையே எனும் தண் விளக்கே” என வியந்து கூறுகின்றார். தண்ணொளி பரப்பும் திருவருளே திருமேனியாக உடையனாதல் தெளிந்து “தண் விளக்கே” என்றவர், ஞாயிறும் திங்களும் நெருப்புமாகிய வெப்புடைய ஒளிப்பொருளைக் கண்ணாகவுடைய சிறப்பு விளங்க, “முக்கண் வித்தக” என உரைக்கின்றார். வெப்பமே இன்றித் தண்ணருளே உருவாய் அமைந்த சிவபரம்பொருள் வெப்புடைய பொருள்களும் அது கெடா வகையில் தன்கண் கண்ணாக் கொண்டிருப்பது பெரியதோர் வித்தகமாதலால், “முக்கண் வித்தக” எனக் குறிக்கின்றார். ஆகாதவற்றைக் கொண்டு ஆவன செய்துகோடலும், நிலையாதவற்றைக் கொண்டு நிலையாயவற்றைச் செய்து கோடலும் வித்தகம் என இயனூற் புலவர் எடுத்துரைக்கின்றனர் என அறிக. இறைவன் புகழ் என்பர் திருவள்ளுவர்; அதனினும் மிக்கதும் அதனை ஒப்பதுமாகிய புகழ் வேறு இல்லாமையால் “ஒப்பிலையே எனும் சீர்” எனப் பகர்கின்றார். கலை கலைக்கே என்ற கருத்தால் இறைவனது ஒப்பில் புகழை உள்ளத்துக் கொள்ளாமல் வாழும் கலைஞர் தம்மைப்பற்றி வருத்தும் வறுமைக்கு நொந்து உப்பில்லை, அதனை வாங்குதற்குப் பொருளில்லை என வருந்தியுரைப்பதை, “புற்கை உண்ணுதற்கு ஓர் உப்பிலையே பொருள் ஒன்று இலையே” எனக் கொண்டெடுத்து மொழிகின்றார். அவர் கூற்று. கூற்றவன் இன்மையின் கொண்டெடுத்து மொழிவதன்று; வேண்டுமென்றே எடுத்து மொழிவது, அவர்பால் நற்றவம் இல்லாத நலக்குறையை நன்கு வற்புறத்தற்கென அறிதல் வேண்டும். புற்கை - புல்லிய வுணவு; இந் நாளிற் கஞ்சியென வழங்குவது, முன்னைத் தவம் இல்லாத குறையை இகழ்ந்து, “புன்தலை யேட்டில் தவம் இல்லையே” என இசைக்கின்றார்.
இதனால் தவமுள் வழியே கலைப்புலைமையும் வாழவு தரும் என்பது பயனாதல் காண்க. (148)
|