149
149. உலகில் செல்வம் படைத்த அரசர் வாழ்வு பெறினும், அது மெலிவின்றி விளங்கவேண்டுமாயின்,
அரசுக்குரிய குணஞ் செயல் நலங்களை நன்கறிந்த சான்றோர் துணை இன்றியமையாததாம் வாழ்விடை எய்தும்
துன்ப இன்பங்களை முன்னறிந்து காக்கும் அறிவும், எய்தியவழி நெறியறிந்து உய்தி பெறுவிக்கும் திறமும்
பெற்றவராதலால், அவரது துணையை நாம் பெறுவது சிறப்புடைய ஒன்றாகும். முதல் இல்லாத வாணிகர்க்கு
ஊதியம் இல்லையாதல் போலத் தக்க துணையாகிய சார்பு இல்லாதவர்க்கு உலகில் நல்வாழ்வில்லை
என்று திருவள்ளுவர் தெரிவிக்கின்றார். மண்ணியல் வாழ்வில் சுவையின்மை யுணர்ந்து இறைவன் திருவருள்
வாழ்வின்கண் பற்றும் ஆர்வமும் உடையராயினோர் சிவநெறிக்கண் நின்று திரவருள் வாழ்வில் திளைக்கும்
பெரியோரது துணையை வேண்டுவர். அவ் வருளாளர் எவ்வுயுர்க்கும் இன்பம் விளைவிக்கும தொண்டே செயலாகக்
கொண்டு விளங்குவர். அத் தொண்டராகிய மேலோர் துணை பெறுபவர், அரசியற் சான்றோர் துணை பெற்ற
வேந்தர் அரச வாழ்வு குன்றாது சிறப்பது போல அருளாளரான ஞானத் தொண்டர் துணை பெற்றோர் சிவஞானத்
தெளிவும் ஒளியும் சிறந்து மேன்மையுறுவர். “பண்டடித் தவத்தரால் பயில்வார்தொழும் தொண்டர்க்கு”
இறைவன் எளியனாய் இனியன தந்து இன்புறச் செய்கின்றான் எனச் சான்றோரும் தெளியவுரைக்கின்றார்கள்.
ஆதலால் தொண்டர் சார்பே தூயதென வள்ளலார் வற்புறுத்துகின்றார்.
2319. எனைப்பெற்ற தாயினும் அன்புடை
யாய்எனக் கின்பநல்கும்
உனைப்பெற்ற உள்ளத் தவர்மலர்ச்
சேவடிக் கோங்கும்அன்பு
தனைப்பெற்ற நன்மனம் தாம்பெற்ற
மேலவர் சார்பைப்பெற்றால்
வினைப்பெற்ற வாழ்வின் மனைப்பெற்றம்
போல மெலி வதின்றே.
உரை: அன்புடைய பெருமானே, உன்னைத் தம் திருவுள்ளத்தே கொண்டு உன் திருவடி மலரைச் சிந்தித்தவண்ணம் அன்பு செய்யும் மனமுடைய மேலோரது சார்பாகிய துணையைப்பெற்றால், வினைவகையால் வளம்பெற்றோர் மனைக்கண் வளரும் பெற்றம்போல அருள்வாழ்வு வளமிக்குச் சிறக்கும் எ.று.
இறைவன் தன்பால் அன்பு கொண்டு இன்பம் செய்யும் திறத்தை எண்ணுகின்ற வடலூர் வள்ளல், “எனக்கு இன்பம் நல்கும் எனைப் பெற்ற தாயினும் அன்புடையாய்” என மொழிகின்றார். ஒருவர்க்கு இன்பம் செய்வதில் தாயினும் சிறந்தவர் இல்லை. நற்றாயின் வேறாக மக்கட்குத் தாயாவார் ஐவர் உண்டு. அவர்களை ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் எனவுரைப்பர் நச்சினார்க்கினியர். (சீவக. 363). இவர் எல்லாரினும் வயிறு சுமந்து பெற்றவள் சிறந்தவளாதலின் “என்னைப் பெற்ற தாயினும்” என உரைக்கின்றார். பசியறிந்து உணவளித்தும் நோயறிந்து மருந்தளித்தும் காலமறிந்து உறங்குவித்தும் இன்பம் செய்தல் பற்றி “எனக்கு இன்பம் நல்கும் தாய்” என விளக்குகிறார். இறைவன் திருவடித் தொண்டரை, உனைப் பெற்ற உள்ளத்தவர் எனவும், மலர்ச் சேவடிக்கு ஓங்கும் அன்பு பெற்ற மனம் பெற்ற மேலவர் எனவும் இருவகையாக நிறுத்திச் சிறப்பிக்கின்றார். உலகில் வாழும் மக்களுக்கு உள்ளத்தே பெறத்தக்க பொருள்கள் எண்ணிறந்தன; சுருங்க நோக்கின் மண், பெண், பொன் என்று மூன்றும் சிறந்தன என அறிஞர் கூறுகின்றனர். இவற்றை மக்கள் மனம் எளிதிற் பெற்று அவை தரும் இன்பத்துக்கு இரையாகி மடிந்து அடிமையாகி விடுகின்றது. மண் முதலிய மூன்றும் போலின்றி அவற்றின் வேறாய் மேலாய் என்றும் பொன்றாதாய் உளது இறைவன் திருவருள் திருவுரு; அதனை நினைந்து சிறப்பிப்பது கருத்தாகக் கொண்டே, பெரியோர்களை “உனைப் பெற்ற உள்ளத்தவர்” என உரைக்கின்றார். இறைவன் திருவுருவை நினைந்த வண்ணம் இருப்பது விளக்குதற்கே, “உனைப் பெற்ற உள்ளத்தவர்” என மொழிகின்றனர். அப் பெருமக்கட்குள்ள மற்றோர் இயல்பு. இறைவன் திருவடிக்கண் மிக்க அன்பு நிறைந்த மனமுடையவராவது. இறைவன் திருவடி பூவினும் மென்மையும் தூய்மையும் ஞானமாகிய தேனும் உடைமை தோன்ற, “மலர்ச் சேவடி” என்கிறார். பிறர் தோற்றுவிக்கத் தோன்றாது, இயல்பாகவே திருவருளால் தோன்றி பெருகும் அன்பு என்றற்கு “மலர்ச் சேவடிக்கு ஓங்கும் அன்பு” என்றும், அந்தத் தூய அன்பு சரந்து பெருகும் மனமுடைய பெருமக்களினும் மேன்மை யுடையார் இல்லை என்பதற்காகவே “சேவடிக்கு ஓங்கும் அன்புதனைப் பெற்ற நன்மனம் தாம் பெற்ற மேலவர்” எனவும் பாராட்டியுரைக்கின்றார். தக்கார் இனத்தனாகிய வேந்தன். நல்லரசுக்கேற்ற நற்செயல்களையே எண்ணி நாட்டு மக்களின் வாழ்வில் நலமே பூத்து மலரச் செய்வது போல் அருட் செல்வர்களாகிய மேலோர் சார்பு பெற்றவர், திருவருளின்பப் பேற்றுக்குரிய நினைவும் சொல்லும் செயலுமாகிய நல்வினைகள் சிறந்து சிவஞானப் பெருவாழ்வால் சிறக்கப் பெறும் என்பது உணர்த்தவே “மேலவர் சார்பைப் பெற்றால் வினைப்பெற்ற வாழ்வு பெறும் என்றும், செல்வமனைக்கண் வளரும் பசும்போல வளமைபெறும் என்றும் உரைக்கின்றார். செல்வம் நிறைந்த பெருமனைக்கண் வாழும் பசு, காலம் தோறும் புல்லும் நீரும் பெற்று வெயிலில் உலவியும் நிழலில் தங்கியும் இன்புற்றுப் பொலிவது போல, மேலோர் சார்புபெற்ற சிவத்தொண்டர் வாழ்வும் சிவஞானச் செல்வமும் ஒளியும் பெற்றுத் திகழும்; தேய்வுறும் சிறுமையுறாது என்பது விளங்க, “மெலிவதின்றே” எனப் புகல்கின்றார்.
இதனால், சிவன்பால் அன்புடைய உள்ளத்தவரும், அன்பு செய்யும் மேலவர் சார்பு பெறல் வேண்டும்; அதனைப் பெற்றாலன்றி அன்பு வாழ்வு வளமும் பயனும் எய்தாது என்பது கருத்தாதல் கொள்க. (149)
|