150
150. சிவபெருமானின்
அருட்பெருக்கிற்கு எடுத்துக்காட்டாக, அவன் குறைமதியினைத் தன் சடைமுடியிலே தாங்கி, அதனை அழிவினின்றும்
காத்தருளியதான செயலை வியந்து கூறிப் போற்றுவதும், அத்தகைய அருளாளனாகிய பெருமான் தமக்கும்
தம் பிழையெலாம் பொறுத்தானாகித் திருவருள் நோக்கால் வாழ்வளிக்க வேண்டுமென்று வேண்டி வழிபடுவதும்
பக்தர்களின் பொது இயல்பாகும். தக்கனால் தன்னுடைய பெண்மக்கள் இருபத்தெழுவரையும் மணத்தால்
தரப்பெற்று மணவாளனாகிய சந்திரன், அவர்களனைவரையும் சமமாகப் பாவித்து இன்புற்று வாழாதே,
உரோகிணிபால் மட்டுமே மயங்கிக் கிடந்தானாக, அதனால் மனம்வெதும்பிய பிற மகளிர் சென்று தம்
தந்தைபால் முறையிட்டுக் கண்ணீர் சொரிய, அது கண்டு ஆற்றானாகிய தக்கன், ‘நாளொரு கலையாகத்
தேய்து அழிக’ என்று சாபமிட்டனன்; அச்சாபத்தால் தேய்ந்து தேய்ந்து அழிந்து வந்தானாகிய சந்திரன்,
தன்னைக் காக்கும் தக்காரை நாடியோடித் தளர்ந்து, முடிவிலே சிவபிரானைப் புகலுடைய, அவர் அவனைச்
சடையிலே இருத்தி அழிவினின்றும் காத்தலோடு வளரவும் அருளினார் என்பது புராணம். காம மயக்காலே
தன் கடனினின்றும் தவறுதலுற்று, அதனால் சாபமும் பெற்ற குறையுடையவனுக்குச் சடையிலேயே இடமளித்து
உயர்த்திய பெருங் கருணையாளனாகிய பெருமானே, என்னை நின் திருவடிக் கீழே நிலைத்திருக்கும் பேற்றினை
அருள மாட்டாயோ என்று வேண்டுவாராக, வள்ளற்பெருமானார், இந்தச் செய்யுளைச் சொல்லி யருளுகின்றனர்.
2320. நிறைமதி யாளர் புகழ்வோய்
சடையுடை நீண்முடிவேல்
குறைமதி தானொன்று கொண்டனை
யேஅக குறிப்பெனவே
பொறைமதி யேன்றன் குறைமதி
தன்னையும் பொன்னடிக்கீழ்
உறைமதி யாக்கொண் டருள்வாய்
உலகம் உவப்புறவே.
உரை: நிறைவான ஞானமுள்ளோரால் புகழப்படுவோனே, சடையினை உடையதான நின்னுடைய நீண்ட திருமுடியின் மேலதாக, குறையுற்ற மதியாக ஒன்றினையும் தாங்கிக் கொண்டனை அல்லவோ! அப்படிப் போலவே, பொற்றைபோல இளக்கமற்று வன்மையுடைத்தாயிருக்கும் அறிவினேனுடைய குறைப்பட்ட அறிவினையும், நின்னுடைய பொன்மயமான திருவடிக் கீழாகவே நிலைத்துத் தங்கியிருக்கும் ஒரு மதியாக ஏற்றுக் கொண்டாள்வாயாக; ஏற்றுக் கொண்டனையானால், நான் நின்னையே புகழ்ந்து புகழ்ந்து தமிழாற் பாடுதலாலே உலகமெல்லாம் உவப்புறுங் காண் எ.று.
நிறைமதியாளர் என்றது சிவஞானத் தெளிவிலே தலை நிற்பவரான சான்றோர்களை. அவர்களாலும் புகழப்படுவோய் என்றது, அது நியாயமானதொன்று என்பதற்காம். நீண்முடி - நெடிய தலைமுடி; அது சடையால் சுற்றப்பெற்று அமைந்ததென்று குறிப்பிடுவார் 'சடையுடை நீண்முடி' என்றனர். குறைமதி - குறையப்பெற்றுத் தேய்ந்து வந்த மதி; இது வானூர் மதியத்தைக் குறித்தது. 'ஒன்று' என்று குறித்தது ஒரு கலையினளவானதேயாகத் தேய்ந்தது என்பதற்காம். அத்தகைய அருட் குறிப்புப் போன்றே தம்பாலும் அருட் குறிப்புக் காட்டுதலை வேண்டுவார் 'அக் குறிப்பெனவே' என்றனர். பொறைமதி - பொற்றையான மதி; இடைக்குறை; கல்லான மதி என்பது கருத்து. இது இறைவனின் பக்தியினாலே கசிந்து கசிந்து நெகிழாததாம் தம் மனத்தின் நிலையினைக் கூறியதாம். தக்க அளவுக்குக் கனிவேற்படவில்லை என்று வருந்தும் அடிகள், இவ்வாறு பொறைமதி எனக் கூறுகின்றார். குறைமதி - குறைபாடு நிரம்பிய மனம்; அந்தக் குறை மதிக்கு நீ அளித்தாற்போல என் குறைமதிக்கு நீள்முடிலேல் இருக்கும் இடம் தரல் வேண்டா; நின் பொன்னடிக் கீழ் இருக்கும் இடம் தந்தாற்போதும் என்று தாழ்ந்து வேண்டி இரக்கின்றார் அடிகள். என் மதியானது நின் பொன்னடிக்கீழ் உறை மதியாகுமேல், யான் என்னுடைய சிந்தனையாலும் வாக்காலும் நின்னையே போற்றுவேன், அதனால் உலகெல்லாம் உவப்புறும் என்பார் 'உலகம் உவப்புறவே' என்கின்றார். என்னை நோக்கி இரங்கி யருளாவிடினும், 'உலகம் உவப்புறும்' என்ற தன்மை நோக்கியேனும் கருணை செய்க என்பது கருத்தாம். உலகம் உவக்கவே தாம் வேண்டுவதாக உரைப்பது ஒரு நயம்.
இதனால், தம் உள்ளமானது உலக விவகாரங்களிலே சுற்றிச் சுழலாமல் இறைவன் அடி நீழலிலேயே இருக்கும் ஆனந்தத்தை விரும்பி வேண்டுகின்றார் வள்ளலார். (150)
|