152

       152. திருவெண்ணெய் நல்லூரில் தடுத்தாட் கொள்ளப்பட்ட சுந்தரர், திருத்துறையூர் அடைந்து, சிவபெருமானைப் பாடிப் பரவித் தவநெறி அருளல் வேண்டுமென வேண்டினார். பின்பு அவ்வூரினின்றும் அகன்று திருவதிகைப் பதியை நோக்கி வந்தார். திருவதிகையை நினைத்தலும், அங்கே திருநாவுக்கரசர் தங்கி உழவாரத் திருப்பணிபுரிந்த பெருஞ்செய்கை நினைவில் எழுதலும், நாவரசர் கைப்பணி புரிந்த இடத்தில் கால்வைத்தற்கு அஞ்சி, சுந்தரமூர்த்திகள் அவ்வூர்க்குப் புறத்தொல்லையில் உள்ள சித்தவடமடம் புகுந்து, அன்றைய இரவைப் போக்குதற்கு எண்ணித் தங்கினார். அப்போதில் அந்த மடம் பொதுவிடமாதல்பற்றி, வேறோர் முதிய வேதியர் அங்கே வந்து தங்கினார். சுந்தரர் நன்கு உறங்குகையில், முதிய வேதியருடைய காலடி சுந்தரர் முடிமேல்பட்டது. அதனை உணர்ந்த சுந்தரர், வேதியரை நோக்கி, “அருமறையோய், உன்னடி என் சென்னியில் வைத்தனை” என்று சொன்னார். அவ்வேதியரும், “உறக்கத்தில் அறியாமல் என் அடி உங்கள் சென்னடியில் பட்டதற்குக் காரணம் என்னுடைய மூப்புக்காண்” என மொழிந்தார். சுந்தரரும், வேறொரு பக்கத்தே தமது தலைவைத்து உறங்குவராயினர். உறங்கும்போது வேதியருடைய திருவடி மறுபடியும் சுந்தரர் தலையிற்பட்டது. சுந்தரர் கண்விழித்து “ஐய, பலகாலும் உங்கள் காலடியை என் தலைமேல் வைக்கின்றீரே” என்று சொல்லி வருந்தினார். உடனே வேதியர் “அறிந்திலையோ” என்று சொல்லிவிட்டு மறைந்தார். சுந்தரர் திடுக்கிட்டு, திருவடிவைத்து மறைந்தவர் சிவனேயாதல் வேண்டுமெனத் தெரிந்து, ‘உண்மையுணராமல் சிவபெருமானை இகழ்ந்தோமே’ என நினைந்து, திருப்பதிகம் பாடத் தலைப்பட்டார். அதன் கண் “கறைகொண்ட கண்டத்து எம்மான், தன் அடிக்கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவின் நாயேன், எம்மானை எறிகெடிழல வீரட்டானத் துறைவானை இறைபோதும் இகழ்வன் போல யானே” என்று பாடித் தமது ஆராமையைப் புலப்படுத்தினார். இந்நிகழ்ச்சியை நினைந்து வியக்கின்றார் வடலூர் வள்ளல். சிவபெருமானை நோக்கி, “பெருமானே, நம்பியாரூரர் வேண்டா என மறுத்து, வேறு பக்கத்தே தமது முடியை வைக்கவும் விடாமல், அவர் முடிமேல் நின் திருவடியை வைத்தனையே! உனக்கு அவர் முடிமேல் அடி வைத்தற்கு அத்தனை ஆசையோ?” என வினவுகின்றார். அது நல்லதொரு பாட்டாய் மிளிர்கிறது.

2322.

     ஒருமுடி மேல்பிறை வைத்தோய்
          அரிஅயன் ஒண்மறைதம்
     பெருமுடி மேலுற வேண்ட
          வராதுனைப் பித்தனென்ற
     மருமுடி யூரன் முடிமேல்
          மறுப்பவும் வந்ததவர்
     திருமுடி மேலென்ன ஆசைகண்
          டாய்நின் திருவடிக்கே.

உரை:

     திருமுடியில் பிறையணிந்த பெருமானே, திருமாலும் பிரமனும் வேதமும் தத்தம் முடிமேல் அமையவேண்டும் என நின் திருவடி நோக்கித் தவம்கிடந்து வேண்டவும், அங்கெல்லாம் வராமல், ஆரூரனாகிய சுந்தரர் பித்தன் என்று பேசியும், முடிமேல் அடிவைத்தாய் என்று மறுக்கவும், விடாது தொடர்ந்து சென்று அவர் முடிமேல் நின்றதே, உமது திருவடிக்குச் சுந்தரர் முடிமேல் அத்தனை ஆசை போலும். எ.று.

     ஒரு முடி - ஒப்பற்ற முடி; தேவர் முதல் பிறரெல்லாம் வணங்கவும் அவர் முடிமேல் பொருந்துவதாய், பிறர் எவருடைய அடியிலும் படாததாய் விளங்குவதுபற்றி, சிவன் திருமுடியை “ஒரு முடி” என உரைக்கின்றார். தேய்ந்து சிறுகும் பிறையினது சிறுமைக் கிரங்கி, மேலும் தேயாவாறு முடிமேல் வைத்துக்கொண்டமையின் “பிறை வைத்தோய்” என்று குறிக்கின்றார். திருமால் பிரமன் முதலிய தேவர்களும் வேதங்களும் சிவனுடைய திருவடி காண்டற்கு முயன்று மாட்டாவானதைப் புராணங்கள் உரைத்தல்பற்றி, “பெருமுடிமேல் உறவேண்ட வாராது” என வுரைக்கின்றார்.

     திருமணத்திற் புகுந்து வல்வழக்கிட்டுச் சிதைந்தபோது சிவனை நோக்கிப் “பித்தனோ” என்று சுந்தரர் வெகுண்டு பேசியதை எடுத்து “உனைப் பித்தன் என்ற ஊரன்” என நினைப்பிக்கின்றார். சித்த வடமடத்தில், முடிமேல் காலடிபடுவதை உரைத்து மறுத்த செய்தியை, “மருமுடி ஊரன் முடிமேல் மறுப்பவும்” என மொழிகின்றார். எப்போதும் மணக்கோலத்துடன் தலையிற் பூச்சூடிப் பொலிபவர் சுந்தரர்; அதனால், அவரை “மருமுடி ஊரன்” எனச் சிறப்பிக்கின்றார். பன்முறையும் மறுக்கும் செயலுடையார்க்கு வெறுப்புறாது ஒருவர் தருவாராயின், தருபவர்க்குத் தருவதில் உள்ள விருப்ப மிகுதி இனிது புலப்படும்; அதுபோலச் சுந்தரர் மறுத்த வழியும் விடாது சிவபெருமான் திருவடி தந்ததை இப்பாட்டால் வியந்து கூறுகிறார். இறைவன் திருவடி என்று தெரியாமல் மறுத்ததாக வரலாறு கூறுதலால், வள்ளலார் இறைவன் திருவுள்ளக் குறிப்பை திருவடிமேல் ஏற்றித் திருவடிக்குச் சுந்தரர் திருமுடிமேல் மிக்க ஆசையென இங்கிதம்பட மொழிந்து, அத் திருவடிபால் தமக்குள்ள ஆசையைப் புலப்படுத்துவது, இப்பாட்டின் பயன் என உணர்தல் வேண்டும்.

     (152)