153

       153. முருகப்பெருமானுடைய அறு முகமும் பன்னிரு கண்ணும் கொண்ட அழகிய திருவுருவை வியந்து அதனைக் கண்களாற் கண்டு பரவியவழி மனத்திடைப் படியும் மயக்கமும் மருட்சியும் நீங்கும்; மகிழ்ச்சியும் மிகும் என்று வள்ளலார் பாடுகின்றார்.

 

2323.

     வேல்கொண்ட கையுமுந் நூல்கொண்ட
          மார்பமும் மென்மலர்ப்பொற்
     கால்கொண்ட ஒண்கழற் காட்சியும்
          பன்னிரு கண்ணும்விடை
     மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும்
          சண்முக வீறுங்கண்டு
     மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந்
          நாள்என்கண் மாமணியே.

உரை:

     என் கண்ணில் விளங்கும் கருமணியே, வேலேந்திய கையும், நூலணிந்த மார்பும், கழலணிந்த காலும், பன்னிரண்டு கண்ணும், செஞ்சுடர் மேனியும், ஆறு முகமும் கண்டு நெஞ்சம் மகிழும் நாள் எந்நாள் வருவது எ.று.

     கண்ணிற்குப் பார்க்கும் செயல்தந்து அறிவு விளக்கம் நல்குவது கருமணி; அதுபற்றியே, “என்கண் மாமணியே” என்று கூறுகின்றார். மாமணி - கருமணி. கண்ணிற்குச் சிறப்புத்தருவது கருமணி என்பதனைத் திருநாவுக்கரசர் “கண்ணே கருமணியே”, “மணியொடு பாவாய்” என்பர். திருவள்ளுவரும், “கருமேனியிற் பாவாய்” என்று கூறுவது காண்க. முருகப் பெருமானுக்கு சிறப்புடையது வேலாதல் பற்றி, “வேல் கொண்ட கை” என உரைக்கின்றார். மார்பில் முப்புரி நூல் அணிவதை வியந்து “நூல் கொண்ட மார்பம்” எனச் சொல்லுகின்றார். அதனை “ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண் ஞாண்” என நக்கீரர் வகுத்துரைப்பார். மென்மையும் மலர்போன்ற தன்மையும் உடைமைபற்றி, முருகன் திருவடியை “மென் மலர்ப் பொற்கால்” என விளக்குகின்றார். திருவடியில் வீரகண்டை யணிந்திருக்கும் நலத்தை, “கால் கொண்ட ஒண்கழற் காட்சி” என உணர்த்திக் கூறுகின்றார். இறைவன் திருவடியிற் கிடக்கும் கழல், உயிர்களைப்பற்றிக் கழன்றோடாமல் பிணித்திருக்கும் வினைகளைப் போக்கும் சிறப்புடையது என்றற்கு “ஒண்கழல்” என உரைக்கின்றார். “கழலா வினைகள் கழற்றுவ காரி வனங்கடந்த அழலா ரொளியன காண்க ஐயாறன் அடித்தலமே” என நாவுக்கரசர் நவில்வது காண்க. 'விடைமேல் கொண்ட செஞ்சுடர்' என்பது சிவபெருமானை, அவருடைய திருமேனியின் நிறமே முருகப்பெருமானுக்கு மாதலின் “விடைமேல் கொண்ட செஞ்சுடர் மேனி” என விளம்புகிறார். வீறு - பிறிது எதற்கும் இல்லாத சிறப்பு. முருகன் திருமுகம் ஆறும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாதலின், “சண்முகவீறு” எனச் சாற்றுகின்றார். உலகியல் வாழ்வில் நிகழ்வன அனைத்தும் இயற்கை அறவினைக்கும் மக்கள் புரியும் இருவினைக்கும் இலக்காய், நினைபவர் நினைவின்வண்ணம் நிகழ்வதில்லை; அதனால், மக்கள் மனம் மயக்கமும் தயக்கமும் எய்துவது இயல்பாகவுளது; முருகப் பெருமானுடைய திருமுக வொளி பெற்ற மாத்திரையே மயக்கமும் கலக்கமும் நீங்கித் தெளிவு உண்டாகும் நலத்தை எண்ணியே, “மால்கொண்ட நெஞ்சம் சண்முக வீறுகண்டு மகிழ்வது எந்நாள்” எனப் பரவுகின்றார்.

     இதனால் முருகன் திருமுக வீறும் மேனியொளியும் பெற்று மாலும் மயக்கமும் நீங்கித் தெளிவு பெறுவது மக்கட்கு முறை என்று அறிவுறுத்துவது பயன் என அறிக.

     (153)