154

      154. அருட்பேற்றுக்கு வாய்ப்பு நல்காத சிறுமையுடையதாகையால் இம் மண்ணக வாழ்வில் இருப்பதில் சிறப்பில்லை; இதனைத் துறப்பது நன்று என்றோர் எண்ணம் தோன்றுகிறது. பரந்த உலகை அகக் கண்ணாலும் புறக்கண்ணாலும் காண்கின்றார். மலையும் காடும் வயலும் கடலுமாய், குறிஞ்சி முல்லை மருதம் நெய்தலெனப் பெயர் தாங்கிக் காணும் கண்களுக்கு, இவ்வுலகம் அழகிய காட்சிதந்து, இன்பத்தால் உள்ளத்தைத் தன்பால் ஈடுபடுத்துகிறது.

 

      குறிஞ்சிக் காட்சியை நினைக்கின்றார்; ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் கண்ட குறிஞ்சிப்பகுதி நினைவில் எழுகிறது. குறிஞ்சிக் குறமகளிர் கையில் தம் குழவியை ஏந்தி நிற்கின்றனர்; அக் குழவி அருகிருந்த மரத்தின்மேல் மாமதிதோன்றக் கண்டு, அதனைப் பற்றுதற்குக் கைகளை நீட்டித் தாவுகிறது; அதனை “சங்கமார் குறமாதர் தம் கையில் மைந்தர்கள் தாவிக் கங்குலின் மாமதிபற்றும் கற்குடி மாமலை” என்று ஞானசம்பந்தர் வியந்து கூறுவது வள்ளலார் மனத்தை மகிழ்விக்கிறது. ஒருபால் “கருகு குழல் மடவார் கடி குறிஞ்சியது பாடி, முருகனது பெருமை” யைப் பகர்ந்து மகிழ்கின்றார்கள். முல்லைப் புறவத்தை ஒருபால் பார்க்கின்றார். “கனைத்த மேதி காணாத ஆயன் கைம் மேற் குழலூத

அனைத்தும் சென்று” திரள்வது தோன்றுகிறது; ஒரு காட்டில் “கலங்கள் பல திரையுந்திப் பருமணிபொன் கழித்துப் பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகிக், கலங்கு புனல் அலம்பிவரும்” காட்டாறு இனிய காட்சி வழங்குகிறது. மருதப்பகுதியில் “பாளைப் பைங்கமுகின் சூழ.ல் இளம் தெங்கின், படுமதம்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக், காளைவண்டு பாட மயில் ஆலும் வளர்சோலை” நிற்கிறது. ஒரு பொழில், “வெயிற்கு எதிர்ந்து இடங்கொடாது அகம் குளிர்ந்த பைம்பொழிலில் துயிற்கு எதிர்ந்த புள்ளனங்கள் மல்கி” யொலிக்கின்றன. நெய்தல் நிலத்தில் கடற்கானற்  சோலைகளில் “மாதர் வண்டு தன் காதல் வண்டாடிய புன்னைத் தாது கண்டு பொழில் மறைந்து” ஊடும் காட்சியும், “மல்லல் திரைச் சங்கம் நித்திலங்கொண்டு வம்பக் கரைக்கே, ஒல்லைத்திரை

 

@@@@@

 

கொணர்ந்து எற்றும்” காட்சியும் மனத்திடை நிலவுலகின்பால் பேராசை தோற்றுவித்துப் பிரிய கில்லாத நிலையை உண்டு பண்ணுகின்றன. மலையும் காடும் வயலும் கடலும் கானலும், அவற்றிடையே - வாழும் மக்களின் செல்வக் களிப்பும் செய்வினை மாண்பும் ஆடலும் பாடலும் அடுத்தார்க்கருளும் அரும் பண்பும், காலையும் மாலையும் இறைவனை வழிபடும் இயல்பும், மக்கட்சூழலில் இருந்து மகிழ்தற்குப் பெருவேட்கையை விளைவிக்கின்றன. பிறிதொருகால் உலகை நோக்குகின்றார்; முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, கல்லும் கற்பொடியும் நிறைந்து, மரங்கள் பசுமைகுன்றி வாடிக் கருகி வளமிழந்து பொலிவின்றிப் பாலையாய்த் தோன்றி வருத்தம் தருவதும், உயிர்கள் ஒன்றையொன்று தாக்கிக் கொன்றுண்டு திரிவதும், இளமைக் காட்சிகள் முதுமையுற்றுத் தேய்ந்து கெடுவதும், நல்வாழ்வுகள் வறுமையும் நோயும் வாடிய மேனியும் கொண்டு சின்னாளில் மாய்ந்து மடிவதும், கிழியிற் பொறித்த கேழ்கிளர் ஓவியம்போலத் தோன்றி உலகவாழவில் வெறுப்பும் விரைவில் இதனை நீத்தல் வேண்டுமென்ற நினைவும் தோற்றுவிக்கின்றன. பூவுலக வாழ்வு “அந்தரத் தெழுதிய எழுத்துபோல” “ஆகாயத்தில் மலர்ந்த தாமரைப்பூ” என்ற சுட்டிய வழக்காய் முடிவதை வள்ளலார் காண்கின்றார்.

 

            “இளமை கைவிட்ட டகறலும் மூப்பினார்

     வளமை போய்ப் பிணியோடு வருதலால்

     உளமெலாம் ஒளியாய் மதியாயினான்

     இளைமையே கிளை யாக நினைப்பனே”

 

என்ற நாவுக்கரசரின் நல்லுரையை எண்ணுகின்றார். இனிதுறு காட்சியும் துனியுறு தோற்றமும் மாறிமாறிக்கண்டு மயங்கி இருள்பட்ட நெஞ்சின்கண் அறிவு ஒளிதந்து ஞான நன்னெறி காட்டும் பரம்பொருளின் பரமாந்தன்மை உணர்வில் புலகாகின்றது. நாவரசர் உரைத்தபடி, அப பெருமானது “உறவல்லது உறவாய் உறுநலம் புரிவது வேறில்லை; ஒளியும் மதியும் உள்ளத்திற் பரப்பித் தெளிவிக்கும் சிவகுருவின் “கிளைமையே கிளையாக” நினையவரும் கிளர்ச்சி, அவனது சைவத் திருவுருவை நெஞ்சக் கிழியில் நேர்பட நிறுத்துகின்றது. கங்கை தங்கிய சடை முடியும், மென்மை தவழும் திருமுகமும், கண்பொலியும் நெற்றியும், ஒருபால் பெண்ணுருவமர்ந்த பேருருவும், அருட்பெருக் குணர்த்தும் கருமிடறும், பொன்போலும் ஒளிதிகழும் திருமேனியும், தண்ணிய நிழல் தந்து இன்புறுத்தும் திருவடியும் காணக் காணக், “கரை செய்ய அரியதொரு பேருவகைக் கடல்” பொங்குகிறது. அந்நிலையில் மண்ணுலகக் காட்சி மறைந்து போகிறது. “மருவினை மடநெஞ்ச மனம்புகும் குருவினைக் குணத்தாலே வணங்கிடும் திருவினைச், சிந்தையுட் சிவனாய் நின்ற உருவினைக், கண்டு கொண்டது என் உள்ளமே” என்று பாடுகின்றார். பின்னர் உள்ளத்திற் கண்ட சிவவுரு மாறுகிறது; புறக்கண்ணும் பிற பொறிகளும் மண்ணுலகைக் காட்டுகின்றன. அருளொளியில் சிவத்தின் பொருளுருவைக் காண்டல் எப்போது? மண்ணுலகின் மருட்காட்சியில் மயங்கும் இவ்வாழ்வை ஒட்டுப்பற்றின்றித் துறப்பது என்றுகொல் என நினைக்கின்றார்; பாடுகின்றார்.

2324.

     விண்பூத்த கங்கையும் மின்பூத்த
          வேணியும் மென்முகமும்
     கண்பூத்த நெற்றியும் பெண்பூத்த
          பாகமும் கார்மிடறும்
     தண்பூத்த பாதமும் பொன்பூத்த
          மேனியும் சார்ந்துகண்டே
     மண்பூத்த வாழ்க்கையை விண்பூத்த
          பூவின் மதிப்பதென்றே.

உரை:

     கங்கையும் வேணியும் முகமும் நெற்றியும் பெண்ணொரு பாகமும் கருமிடறும் பாதமும் மேனியும் உடைய சிவபெருமானை அவன் திருவருளால் சார்ந்து கண்டு, மண்ணக வாழ்வை விண்ணகத்தெழுதிய பூப்போல நிலையின்றி மாய்வதென மனத்தே வெறுப்பெய்தி நீப்பது எப்பொழுதோ? எ.று.

     விண்பூத்த கங்கை - வானவருலகிற் பாய்ந்தோடும் “ஆகாய கங்கை”. வேணி-சடை. அது மின்போல் ஒளி கொண்டு மிளிர்வதுபற்றி “மின்பூத்த வேணி” என்று சிறப்பிக்கின்றார். அருளொழுகு கண்ணும் அன்பு மொழியும் வாயும் மென்மைப் பண்புக்கு உருவாதலால், “மென்முகம்” என விளம்புகின்றார். கண்ணுதற் கடவுள் என்று கற்றோர் பரவப்படுதலால் “கண் பூத்த நெற்றி” எனவும், உமையொரு பாகனாதல்பற்றி “பெண்பூத்த பாகம்” எனவும் இயம்புகிறார். கழுத்துக்கரிய விடமுண்டாதல் கார்மிடனறாது” என்பதன்று, பேரருள் பொழியும் கார்மிடறு எனச் சான்றோர் புகழ்வதை “பேரருட்கார் என்று கூறும் களத்தவன்” (99) என்று முன்பு மொழிந்தாராதலால், அக் கருத்தே நமது நெஞ்சில் நிலைபெறுமாறு “கார்மிடறு” எனவும் உரைக்கின்றார். திருவடியை நோக்கவும் “மாசில் வீணையும் மாலை மதியமும், வீசு தென்றலும் வீங்கிள வேனிலும், முசுவண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழல்” எனத் திருநாவுக்கரசர் உணர்ந்துரைத்த உயர்மொழி உள்ளத்தே உறைதலால், அம் மொழிப் பொருள் உணர்த்தும் தன்மையை மறவாது, “தண்பூத்த பாதம்” என்று சாற்றுகின்றார். சேரமான் அருளிய திருவந்தாதி, தன்னைக் கண்டார் மேனியைத் தன்னைப் போலாக்கும் தக்கோனாகிய சிவபெருமானுக்குப் “பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி” என்றது சாற்றுகின்றார். சேரமான் அருளிய திருவந்தாதி, தன்னைக் கண்டார் மேனியைத் தன்னைப் போலாக்கும் தக்கோனாகிய சிவபெருமானுக்குப் “பொன் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி” என்றது மறக்கப்படாது மனத்திற் கிடத்தலின், “பொன்பூத்த மேனி” என்று கூறுகின்றார். சார்தற்குத் துணை அப் பெருமானது திருவருளாதலால், “திருவருளாற் சார்ந்து கண்டு” எனப் பொருள் உரைக்கப்பட்டது. திருவருளாற் கண்ட காட்சி பொருளல்லா மண்ணக வாழ்வில் விருப்பில்லாத மன நிலையைத தோற்றுவித்தல் பற்றி, “மண்பூத்த வாழ்க்கை” என்றார்; பொருளால் சிறக்கும் வாழ்க்கையைப் பொன் பூத்த வாழ்க்கை என்றும் அஃது இன்றிக் கெட்ட வாழ்க்கையை புண்பூத்த வாழ்க்கை என்றும் புலவர் புகன்றுரைப்பர். திருவள்ளுவர் “பொருளற்றார் பூப்பர் ஒரு கால்” என்பது காண்க. இந்த நயம் தோன்ற இம் மண்பூத்த வாழ்க்கை என்ற தொடர் நிற்கிறது. விண்பூத்த பூ, ஆகாயப்பூ, முயற்கொம்பு, யாமையிர்க் கம்பலம் எனவரும் சொற்றொடர்களைக்கட்டிய வழக்கு என்பர் சேனாவரையர். பொருளுடைச் சொற்களைப் புணரத்துப் பொய்ப்பொருளைக் காட்டுவது கட்டிய வழக்கு. கட்டுதல் - புனைதல். நல்லதைக் கண்டாலன்றி அல்லதை வெறுத்து நீத்தல் இல்லையாதலால் சிவனது திருமேனியைச் சார்ந்து கண்டு “விண்பூத்த பூவென்று மண்பூத்த வாழ்க்கையை மதிப்பது என்றோ” என்று இசைக்கின்றார். மதித்தல் - மதித்து நீத்தல். ஆன்றமதிப்பு, அவமதிப்பு என்ற இரண்டனுள், விண்பூத்த பூவென மதிப்பது அவமதிப்பு; அவமதிப்பு வெறுத்துத் தள்ளுதற்கும், ஆன்ற மதிப்பு (நன்மதிப்பு) விரும்பி மேற்கொள்ளுதற்கும் காரணம். காரணச் சொல்லாகிய மதித்தல், ஈண்டு நீத்தல் என்ற காரியப்பொருளை யுரைப்பதைப் பரிமேலழகர் முதலியோர், “காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது” என்பர்.

     இதனால், மண்பூத்த வாழ்வு விடற்பாலது; அதற்குச் சிவபெருமானது திருவுருவை அவனது அருளாற் சார்ந்து அருளே கண்ணாகக் காணப்படுவதே வேண்டற்பாலது என்பது பயன்.

     (154)