155
155. சந்திரனுக்கு மதியென ஒரு பெயருண்டு; அதற்குக் காரணம் அதனிடத்தே தண்ணியை மதுவின்
சுவையுடைய அமுதம் உண்டென்பர். மதுவையுடையது மதி என்று ஆயிற்று. சந்திரனிடத்துள்ள மதவாகிய
அமுதம் கொடுக்கக் குறைபடாத சிறப்பியல்புடையது. அதனால் அச்சந்திரனுக்கும் மதுவுக்கும் நீக்கமுடியாத
தொடர்புளது. ஞானவானகள் யோகநெறியில் தலையுச்சிக்குமேல் பன்னிரண்டங்குல வுயரத்தில் இவ்வமுத
மதியைக் கண்டு அதனிடத்தொழுகும் மதுவை மாந்தி மகிழ்வர் என யோகநூல்கள் உரைக்கின்றன.
“யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப் போத அமுதைப் பொசித்தவர்” (திருமந். 335) எனத் திருமூலரும்,
இதனை விளக்குவர்.
“மூலநிலத்தில் அதோமுகமாய்
முகிழ்த்து
விழி இன் பொடுதுயிலும்
மூரிப்பாம்பைக் கால் அனலை
மூட்டி எழுப்ப
நிலம் ஆறும்
சீலமொடும் போய்த்தரிசித்துச்
செழுமாமதியின்
அமுத கடல்
தேக்கியகத்தங்கனசவறும்
ஓர்
தெய்வத்தவத்தோர்”
என்று திருப்போரூர்ச் சிதம்பர சாமிகளும் கூறுவனவற்றால் அறியலாம்.
இங்ஙன் யோகக்
காட்சியில் மதியொளியிற் கலந்து அதன்கண் ஊறும் தண்ணமுதமுண்ணும் யோகியர்க்கு வற்றாத இன்பம்
தருவதும் சிவபரம் பொருட்கு இயல்பு; அதனை நினைந்த வடலூர் வள்ளல், தமது மதிநலத்தை நோக்குகிறார்.
பரம்பொருளின் அருளமுதம் உண்டு மகிழும் அந்நிலைக்கண் ஆர்வம் கொள்ளாமல், உலகியல் நல்கும்
சிற்றின்பங்களை விரும்பி அலைவது கண்டு அவலிக்கின்றார். தமது மதியின் இயல்பு, அடிக்கடி மாறும்
பெண் மதியையும், கண்டவ்ற்றிலெல்லாம் ஆசைவைத்தலையும் பேய் மதியையும் ஒத்துத் தோன்றக் காண்கின்றார்.
செய்வது அறியாது சிவன்பால் முறையிடுகின்றார்.
2325. தண்மதி யோஅதன் தண்ணமு
தோஎனச் சார்ந்திருணீத்
துண்மதி யோர்க்கின் பதவுநின்
பேரருள் உற்றிடவே
எண்மதி யோடிச்சை எய்தா
தலையுமென் ஏழைமதி
பெண்மதி யோஅன்றிப் பேய்மதி
யோஎன்ன பேசுவதோ.
உரை: துவாதசாந்தத்தில் காட்சிதரும் குளிர்ந்த ஞானநிலவு பொழியும் சந்திரனோ, அதனிடத்து ஊறிப் பெருகும் அமுதமோ எனப் பிரித்தறிய வொண்ணாமல் ஒன்றிநின்று, உயிரறிவிற் படிந்துள்ள அறியாமையிருள் நீங்கி இன்பம் நுகரும் யோகியர்க்குப் பேரின்பம் அருளும், நினது பேரருளைப் பெறற்கு நினைக்கும் அறிவும் இச்சையும் கொள்ளாமல், உலகியற் புலனுகர்ச்சி நாடி அலையும் ஏழைமதி பெண்மதியோ, பேய்மதியோ என்னென்று சொல்வேன் எ.று.
இருகண்களையும் மூக்கின் நுனியிற் செலுத்திப் புருவநடுவில் நோக்கம் புரிபவர்க்கு மேலே பண்ணிரண்டங்குல அளவில் விந்துவும் நாதமும் ஆகிய இரண்டும் தோன்றும்; விந்துவைச் சத்தியெனவும்; நாதத்தைச் சிவம் எனவும் கூறுப. திருவைந்தெழுத்தால் புருவநடுவில் நிகழும் தியான முடையார்க்கு, அவ்விடத்து நிகழும் சந்திரவொளியில் இருள் நீங்கிச் சிவத்தின் தலைமையும் உயிரின் அடிமைத்தன்மையும் இனிது புலனாகும். “அஞ்செழுத்தால், குண்டலியிற் செய்தோமம் கோதண்டம் சானிக்கில், அண்டனாம் சேடனாம் அங்கு” எனச் சிவஞானபோதும் கூறுகிறது; “அஞ்செழுத்தால் குண்டலியின் அனலை யோம்பி, அணைவரிய கோதண்டம் அணைந்து, அருளின்வழி நின்று, அஞ்செழுத்தை விதிப்படி யுச்சரிக்க, மதி அருக்கன் அனையரவம் போல் தோன்றும் ஆன்மாவில் அரனே” எனச் சிவஞான சித்தியார் விளக்குகிறது. புருவம் வில் போறலால், கோதண்டம் எனப்படுகிறது. கோதண்டம் அணைந்து அருளின்வழி நிற்பது புருவநடுவில் செய்யும் தியானத்தால் விந்துவைக் கண்டு நாதத்தை மேவுதல். “விந்துவும் நாதமும் மேவி உடன் கூடில் சந்திரனோடே தலைப்படுமாயின், அந்தரவானத் தமுதம் வந்து ஊறிடும்” (திருமந். 1071) என்று திருமூல நாயனார் தெரிவிப்பது காண்க. இதனையே, சுருக்கமாக, “ஊனில் உயிர்ப்பையொடுக்க ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி நன்புலத்து ஏனைவழி திறந்து ஏத்துவார்க்கு இடர் ஆன கெடுப்பன் அஞ்செழுத்துமே” என ஞானசம்பந்தரும், “பொறிப்புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள், அறிவிப்புறும் அமுதாயவன்” என நாவுக்கரசரும் உரைத்தருள்கின்றனர்.
விந்து நாதங்களை மேவி உடன் கூடியவழித் தோன்றும் சந்திரவொளியும் அதனிடத்தூறிப் பெருகி வழியும் தண்ணமுதும், யோகியரைத்தாமாக்கிக் கோடலின், “தண்மதியோ அதன் தண்ணமுதோ எனச் சார்ந்து” என வள்ளலார் மொழிகின்றார். சாருமிடத்து இருளறக் கெடுதலின், இருள்நீங்கி இன்புறும் அவர்களை “இருள் நீத்து உண்மதியோர்” எனச் சிறப்பிக்கின்றார். தன் திருவருளை வேண்டியவர் எந்நெறி நின்று ஒழுகினும், அவர்கட்கு அந்நெறிக்கண் தனது இன்னருளை வழங்குவது இயல்பாதலால், யோகியர்க்குத் தண்ணிய மதியொளியும் தண்ணமுதும் வழங்குதல் பற்றிச் சிவனருளை “இன்புதவும் பேரருள்” என்று பாராட்டு, அதனை யுணர்ந்து அருள்பெற முயலும் அதனை நினையாமைக்குத் தமது அறிவை நொந்து கொள்கின்றாராதலால், “பேரருள் உற்றிட எண்மதியோடு இச்சை எய்தா தலையும் ஏழைமதி” என வுரைக்கின்றார். எண்மதி - எண்ணும் அறிவு; நிகழ்காலம் தொக்க வினைத்தொகை. அடிக்கடி மாறும் செயல்பற்றி, அறிவைப் பெண்மதியோ என்று கூறுகின்றார். “இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம் போன்று வேறுபடும்” எனத் திருவள்ளுவர் பெண்மனத்தின் பெற்றியை எடுத்துரைப்பது காண்க. பேரருளாளனான இறைவனை நினையாது பிற பொருள்களை நினைந்து மனவமைதியின்றி அலைந்த செயலை, “நாயேன் பலநாளும் நினைப்பின்று மனத்துன்னைப் பேயாய்த் திரிந்து எய்த்தேன்” என நம்பியாரூரர் உரைப்பதனால், பேய்மதியின் பெற்றியை அறிந்து கொள்ளலாம். பெண்மதி, பேய்மதி என்ற இரண்டினும் மிக்கவை காணப்படாமையின், “என்ன பேசுவதே” எனச் சொல்லி வருந்துகிறார்.
இதனால், மனமொன்றி யோகநெறிக்கண் நிற்கும் சான்றோரது ஒண்மதி கொள்ளாது, பெண்மதியோ பேய்மதியோ எனப் பேசப்படும் தமது மதிமையின் குறைகளை எடுத்து முறையிட்டு, அருளவேண்டுவது இப்பாட்டின் பயன் எனவுணர்க. (155)
|