156
156. வந்தி தந்த பிட்டுக்காக மண்சுமந்ததும், பித்தனோ மறையோன் என ஏசிய சுந்தரர்
பொருட்டுப் பல்வேறு நல்ல துணைபுரிந்ததும், பாணபத்திரன் பொருட்டு சடைமறைத்த முடித்தலையில்
விறகுசுமந்ததும் ஆகிய இறைவன் புரிந்த செய்கைகளை எண்ணுகின்றார் வடலூர் அடிகள். இங்ஙனம் அடியார்
பொருட்டு வேற்றுமை சிறிதும் நினையாது அருள் புரிந்ததை நினைக்கும்கால் சிவனையொப்ப அடியவர்க்காக
எளிவந்து தாழ்ந்த செயல்களைப் புரியும் பெருந்தக்கோர் பிறர் இல்லை; அவரது திருவருளே நமக்கு
உறுபொருளாகத் தக்கது என நினைந்து, நம்மனம் அவர் திருவடியிலே ஈடுபடுகிறது; அங்ஙனம் திருவடிக்கண்
ஈடுபட்டிருப்பினும், அத் திருவருள் என்பால் எய்துகிறதில்லையே என ஏங்குகிறார். துன்பங்கள்
வரும்போது ஒன்றன் பின்னே ஒன்றாகத் தொடர்ந்து போந்து தாக்குகின்றன. ‘ஆளில்லையே’ என ஏங்கி
வருந்திய வந்திக்கு நினைத்த மாத்திரமே வந்து ஆள் வேண்டுமா என வந்து உதவிய அப்பெருமான்,
துன்பத்தான் பின்னாள் பன்முறை வருந்தியும் வந்திலனே; இது என் என எண்ணுகிறவர், வந்திக்கு
ஆளாய் வந்தான் என்று நூலோர் கூறுவது வஞ்சமோ? அவன்தானே ஆள்போல் தோன்றி முன்னோரை வஞ்சித்தானோ
என அலமருகிறார். உண்மையறியாமையால் பித்தனோ எனச் சுந்தரர் திட்டியதற்கு வருத்தமுறாத பரமன்,
அறியாத செய்த பிழையைப் பொறுத்தாள்வது அறிஞர் இயல்பென்பது பற்றி, அச்சுந்தரர்க்கு அருள் செய்தாரெனின்,
யானும் எத்தனையோ பிழைகளை
உண்மையறியாது செய்து, பின்பு “தம்மானை அறியாத சாதியாருளரே” எனச் சுந்தரர் வருந்தியதுபோல
வருந்தியுள்ளேன்; அற்றாக, இறைவன் எனக்கு ஏன் தமது இன்னருளைப் புரிந்திலர் என வடலூர் வள்ளல்
நினைந்து இனைகின்றார். இறைவனது திருவுள்ளம் எத்தகைய இயல்புடையதாம் என ஆராய்கின்றார். பாணபத்திரனுக்கு
ஆள் என்று தாமே தமது வாய்மலர்ந்து உரைக்கவேண்டி, விறகு சுமந்து வந்ததை எண்ணுகிறார். விறகின்
வன்மையையும் திருமுடியின் மென்மையையும் வள்ளலார் உன்னுகின்றார். அடியார் பொருட்டு வன்மைமென்மை
நோக்காது அவர்கட்கு உதவி பண்ணுதலே எண்ணி, அதற்கு உரிய செயலையே செய்பவன் சிவன் என்பதைச்
சிந்தித்த வள்ளலார், தமது வாழ்வில் தம் கண்காண ஒன்றும் அப்படி நடவாமையை நினைக்கின்றார்.
நூல்கள் உரைக்கும் அந்நாளில் அடியவர்க்கு எளியனாய்த் தோழனாய் ஆளாய் உதவிய சிவபரம்பொருள்
இன்று வாராமைக்கு யாது காரணம் என எண்ணுகிறார். இன்று அவ்வாறு அப் பெருமான் நடக்கலாம்; பல்லோர்
பலவிடங்களில் கண்டிருக்கலாம்; தான் அறிய நடக்கவில்லை என்ற நினைவு வருகிறது. சிவமாகிய இப்
பெருந்தெய்வம் என் பொருட்டு இவ் வஞ்சனை செய்யலாமா? என வருந்துகிறார்.
2326. பிட்டுக்கும் வந்துமுன் மண்சுமந்
தாயென்பர் பித்தனென்ற
திட்டுக்கும் சீரருள் செய்தளித்
தாயென்பர் தீவிறகுக்
கட்டுக்கும் பொன்முடி காட்டிநின்
றாயென்பர் கண்டிடஎன்
மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென்
கோமுக்கண் மாணிக்கமே.
உரை: மூன்று கண்களையுடைய மாணிக்கமணி போல்பவனே, பிட்டுக்கு மண்சுமந்தாய் என்றும், பித்தனோ என்று திட்டிய சுந்தரர்க்குத் தோழனாய் அருள்செய்தாய் என்றும், விறகுக் கட்டு முடியில் நன்கு பொருந்துமாறு தலையைக் கொடுத்தாய் என்றும் நூலோர் கூறுகின்றார்கள். எனக்குமட்டும் நீ ஒன்றும் செய்யாமையால், உன்னை வஞ்சகத் தெய்வம் என்று நான் சொல்லட்டுமா? கூறுக. எ.று.
மதுரை நகர்க்கண் வந்தியொருத்திக்காகக் கூலியாளாய் வந்து, அவள் தந்த பிட்டினைக் கூலியாகக் கொண்டு மண் சுமந்தான் மதுரைச் சொக்கநாதன் என்று புராணம் கூறுவோர் ஒருபுறமும் இருக்க, அவ் வரலாறு அறிந்தோர் பலரும் தம்முடைய பாட்டினும் உரையினும் பன்முறையும் தொகுத்துப் பாராட்டியிருப்பதுபற்றி, “முன் பிட்டுக்கும் வந்து மண் சுமந்தாய் என்பர்” என வுரைக்கின்றார். மண் சுமத்தற்கு ஏற்பத் தரப்படுவதும், ஏற்கப்படுவதும் உலகில் வேறுவேறு கனவிய பொருள்களாயிருப்ப, வந்தி என்பவள் சிற்றுண்டியாகச் செய்துவிற்ற பிட்டு கூலியாகப் பெற்றது பொருத்தமன்று என்பது விளங்கப் “பிட்டுக்கும்” என உம்மையாற் சிறப்பித்தது, அதன் தாழ்வுடைமை தோன்ற் என்பர் என்றும், வள்ளலார் நயம்பட வுரைக்கின்றார். “ஆங்கவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள்” என்றும், கூலியாளாய் அதனைப் பெற்ற சொக்கநாதர், “பிட்டு வாய்மிதப்ப வுண்பர்” என்றும் பரஞ்சோதியார் கூறுகின்றார். திருமணக்கோலத்துடன் உறவினரும் உற்றாரும் ஏனை நாட்டவரும் ஊரவரும் கூடியிருந்து திருமண மண்டபத்துட் புக்கு “என் அடியான் இந் நாவல் நகர் ஊரன்” என்று இறைவனாகிய வேதியன் உரைத்தது கேட்டதும், மணக்கோலத்துடனிருந்த சுந்தரர் வெகுண்டதில் வியப்பில்லை. மேலும், “வேதியர் வேறு வேதியர்க் கடிமையாதல் அந்நாளைய சமுதாயத்தில்லை” என்ற வழக்கானும் சுந்தரர் மருண்டு வெகுண்டு பேசுதற்கு இடம் தந்தது. அவரது இளமைச் செவ்வியும் அவர் நினைவுக்கு ஒத்து இயன்றது. இந்நிலையில் அவர் வெகுண்டுரைத்த போதும், “ஆசில் அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் பேச இன்று உன்னைக் கேட்டோம், பித்தனோ மறையோய்” என்று காரணம் காட்டி விளம்புகிறார். இதனை நன்கு நினைந்துதான் வடலூர் வள்ளல் “பித்தன் என்ற திட்டு” எனச் செப்புகின்றார். வசைமொழியைத் 'திட்டு' என்றல் தொண்டை நாட்டினும் நடுநாட்டினும் மக்கள் வழக்கு. “பித்தன்” என்ற வசை கேட்ட சிவன், சிறிதும் வெறாது மனமகிழ்ந்து மணம் புரிவித்தும், பொன்னும் பொருளும் வேண்டும்போதெல்லாம் அளித்தும், முடிவில் திருக்கயிலாயப் பேறளித்தும் சிறப்பித்த செயல்களை வியந்து, “சீர் அருள் செய்து அளித்தாய்” எனத் தெளியவுரைக்கின்றார். விறகு விற்பவனாய் வேடம் பூண்ட பெருமான் முடிமேல் இருந்த விறகுக் கட்டையும் அதனை அருளுள்ளத்துடன் சுமந்து நடந்து போந்த நலத்தையும் மனக்கண்ணிற் கண்டு மகிழ்ந்து பாடுகின்றார். இருகைகளும் விறகுக் கட்டை எடுத்து முடிக்குமேற் செல்வதும், அவ்விரு கைகட்கு மிடையே திருமுடியைத் தாழ்த்திப் புகுத்தி விறகுக் கட்டு முடிமேல் பொருந்தத் தாங்குவதும் நினைக்கும் வள்ளலார்க்கு இன்பம் தருகின்றன. விறகுக் கட்டைத் தாங்கும் திருமுடியோ மின்னிறச் சடைபொலியப் பொன்னிற மேனிக்கு ஒத்துயர்ந்து ஓங்குவதென்றற்குப் “பொன்முடி” எனப் புகழ்கின்றார். இந்நிகழ்ச்சிகள் அத்தனையும் ஒருகாலத்தில் நிகழ்தன என்று புராணிகர் உரைக்கின்றார். இந்நாளிற் காணலாம் என முறையிட்டால் நீ எனக்குக் காட்டுகின்றாய் இல்லை. ஆங்கு அவர் கண்டார்; ஈங்கு இவர் கண்டார் என்று சொல்வாரைக் கேட்டுள்ளேன். மற்று, யான் கண்டிலேன். எனக்கு மாத்திரம் நீ காட்டாமல் வஞ்சனை செய்தல் கூடாது; வஞ்சனை செய்கின்றாய் என்றற்குத் தமது நாவும் மனமும் இடம் தராமை தோன்ற, “என் மட்டுக்கும் வஞ்சகத் தெய்வமென்கோ” என்று சொல்லி, இறைவன்பால் உள்ள ஆரா அன்பை, “முக்கண் மாணிக்கமே” என்று பேசிப் பரவிப் பாராட்டுகிறார்.
இதனால், முன்னை நாளில் நடத்திக் காட்டிய அருட்செயல்களை இன்றும் காட்டுதல் வேண்டுமெனத் திருவருளை வேண்டி முறையிடுவது பயனாம் எனவுணர்க. (156)
|