157

      157. மகளிர் தரும் இன்பத்தை நுகர்ந்த ஆடவர் அவர்பின் சென்று திரியும் செயல்கண்டு அலைவதைக் காண்கின்றார் வடலூர் வள்ளல். அவரது உள்ள முழுதும் நிறைந்து நிற்கும் மகளிரை ஒருபாலும், அவர் பால் மனம் போக்கி மயங்கும் மாந்தரை ஒருபாலும் நோக்குகின்றார். ஆடவன் கண்கட்கு மகளிரின் தோற்றமும் பொலிவும் இன்பம் தருகின்றன; அவருடைய இனிய காதலுரைகள் அவன் செவிக்கு மகிழ்ச்சி தருகின்றன. அவர் வாயில் ஊறும் நீர் தேன் கலந்த பால் போலத் தீஞ்சுவை நல்குகிறது; அவள் கூந்தலிலும் மேனியிலும் கமழும் நறுமணம் அவன் மூக்கிற்கு இன்பம் கொடுக்கின்றன. மகளிரின் மேனி தன் மேனியைத் தீண்டித் தோயும்போது அவன் உடல்முழுதும் இன்ப வடிவாய் மயக்குகிறது. “கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே” என்று வெருவுகின்றான். மேலே விண்ணையும் கீழே மண்ணையும் எல்லையாகக் கொண்டு விரிந்து பரந்து உயர்ந்து தோன்றும் பெரிய உலகின்கண், கண் முதலிய பொறிகளின் வாயிலாகப் புலுனுணர்வு தோய்ந்து உலக வாழ்வின் இன்பம் பெறுகிறது. “சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கண்ணது உலகு” என்று சான்றோரும் கூறுகின்றனர். இவ்வகையில் பெண்ணின்பம் உலகியலின்ப மனைத்தையும் தனக்குள் அடங்க நிற்பது காணவும், அவனறிவு அவனை யறியாமலே மயக்கமுறுகிறது. உடலை வளர்த்து உள்ளத்தை வளமாக்கி உணர்வைப் பெருக்கும் உலகியலின் இன்பப் பிழவு அவள்பால் இருப்பதென எண்ணுகிறான். உலகியல் வாழ்க்கையின்பம் அதனினின்றும் அவனைப் பிரியாமல் பிணிப்பதனால், அப் பிணிப்பும் அவள்பால் உளதெனக் கருதி, உயிர் வாழ்க்கைக்கு உலகு இடமாதல்போல இன்பநுகர்ச்சிக்கு அவள் இடமாதலை எண்ணாமலே அவளோடே இயைந்துவிடுகிறான். அந்நிலையில் ஆடவனுடைய மனமும் மொழியும் செயலும் அவளே பொருளாக நினைத்தலும் மொழிதலும் செய்தலும் மேற்கொண்டு பிற உலகியற் பொருளுக்கோ அதனைப் படைத்தளித்த பரம்பொருளுக்கோ அவன் உள்ளம் இடம் தர மறுத்து விடுகிறது. அவட்கு அவன் மீளா அடிமையாகின்றான். அவனது நிலைமை வள்ளலார்க்குத் தெளிவாகத் தெரிகிறது. அருள் பெருகி அவனைத் தன்போற் கருதி, “இனி உய்தி இல்லையே; அருட்பேற்றுக்கு வழி எய்துமோ” என ஏங்குகிறார்.

2327.

     மையிட்ட கண்ணியர் பொய்யிட்ட
          வாழ்வின் மதிமயங்கிக்
     கையிட்ட நானும்உன் மெய்யிட்ட
          சீரருள் காண்குவனோ
     பையிட்ட பாம்பணி யையிட்ட
          மேனியும் பத்தருள்ள
     மொய்யிட்ட காலுஞ்செவ் வையிட்ட
          வேலுங்கொள் முன்னவனே.

உரை:

     பாம்பணிந்த மேனியும் பத்தர் உள்ளத்திட்ட காலும் கூர்மையான சூலுமும் கொண்ட முன்னோனே, மகளிர் வாழ்வில் கையிட்ட நான் உன் மெய்யருளைக் காண்பேனோ. எ.று.

     காதலின்பத்தைத் தூண்டும் கருவிகளில் மகளிர்க்குக் கண்கள் சிறப்புடையனவாதலின், கூரிய வேலுக்கு நெய்யிடுவது போலக் கண்ணுக்கு மையிடுவ வாதலின், அதனைச் சிறப்பித்து “மையிட்ட கண்ணியர்” என வுரைக்கின்றார். காமக்களிப்புக்கு முன் மொழிவன பின்னர் மாய்ந்தொழிதலின், அவரது உறவு பொய்யாதல் பற்றிப் “பொய்யிட்ட வாழ்வு” என்று கூறுகின்றார். தெளிவுடையோர் பொய்யைக் கைவிடுவார்; தெளிந்த அறிவில்லாதவர் அதனை விரும்பிக் கைவைத்துச் சிக்குண்டு துன்புறுவர் என்றற்குக் “கையிட்ட நான்” என்று கட்டுரைக்கின்றார். கையிடுதல் - தொடக்குறுதல். கருத்து முழுதும் காமக்களிப்பு நிறைந்து அறிவுக் கண்ணை மறைத்து இருள்செய்வதால் அருளொளி புகுதற்கு இடம் உளதாகாதே என்ற அச்சம் தோன்றி அலைப்பது பற்றி “நானும் உன் மெய்யிட்ட சீரருள் காண்குவனோ” என உரைக்கின்றார். காமவுணர்வு பொய்ம்மை இருளுருவிற்றாகலின், திருவருளுணர்வை “மெய்யிட்ட சீரருள்” என்றும், அறிவுக்கண்ணிற்கு ஒளியுருவிற் காணப்படுவது கண்டு கூறுதலால், “சீரருள் காண்குவனோ” எனவும் மொழிகின்றார். பையிட்ட பாம்பு, படத்தொடு கூடிய பாம்பு. அதனை அணியாகப் பூண்பது பற்றி, “பையிட்ட பாம்பணி யையிட்ட மேனி” கொண்டவனே என்கின்றார். பத்தர் உள்ளம் சிவன்பால் அன்பும் அவனது திருவருட் செறிவும் உடையதாதலால், அதன்கண் அவன் திருவடி வழுவா திருப்பது கண்டு, “பத்தர் உள்ளம் மெய்யிட்ட காலும்” என்றும், சிவனது சூலப்படை மூவிலைவேல் எனப்படுவது; அதனால், “செவ்வையிட்ட வேலும் கொள் முன்னவனே” என்றும் மொழிகின்றார். திருஞான சம்பந்தர் ஞான மாமலர் கொண்டு வழிபடப்படும் சிவன் திருவடியை “நுண்ணறிவால் வழிபாடு செய்யும் காலுடையான்” (ஞான. 5:4) என்பது காண்க. பத்தருள்ளம் வழுவாமை தோன்றத் திருநாவுக்கரசர், “புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம் தரவேண்டும்” என வேண்டுவதனால் அறிகின்றோம். இங்ஙனம் மகளிரது காமமயக்கத்தால் இருண்ட என்னுள்ளத்தில் நின் அருளொளி புகுமோ என அஞ்சுகின்றேன் என அடிகள் முறையிடுகின்றார்.

     (157)