158

       158. உலகில் வாழ்வார்க்குத் தொடக்கத்தில் நேரிய வாழ்க்கையில் தான் கருத்துச் செல்வது இயல்பு. எனினும், ஒவ்வொருவரும் பிறருடைய துணையும் சார்பும் பெறுவது இயற்கை. அவ்விரண்டும் நேர்மைக்குத் துணைபுரியுமாயின், வாழ்வு செம்மையுடைத்தாம்; நேரிய நெறியின் நீக்குதற்கும் இத்துணையும் சார்பும் அமைவதுண்டு. அதுபற்றியே சான்றோர் ‘சிற்றினம் சேர்தல் கூடாது’ என விலக்கிப் பெரியோர் துணைபெறுதல் இன்றியமையாதென வற்புறுத்துகின்றனர். நன்னெறியினும் தீநெறி எளிமையும் இன்பமும் உடையதுபோல மயக்குதலால், மக்களிற் பலர் தீநெறிப்பட்டு மண்ணக வாழ்வைத் துன்பநிலைய மாக்கி விட்டனர்; மக்களினத்துக்கு நலம்புரிதற்கென்று அமைந்த வாணிகம், அரசியல், சமயம் முதலிய அறத்துறைகளில் அன்னவர் நுழைந்தமையின் மக்களினத்தின் வாழ்வு இன்னாமை நிறைந்து இம்மை மறுமை அம்மை என நிற்கும் மூவகை இன்பவாழ்வு பெறற்கு ஆகாத தீயதாகிவிட்டது; நண்பரென்றும் சுற்றமென்றும் நம்புதற்குரியார் குறைந்தனர்; சான்றோரென்றும், தலைவரென்றும், அறவோர் என்றும், அறிஞரென்றும் சார்தற்குரிய தக்கோர் அருகிவிட்டனர். இவர்கள் தொகை அருகினமையின், வாழ்வு, அரம்பும் அல்லலும் கரம்பும் மிகுந்து வறுமையும் நோயும் மலிந்து “துன்பமல்லது துணைபிறதில்லை” என்னுமாறு திரிந்துவிட்டது.

 

      பலர் இவ்வாறு பார்மிசை வாழ்வைப் பாழ்படுத்தி இருள் செய்தனராயினும், சிலர் இருந்து ஒளிசெய்து இன்பப்பேற்றுக்கு இனிதின் அமைந்தது இவ்வுலக வாழ்வு என்பதைக் காட்டுக்கின்றார். அறநெறிக் கண் நேர்மை தவறாது நின்று பொருளீட்டித் தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு மகிழ்வதும், பிறரை மகிழ்விப்பதும் செய்கின்றனர். அவரது தூயபண்பு மக்களுலகை நிலைபெறச் செய்கிறது. அவர்களைக் காணும் திருக்குறள், “பண்புடையார் பட்டுண்டு உலகம்” என்று பாடிப் பரவுகிறது.

 

      மக்கள் வாழ்வு மாண்பிழந்து, மண்புக்கு மாயச் செய்யும் பண்பிலார் பலர் நிறைந்த உலகில், இச் சிலர் மாத்திரம் எங்ஙனம் உளராயினர் எனின், இவ்வுலகம் மாய்ந்து கெடாது இருத்தலால் அவர் உளர் என்பது வாதநெறியில் பெறப்படுகிறது. துன்பம் உடையார் பலரும் இன்பமுடையார் சிலருமாக உலகில் காணப்படுவது கண்ட திருவள்ளுவனார் “இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர், பலர் நோலாதவர்” என்று வெளியிடுகின்றார். நோற்றல் என்ற சொல்லுக்குத் தாங்குதல் பொறுத்தல் என்று சான்றோர் பொருள் கூறுவர். உறுகிற துன்பங்களைப் பொறுத்தல் நோற்றலாகும். துன்புறுவாரைத் தாங்குதலும் நோற்றலின் பாற்படும்.

 

      வாழ்வில் நல்லோர் நேரிய வழியில் பெற விரும்புவன அறிவும் பொருளும்; அவ்விரண்டினால் எய்தும் புகழுமாகும். இம்மூன்றும் தீயோர் பலர் நிறைந்த சூழலில் பெறப்படுவன; ஆகவே, நல்லோர் விரும்பிப் பெற முயலுங்கால், பெறாவாறு அப்பலரால் இடையூறு உண்டாதல் இயல்பு. அவர் செய்யும் கொடுமையும் நோயும் எதிரேற்று இடையூறு களைந்தும் இன்னல் தாங்கியும் முன்கூறிய அறிவு முதலியவற்றைப் பெறல் வேண்டும். கண்ணும் கருத்தும் மேற்கொண்ட செயலிடை ஒன்றி உறுவது இன்றியமையாதாகிறது. ஒன்றி உழைத்து உயர்ந்தோரது உயர்வு காண்போர், இதனை இவர் அரிய தவம் செய்து பெற்றார் எனப் பாராட்டுகின்றனர். மெய்வருத்தம் பார்க்கிலர்; கண்ணுறக்கம் கொண்டிலர்; பிறர் செய்த இடையூற்றுக்கு உள்ளம் உடைந்திலர்; இகழ்ந்தாரை எண்ணிற்றிலர்; மேற்கொண்ட வினைக்கண் வென்றி விளைப்பதொன்றையே கருதினர். கண்கள் இடையூறுகளைக் கண்டு விலக்கின; கருத்து வேண்டியது வேண்டியாங்குப் பெறுதற்குரிய நெறிமுறைகளை நினைந்தவண்ணமிருந்தது என்று வியந்து புகழ்கின்றனர். உண்மையறிவால் ஒள்ளியோர், இதுவே தவம்; இதற்கு இன்றியமையாத அறிவும் வினைத்திண்மையுமே தவம்; இத்தவப் பண்புடையார்க்கே தவம் கைவரும்; இப்பண்பிலார் செய்வினை மேற்கொள்வது அவம்; பயினில் உழைப்பு என்கின்றனர் திருவள்ளுவர், “தவமும் தவமுடையார்க்காகும் அவம் அதனை அஃதிலார் மேற்கொள்ளுவது” என்று அவர் கூறியருளினார். மேலும், தவப்பபண்பாவது உற்ற நோயைப் பொறுத்தலும், நோய் செய்யும் உயிர்கட்கு உறுகண் செய்து இடையூற்றை மிகுவித்துக் கொள்ளாமையுமாம் என்ற கருத்து விளங்க, “உற்ற நோய் நோன்றலும் உயிர்க்கு உறுகண் செய்யாமையும் அற்றே தவத்திற்கு” என்றும், மேற்கொண்ட தமது செயல்திறத்தைக் கண்ணும் கருத்துமாய்ச் செய்பவரே தவம் செய்வோர் என்பது புலப்பட, “தவம் செய்வார் தம் கருமம் செய்வார்” என்றும் யாவரும் இனிதுணர உரைத்துள்ளார். கண்ணையும் கருத்தையும் சிதறவிட்டுப் பலவற்றில் ஆசையைப் பெருக்கி எதனையும் முற்ற முடிக்க மாட்டாது கெடுபவரை ‘அவம் செய்வார்’ எனத் தெரிவிக்கிறார். ஆசைமிகுந்து அவம் செய்து அல்லற்படுவோர் உலகில் பலராதல் கண்டு, அவர்கள் பொருட்டு வடலூர் அடிகளார் அவர்களைத் தம்மோடு உளப்படுத்தி இறைவன்பால் முறையிடுகின்றார்.

2328.

     தவமே புரியும் பருவமி
          லேன்பொய்ச் சகநடைக்கண்
     அவமே புரியும் அறிவிலி
          யேனுக் கருளுமுண்டோ
     உவமேய மென்னப்ப டாதெங்கு
          மாகி ஒளிர்ஒளியாம்
     சிவமேமுக் கண்ணுடைத் தேவேநின்
          சித்தந் தெரிந்திலனே.

உரை:

     சிவமே, தேவே, தவம்புரியும் பருவம் இல்லேன்; பொய்யான உலக நடையை மேற்கொண்டு அவமே புரியும் அறிவிலியாகிய எனக்கு உன் அருள் கிடைக்குமோ? நின் திருவுள்ளம் அறியேன் எ.று.

     இன்னவுரு இன்ன நிறம் என்று உணரப்படாத பரமாம் நிலையில் கடவுளைச் சிவம் என்பது சைவநெறி. அந் நெறியில் அதற்கு ஒப்பதும் மிக்கதுமாகிய பரம்பொருள் வேறு இல்லை; அதனால் அதற்கு ஒத்த உவமையில்லை. உவமையால் உணர்த்தப்படும் பொருள் உவமேயம் எனப்படும்; சிவத்தை யுணர்த்துதற்கு உவமையொன்றும் இல்லாமையால், அஃது உவமேயமாதல் இல்லை. அதுபற்றியே வடலூர் அடிகள் “உவமேயம் என்னப் படாது” என உரைக்கின்றார். அச் சிவம் எங்கேயுளது, எங்ஙனம் உளது என வினவுவார்க்கு, அது எங்கும் எப்பொருளிடத்தும் ஒளியாய் ஒளிர்கிறது எனப்படுதலால், “எங்கும் ஆகி ஒளிர் ஒளியாம் சிவமே” என விளம்புகிறார். “அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி அருளொடு நிறைந்தது” என்பர் தாயுமானவர். தெய்வ வுருவில் வைத்துக் கண் மூன்றுடைய தேவராய் வழிபடப்படுவதுபற்றி “முக்கண் உடைத் தேவே” என மொழிகின்றார். “கண் மூன்றுடை ஆதி” (காழி) என்பர் ஞானசம்பந்தர். திண்ணிய நெஞ்சுடையார்க் கன்றித் தவம் கைகூடாது; மனத்திட்பம், கல்வியறிவு முதிர்வாலும் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையாலும் உளதாவது; உலகியல் நுகர்ச்சி ஓரளவு நிறைவுறும் பருவம் எய்துங்காறும் மனம் திண்மையுறாமை பற்றித் “தவம் புரியும் பருவமிலேன்” எனக் கூறுகின்றார். பருவமெய்து முன்பே தவமேற்கொண்டு இடைக்கண் முரிந்து கூடாவொழுக்கமுற்று அவமாயினோர் பலர் நாட்டில் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும். சக நடை - உலக நடை; அஃதாவது, உலகியல் வாழ்வு. இதற்கு இன்றியமையாத பொருள் நிலையின்றிப் பொய்படும் இயல்பினதாதலால், உலக நடையைப் “பொய்ச் சகநடை” எனப் புகல்கின்றார். மேற்கொண்ட தவமுயற்சி தெளிந்த அறிவும் திண்ணிய மனமும் உடையார்க்கன்றி வேண்டிய பயன் நல்காது அவமாகும்; அறிவிலாவிடத்து மனத்திட்பமும் அவமாதலால் அறிவின் இன்றியமையாமை விளங்க, “அவமே புரியும் அறிவிலியேன்” என்று இசைக்கின்றார். அறிவிலி என்பதே அமையும்; அறிவிலியேன் என விகுதிமேல் விகுதி பெற்றது, செய்யுளின் ஓசையின்பம் குறித்து. திருவருள் “அறிவினுள் அருளால் மன்னி” ஒளி நல்குவது; அறிவு இல்லாவிடத்து அருள் எய்துதற்கு வாயிலின்மை கண்டு, “அருளும் உண்டோ” என வள்ளாலர் வருந்திக் கேட்கின்றார்.

     தவம் புரியும் பருவமோ, அறிவு நலமோ என்பால் இல்லாமை காண்கின்றேன்; அக் குறைபாட்டால் செய்வன அவமாகின்றன; இவ்விரண்டையும் தந்து அருள்புரியும் வேண்டுமென முறையிடுவது இத் திருப்பாட்டின் கருத்து.

     (158)