160

       160. இயற்கையில் காணப்படும் பொருள்களையும், அவற்றின் தோற்றம் அழகு பயன் முதலிய நலங்களையும் கண்டு உள்ளவாறு எடுத்து ஓதுவதும், கற்பனைசெய்து அழகுறுத்துரைப்பதும் ஆகிய செயல்களில் கலைவாணர் மிகவும் ஈடுபடுகின்றார்கள். கண் காது மூக்கு செவி முதலிய அறிகருவிகளாலும், கை கால் வாய் முதலிய செயற்கருவிகளாலும் அறியப்படுவதும் செய்யப்படுவதும் ஆகிய அனைத்தும் கலை வகைக்கு உரியவாய் மக்களை மகிழ்வுறுத்துவதில் சிறந்து விளங்குகின்றன. ஆயினும், அவை உலகியற் பொருள்களாய் ஓரொருகால் இன்பம் தந்து, பின்பு உவர்ப்பை விளைத்து விடுகின்றன. அவற்றின் இயல்புகளைக் கண்ட சான்றோர் என்றும் உள்ளதாய், நினைக்கும் தோறும் கற்பனையூற்றாய் இன்பம் தருவதாய் உள்ள இறைவனைக் கலைக்குரிய பொருளாய்க் கருதுகின்றனர். அவர்கட்கு இறைவனைப் பொருளாகக் கொள்ளாத கலையறிவு இன்பமும் மகிழ்ச்சியும் தருவதில்லை. அவ் வகையினராதலின், வடலூர் வள்ளல் இறைவன் திருவடியைப் பாடாதார் பாட்டு இனிய பயன் தருவதில்லை என நொந்து பேசுகிறார்.

2330.

     ஆட்டுக்குக் காலெடுத் தாய்நினைப்
          பாடலர் ஆங்கியற்றும்
     பாட்டுக்குப் பேரென்கொல் பண்ணென்கொல்
          நீட்டியப் பாட்டெழுதும்
     ஏட்டுக்கு மையென்கொல் சேற்றில்
          உறங்க இறங்குங்கடா
     மாட்டுக்கு வீடென்கொல் பஞ்சணை
          என்கொல் மதித்திடினே.

உரை:

     திருமன்றில் ஆடல் புரிதற்கென்று திருவடி தூக்கிய பெருமானே, கலைவல்லுநர் நின்னைப் பாட விரும்புகின்றிலர்; வேறு பயனில் பொருள்களைத் தமது பாட்டில் வைத்துப் பாடுகின்றனர்; அவர் செயல் வீண். சேற்றில் உறங்கப்புகும் எருமைக் கடாமாட்டுக்கு வீடு ஏன்? பஞ்சணையேன்? அதுபோல் இவர்கள் பாடக் கருதும் பொருட்கு யாப்பிலக்கண வகையில் எப்பெயர் இடுவது? இசையிலக்கண வகையில் எப்பண்ணின் பெயர் இடுவது? எழுதும் ஏட்டுக்கு எத்தகைய மை இடுவது? எ.று.

     கூத்தப் பிரான் ஆதலின், அவன் திருவம்பலத்தில் ஆடும் கூத்தினை 'ஆட்டு' என்றும் ஆட்டமென்றும் கூறும் மரபு பற்றி, “ஆட்டு” என்றும், ஆட்டத்தின்கண் தாளவறுதிக்கொப்ப அடிவைத்து ஆடும் மரபு பற்றி “கால் எடுத்தாய்” என்றும் உரைக்கின்றார். சிவன் பெயரையும் புகழையும் பாடாது செத்துப் பிறக்கின்ற பிற மக்களையும் பொருள்களையும் பாடும் கலைவாணரை, “பாடலர்” எனக் குறிக்கின்றார். இறைப் பொருளாகிய நின்னை விடுத்துப் பிற பொருள்களை மேற்கொண்டு, அவற்றை விரும்புவோர் சூழலில் இருந்து பாட்டு இயற்றுகின்றமை புலப்பட, “ஆங்கு இயற்றும் பாட்டுக்கு” எனப் பிரித்துக் காட்டுகின்றார். செய்யுள் யாப்பு வகையில் காணப்படும் பாட்டுக்கள் அனைத்தும் இறைவனைப் பொருளாகக்கொண்டு விளங்குதலின், பிறர் பாடுவன எவ்வகையவாம் எனத் தாமே வியந்து, “ஆங்கு இயற்றும் பாட்டுக்குப் பேர் என் கொல்” என எண்ணுகின்றார். இசைத் துறையில் மூவர் முதலிகள் பாடிய தேவாரப் பாடல்களே காலத்து நாட்டில் நிலவின; அவற்றிற் காணப்படும் பண்கள் பலவும் இறைவன் புகழ்பாடும் பண்களாகவே இருத்தலால், கலைப்புலவர் இயற்றும் இசைப் பாட்டுகளுக்கு எத்தகைய பண் அமைக்கப்படும் என்பாராய், “பண்ணென்கொல்” என வினவுகின்றார். ஏட்டில் எழுதுவோர் மையில் தோய்த்து எழுதும் மரபு அடிகளார் காலத்தில் வழக்கில் வந்துவிட்டமையின், “அப் பாட்டை நீட்டியெழுதும் ஏட்டுக்கு மை என்கொல்” எனக் கிளக்கின்றார். கருப்பும் சிவப்பும் ஆகிய இருநிற மை வழக்கில் வந்து விட்டமை அவர் கால எழுத்துக்களில் காணத் தெரிகிறது. அடிகளார் காலத்தில் திருமணம் முதலிய மங்கலச் செய்திகளைச் சிவப்பு மையினும், பிறவற்றைக் கருப்பு மையினும் எழுதும் மரபு நடைமுறையில் இருந்தது; அதனாற்றான், “நீட்டி யெழுதும் ஏட்டுக்கு மையென்கொல்” என மனம் கசந்து உரைக்கின்றார்.

     பாடும் பாட்டுக்குப் பொருளாய் அமையத் தக்கது இறைவன் புகழ் பரவும் பொருள்சேர் பாட்டேயாகும்; அதனை விடுத்து வேறு பொருள் அமையப் பாடுவது, ஆகாது. இறையைப் பாடுவது நல்வீட்டில் பஞ்சணையில் பண்புடையோரைப் படுக்கவைத்துப் பாராட்டுவதாகும்; அல்லாத பொருளைப் பொருளாகவைத்துப் பாடுவது, எருமைக் கடாவை வீட்டின் நடுவில் பஞ்சணையில் படுக்கவைப்பது போலாகும் என இகழ்கின்றார். அதனால்தான், இப்பாட்டுக்களை மதித்து நோக்கல் கூடாது; நோக்கின் வெறுப்பே உண்டாகும் என்பாராய், “மதித்திடின்” என உரைக்கின்றார். எவ்வகையாலேனும் மதிப்பிடத்தான் வேண்டுமெனின், அதுவும் வீண் என்பார், சேற்றில் உறங்க இறங்கும் கடா மாட்டுக்கு வீடு என்கொல் பஞ்சணை என்கொல்? என இகழ்கின்றார்.

     இதனால், இறைவன் புகழ்தான் கலைப் புலவர் பாட்டுக்கட்குப் பொருளாய் அமையத்தக்க மாண்புடையது, அதனை விடுத்து வேறு பொருள்களைப் “பாடல் சான்றவை” என மதிப்பது கூடாது என்பது கருத்தாதல் காண்க.   

     (160)