161

       161. இயற்கைக் காட்சிகளையும் இல்லது புனைந்துரைக்கும் பொய்க் கற்பனைக்களையும் கலைத்திறம் என வியந்துரைக்கும் அறிவரும், கலைப்புலவரும் உலகில் உண்டு. அவர் கற்பனைகளை ஊக்கி மகிழ்விப்போரும், பொருள் தந்து விளக்கமுறுத்துவோரும் எங்கும் உள்ளனர்; அதனால் இறைவன் புகழை விடுத்து வேறு செல்வர் புகழையும், வேந்தர் நலங்களையும் புகழ்ந்து, பொருள்பெற்று வாழ்வோரும் உளராதலை அடிகளார் பார்க்கின்றார். அவர்களும் புலவர் எனவும் கலைவாணரெனவும் நாட்டவராற் பாராட்டப் படுகின்றார்கள்; அவர் பாட்டுக்களும் மக்களிடையே புகழும் பாராட்டும் பெற்றுச் சிறப்படைகின்றன; அவற்றைக் காண்போர் பலர் ஓதி மகிழ்கின்றனர்; பிறர்க்குரைத்து மகிழ்விப்பதும் செய்கிறன்றனர். அவர்களைக் காணும் அடிகளார், அவர் கலை உப்பில்லாத கறியை உண்டு வருந்துவோர் நிலைக்கு ஒப்பாம் என உரைக்கின்றார்.

 

2331.

     ஒப்பற்ற முக்கட் சுடரேநின்
          சீர்த்தி உறாதவெறும்
     துப்பற்ற பாட்டில் சுவையுள
          தோஅதைச் சூழ்ந்துகற்றுச்
     செப்பற்ற வாய்க்குத் திருவுள
          தோசிறி தேனும்உண்டல்
     உப்பற்ற புன்கறி உண்டோர்தந்
          நாவுக் குவப்புளதே.

உரை:

     முக்கண் பெருமானே, நின் புகழ் பொருளாக இல்லாத பாட்டில் சுவை சிறிதும் இருப்பதாக இல்லை; அதைப் பன்முறை பயின்று கற்கும் வாய்க்குச் சிறப்பு இல்லை. சிறிது உண்டு என்பதாயின், அது உப்பில்லாத கறியை உண்டவர் எத்தகைய சுவை எய்துமோ அதுவே யாகும் எ.று.

     இறைவன் நெற்றியிடத்து உள்ள கண் மூன்றுக்கும் ஒப்பும் உயர்வும் இல்லாமை பற்றி “ஒப்பற்ற முக்கட்சுடரே” என மொழிகின்றார். அப் பெருமான் புகழைப் பொருளாகக் கொள்ளாத பாட்டு சுவையும் பயனும் இல்லாத பாட்டு என்றற்கு, “நின் சீர்த்தி உறாத வெறும் துப்பற்ற பாட்டு” என உரைக்கின்றார். சுவை; சொற்சுவை பொருட்சுவை என்ற இருவகைச் சுவை; இவற்றைச் செவிச் சுவை என்பர் திருவள்ளுவர். பரிமேலகழர், சொற்சுவையைக் குணம் அலங்காரம் என இரண்டாக்கியும், பொருட்சுவையைக் காமம், நகை, கருணை, வீரம், உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என ஒன்பதாக்கியும் உரைக்கின்றார். (குறள். 420 உரை). துப்பு - சுவைக்கத்தக்க பொருள்; துப்பு, உணவுமாம். துப்பற்ற அத்தகைய பாட்டு எளிதிற் சுவைநல்கிப் படிப்பவர் உள்ளத்துக்கு அறிவும் ஒளியும் நல்காமையின், பன்முறையும் நினைந்து நினைந்து பலரோடு பயின்று கற்றல் வேண்டியிருப்பது பற்றி, “சூழ்ந்து கற்று” என்றும், அங்ஙனம் கற்ற வழியும் கேட்டார்க்கு விடையுரைக்கும் அளவுக்கு விளக்கம் எய்தாமையின், “செப்பற்ற வாய்” என்றும் தெரிவிக்கின்றார். நல்லனவுரைக்கும் வாய்க்கு உளதாகும் நலத்தைத் “திரு” எனச் சிறப்பிக்கின்றார். “திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்” எனத் திருநாவுக்கரசர் உரைப்பது காண்க. இதனை, “வாய் திருப்பொலிய நீறணிந்தேன்” என மாறிப் பொருள் கொள்ள வேண்டும்.

     சுவையற்ற பாட்டைப் படித்த வாய்க்குத் திரு இல்லை; உளதாயின் அத் திரு, உப்பற்ற பண்டத்தைத் தின்ற வாய்ப்போலச் சுவையற்றதாம் என்பதாயிற்று.

     இதனால், இறைவன் திருப்புகழைப் பொருளாகக் கொண்டு கலை நலமும் சுவைவகையும் பொருந்தப் பாடுவதே பாட்டு; அதற்கமைந்த பண்ணே பண்ணாகும்; பிற யாவும் சுவையற்ற பயன் விளையாத பாட்டுக்களாம்; அவற்றைச் சூழ்ந்து கற்பது பயனில் செயல் என்பது கருத்தாதல் அறிக.

     (161)