162

       162. திருத்தொண்டர்கள் பலர் நம் நாட்டில் வாழ்ந்து நலம் பெருக்கியுள்ளனர். திருத்தொண்டர் புராணத்தைப் படிப்பவர்க்கு, எத்தனை தொண்டர்கள் எத்தனை வகையாக இறைவனுக்குத் தொண்டு செய்து ஏற்றம் பெற்றுள்ளனர் என்பதைக் கண்டு இன்புற முடியும். சிவத்தின் திருவடியை நெஞ்சிற் கொண்டு செந்தமிழ் இன்னிசைப் பாக்கள் பல்லாயிரக்கணக்கில் பாடித் தமிழ் நாட்டில் ஊர்தொறும் சென்று சிவன் திருவருளைப்பரப்பினை பெருமக்களை வடலூர் வள்ளல் நெஞ்சில் நினைக்கின்றார். அவர்களுடைய திருப்பாட்டுக்களின் இசைநலமும் பொருள்வளமும் வள்ளலாரின் உள்ளத்தை உருக்குகின்றன. பொதுவாக நாட்டில் செந்தமிழ்த் தெய்வப்பாட்டு நலத்தை உள்ளவாறு செவியேற்று உள்ளத்தால் உறுசுவையுணர்ந்து இன்புறுவோர் தொகை இளைஞரிடையே மிகுதியாக இல்லை. அவர்களின் உள்ளங்கள் பெண்ணின்பத்தில் பேரீடுபாடு கொண்டு சுழலுவதையும் பார்க்கின்றார். பெண்ணலம் கனியப் பாடும் பாட்டுக்களை விரும்புவோர் தொகை மிகுதலையும் நோக்குகின்றார். அதே நிலையில் தக்கோர் பலர், சிவன் திருவருட் செல்வத்தை இன்னிசையால் வளமுறப் பாடிப் பரவிய நால்வர் தமிழை நயந்து மகிழ்வதைக் காண்கின்றார். அவற்றைப் பாடுவோர் பாட, கேட்டு மகிழ்வோர் மகிழ, செவிகொடுத்துக் கேட்போர், மேற்கொண்ட கடமைவீறு குறித்துப் பெயர்ந்து போக வேண்டியிருப்பினும், மனம் அப் பாட்டின்கண் தோய்ந்து கிடக்கச் செல்கின்றார்கள். அப் பாட்டிற் பிறக்கும் இன்பம் அவர்கள் மனத்தைப் பிணித்துக் கொள்கிறது. மக்கள் மனத்தைப் பிணித்துத் தன்பால் நிறுத்தம் ஆசை வகைகளில் பெண்ணாசை வலிமிக்கது என்பர். அதன் வலியும், நால்வர் ஓதும் செந்தமிழின் சுவையை நோக்க மிக்க மெல்லிதாய் இடையறுந்து போகிறது எனப் பாராட்டுகின்றார்.

2332.

     சேல்வருங் கண்ணி இடத்தோய்நின்
          சீர்த்தியைச் சேர்த்தியந்த
     நால்வரும் செய்தமிழ் கேட்டுப்
          புறத்தில் நடக்கச்சற்றே
     கால்வரும் ஆயினும் இன்புரு
          வாகிக் கனிமனம்அப்
     பால்வரு மோஅதன் பாற்பெண்
          களைவிட்டுப் பார்க்கினுமே.

உரை:

     சேல் போன்ற கண்களையுடைய உமாதேவியை இடப்பாகத்தில் உடையவனே, நின் மிக்க புகழைக் கூட்டி ஞானசம்பந்தர் முதலிய நால்வரும் செய்த தமிழ்இசைப் பாட்டுக்களைக் கேட்பவர்க்குப் புறத்தே சிறிது நடந்துபோதற்குக் கால்வருமாயினும், இன்புருவாகிக் கனிகின்ற மனம், பெண்கள் பக்கம் நயந்து ஈர்க்குமாயினும், செல்லாது காண் எ.று.

     சேல்மீன் போலும் கண்ணையுடையவள் என்றற்குச் சேல்வரும் கண்ணி என்றது ஒருவகை உவம வாய்பாடு. சீர்த்தி - மிகுபுகழ்; சிவபரம் பொருளின் சீர்த்தியை இசைகலந்த பாட்டுக்களாய் நாடு முழுதும் பரப்பிய ஞானத் தொண்டால் நிலைத்த புகழ்பெற்ற பெருமக்களாதலால், ஞானசம்பந்தர் முதலிய நால்வரையும், உலகறி சுட்டால், “அந்த நால்வரும்” என்று சிறப்பித்துக் கூறுகின்றார். செல்லுமிடந் தோறும் அங்கே எழுந்தருளும் சிவபெருமானைப் புதுப்புதுப் பாக்களைப் பாடிப் பரவி மக்களனைவரையும் மகிழ்வித்த மாண்பு குறித்து, “செய்தமிழ்” என்று பரவுகின்றார். அப் பாட்டுக்களை இசையிற் சேர்த்து பாடக் கேட்பவர் மனம் பாட்டில் தோய்ந்து இசையும் பொருளும் நல்கும் இன்பத்தில் திளைத்துச் செயலற்று நின்றாங்கு நிற்பிக்கும் நீர்மையுடையவாதலால், அந் நலமுடைமை விளங்க “புறத்தில் நடக்கச் சற்றே கால்வருமாயினும் மனம் அப்பால் வருமோ?” என்று கூறுகின்றார். நின்றாங்கு நின்றொழிவரே யன்றி நடக்க ஒருப்படார் எனப் பொருள் தருதலின் உம்மை எதிர் மறையாயினமை காண்க. நால்வர் எனப் பொதுப்படக் கூறினாரேனும் இசைப் பாடல்கள் என்ற வகையில் ஞானசம்பந்தர் முதலிய மூவர் பாடல்களை வேறாகவும், திருவாதவூரரின் பாடல்கள் இயற்றமிழ் வகையினை வாதல் பற்றி வேறாகவும் வைத்து ஓதுவது மரபு. பட்டினத்தார், தாயுமானவர் முதலியோர் “மூவர் தமிழ்” என்றே மொழிவது காண்க. இனிய பாட்டிசையில் தோய்ந்து தன்னை யிழந்து இன்புற்று மயங்கும் இளமை யுள்ளம், பெண்மயக்கம் படருமிடத்துத் தன் வலியிழந்து, அப்பெண் மயக்கிற் சென்றொழியும் என்பது உலகறிந்த செய்தி. இந் நால்வர் பாட்டுரையில் தோய்ந்த உள்ளம், அவ் வியல்புக்கு மாறாய்ப் பெண்ணின்ப மயக்கத்திற்கு மெலிந்து பின்னோடும் மென்மை எய்துவதில்லை என்றற்கு, “அதன்பாற் பெண்களை விட்டுப் பார்க்கினுமே” எனப் பிரிந்து உரைக்கின்றார். அதற்கு என்னோ காரணம் எனில், பாட்டிசை செவிவழி ஊறிச் சென்று சிந்தையில் தேக்கி இன்பநீர் பாய்ச்ச, பொருளும், அதனால் உள்ளத்தில் புலனாகும் காட்சியும் யாவும் இன்பவருவாய் மனத்தை ஞானவின்பத்தால் கனிவித்து உறைப்பு எய்துவித்தலின், “கனிமனம் அப்பால் வருமோ” என உரைத் தருளுகின்றார்.

     இதனால், நால்வர் தமிழின் அருட் பெருமை கூறி, அதன் வழி மனத்தை நிற்பித்து இன்புறுத்துவது பயனாதல் உணர்க.

     (162)