163

       163. சிவபிரானை திருவருளை வேண்டுகின்ற வடலூர் வள்ளல், அப்பிரானுடைய செயற்கருஞ் செயலையும், பகைத்தாரையும் அருளிக் காக்கும் அருட்செயலையும் எடுத்துரைக்கின்றார். அடியேனை நின்அருளுக்குரியனாக்கும் செயல் வலியது என்றோ, பகைமைப் பண்பு நிறைந்தது என இயல்பென்றோ கருதி விலக்குவது கூடாது என்றற்குப் போதிய எடுத்துக் காட்டுக்களைக் கூறி முறையிடுகின்றார்.

2333.

     கார்முக மாகப்பொற் கல்விளைத்
          தோய்இக் கடையவனேன்
     சோர்முக மாகநின் சீர்முகம்
          பார்த்துத் துவளுகின்றேன்
     போர்முக மாகநின் றோரையும்
          காத்தநின் பொன்னருள்இப்
     பார்முக மாகஎன் ஓர்முகம்
          பார்க்கப் பரந்திலதே.

உரை:

     பொன்மலையை வில்லாக வளைத்த பெருமானே, கடைப்பட்டவனாகிய அடியேன் சோர்ந்த முகத்துடன் நினது அழகிய அருளொழுகும் முகம் பார்த்து வாடுகின்றேன்; போர் செய்யும் கருத்தால் முகம் கறுத்து நின்ற அருச்சுனற்குப் பாசுபதம் தந்து காத்த நினது அழகிய அருள், இப் பூமியிடத்தே எனது ஒருமுகத்தைத் தானும் பார்த்தருளப் பரிவு கொள்ளவில்லையே, என் செய்வேன் எ.று.

     கார் முகம் - வில்; திரிபுரம் எரித்த காலைப் பொன்மலையாகிய மேருவை வில்லாக வளைத்த செய்தியைக் “கார்முகமாகப் பொற்கல் வளைத்தோய்” என்று கூறுகின்றார். கல் -மலை. “கல்லுயர் ஏறிக் கண்டனம் வருகம்” (குறுந். 275). சோர்முகம்: வினைத்தொகை. முகத்துக்குச் சீர் நல்குவது அருட்குறிப்பாதலால், அருளொழுகும் முகத்தைச் “சீர்முகம்” எனத் தெரிவிக்கின்றார். துவளுதல் - வாடுதல். “கண்ணார் தழையும் துவளத் தகுவனவோ” (திருக்கோ. 112) என வருவது காண்க. வேடர் கோலத் திருந்தமையின் அருச்சுனன் அறியாமல் போர் தொடுத்த வரலாற்றை நினைவிற்கொண்டு “போர் முகமாக நின்றோரையும் காத்த நின் பொன்னருள்” எனப் புகன் றுரைக்கின்றார். அருளின் அருமை பற்றிப் “பொன்னருள்” எனப் புகல்கின்றார். தேவர்கள் உலகையும் பிறவற்றையும் பார்த்திருக்கும் பரமனாகிய நீ, இப்பூமியிலும் பார்வையைச் செலுத்தி, என்போன்றோர் முகத்தையும் கண்டு அருள் புரிதல் வேண்டும்; அது செய்யாதிருப்பது வருத்தம் தருகிறது என்றற்கு, “என் ஓர்முகம் பார்க்கப் பரிந்திலதே” என முறையிடுகின்றார்.

     இதனால், தேவர்க்கும் பிறர்க்கும் அருட் பார்வை செய்து ஆதரவு புரிந்த இறைவன், இப் பாருலகில் தன் முகம் பார்த்து அருள்புரியாமல் இருப்பது முறையன்று என விண்ணப்பித்து வேண்டுதல் கருத்தாம் என்க.

     (163)