169
169. வாழப்பிறந்தவன் வாழ்க்கையில் எய்தும் துன்பத்தை எண்ணி வருந்துவதை விடுத்து, அதனை நுகர்ந்து
கழிப்பதே முறை; அதனை அறவே துடைத்தல் வேண்டுமென இரந்து நிற்பது ஏன்? என வள்ளலார் உள்ளத்தில்
எண்ணுகின்றார். துன்பம் தோன்றியபோது உள்ளம் வெதும்புகிறது; அதன் உள்ளுறையும் உயிருணர்வு
சோர்கிறது; உள்ளத்தைத் தாங்கி நிற்கும் உடம்பும் வலிதளர்ந்து மெலிகிறது. இதனால்
வாழ்விற் செய்யக்கடவனவும் நுகரக்கடவனவும் செய்யவும் நுகரவும் படாது குறையுற்று, மேலும் பல துன்பத்தை
விளைவிக்கின்றன. செய்வினையாலும் பயன்நுகர்தலாலும் எய்தற்குரிய அறிவு விளக்கம் எய்தாது உயிர்
துன்பத்தால் கடைப்படுதலால் மேலும் பிறப்பிறப்புக்கள் உண்டாதற்கு இடமேற்படுகிறது. மெய்யுணர்வு
தந்து பிறப்பிறப்புக்களின் தொடர்பறுத்தருளும் முதல்வனை நினையாமல், துன்பமே நினைந்து உயிரறிவு
அதனுள் அழுந்தி உழலுகிறது. திடம்படு மெய்யுணர்வு பெற்றுப் பிறப்பிறப்பில்லாத பெருநிலையை உயிர்
எய்துற் பொருட்டு உலகியல் வாழ்வை வழங்கிய பரம்பொருள், வாழ்விடைத் துன்பம் தோன்றி வாழவிடாது
அதற்குக் களைபோல் ஊறுசெய்தலால், அதனைக் களைந்து உதவுவது முறையாம் எனக் காண்கின்றார். “பிறப்பறுக்கும்
பிஞ்ஞகன்”, “அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவு” என்றும், “மெய்ஞ்ஞானமாகி
மிளிர்கின்ற மெய்ச்சுடர்” என்றும், “கரையிலாக் கருணைமாக்கடல்” என்றும் அறிந்தோர் உரைப்பன
நினைவில் எழுகின்றன. அதனால் அப்பெருமானுடைய அத் தன்மைகளைப் பரவி முறையிடுகின்றார்.
2339. இணையேதும் இன்றிய தேவே
கனல்இனன் இந்தெனுமுக
கணையே கொளும்செங் கரும்பே
பிறவிக் கடல்கடத்தும்
புணையே திருவருட் பூரண
மேமெய்ப் புலமளிக்கும்
துணையேஎன் துன்பந் துடைத்தாண்டு
கொள்ளத் துணிந்தருளே.
உரை: இணையில்லாத தேவ தேவனே, முக்கண்களையுடைய செங்கரும்பே, பிறவிக் கடலைக் கடப்பிக்கும் புணையே, திருவருள் நிறைவே, மெய்யுணர்வு நல்கும் அறிவுத் துணையே, என் துன்பத்தைத் துடைத்தற்குத் திருவுள்ளம் கொண்டருள்க எ.று.
இணை - ஒப்பு. இல்லாத என்ற பொருளில், இன்மை என்னும் பெயரடியாக வரும் இன்றிய என்ற குறிப்பு வினையாற் கூறுகின்றார். தேவு எனப் பொதுப்பட உரைத்தலால், தேவதேவன் எனப் பொருள் கூறப்படுகிறது. கனல் - நெருப்பு. இனன் - சூரியன். இந்து - சந்திரன். சந்திரன், சூரியன், நெருப்பு என்ற மூன்றையும் மூன்று கண்களாகவுடையவன் என்பர். மரங்களின் கணுக்களைக் கண்ணென்னும் வழக்குப்பற்றிக் கணுக்களையுடைய கரும்பை, “முக்கணையே கொள்ளும் செங்கரும்பே” என மொழிகின்றார். புணை - தெப்பம். 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் இறைவன் அடிசேர்ந்தார்' எனப் பெரியோர் பலரும் கூறுவர். “அறி நீர்மையில் எய்தும் அவர்க்கறியும் அறிவருளும் குறி நீர்மையர்” என ஞானசம்பந்தர் உரைத்தலின், “மெய்ப்புலம் அளிக்கும் துணையே” எனச் சொல்லுகின்றார். “துன்பம் அழித்து அருளாக்கிய இன்பன்” (ஞானசம்) எனப்படுதலால், “துன்பம் துடைத்து ஆண்டுகொள்ளத் துணிந்தருள்” என முறையிடுகின்றார். (169)
|