170
170. உலகில் வாழும் மக்கள் உண்பன உண்டு, உடுப்பவை உடுத்துச் செய்வன யாவை என்று சிந்தித்த
அறிஞர், ஒரு முடிவு கண்டுள்ளனர். அறிவன அறிவதும் செய்வன செய்வதும் என இரண்டுமே மக்களுயிர் செய்பவையென
அம் முடிவு தெரிவிக்கிறது. கண், காது மூக்கு முதலாய கருவிகள் ஐந்தும் உலகியற் பொருள்களை அறிவிக்கின்றன;
கை, கால் முதலிய ஐந்தும் உலகியற் பலவகைச் செயல்களைத் தொழில்களைச் செய்கின்றன. வாழும்
மக்களுயிர்கட்கு அறிவும் செய்கையுமல்லது வேறு வாழ்வில்லை என்று பொதுவகையில் நாம் காண்கின்றோம்.
சிந்தனையாளர்களும் இதைக் கருத்திற்கொண்டே கண் முதலிய ஐந்தையும் அறிகருவி (ஞானேந்திரியம்)
எனவும், கைகால் முதலியவற்றைச் செயற்கருவி (கர்மேந்திரியம்) என்றும் வகுத்து உரைக்கின்றார்கள்.
இருவகைக் கருவிகட்கும் வேறாய், இரண்டையும் இயக்கி அறிதலும், செய்தலும் செய்வதும் மனம்.
இதனைத் தமிழ் நூலோர் நெஞ்சம், புந்தி, உள்ளம் என்றெல்லாம் கூறுவர்.
இங்ஙனம் அறிவதும்
தொழில் செய்வதுமாகிய இரண்டையும் உயிருடைய ஒவ்வொருவரும் செய்தவண்ணம் இருக்கின்றனர். தொழில்
என்றும் செயல் என்றும் கூறப்படும். இவற்றைக் கற்றவர்கூட்டம் ‘வினை’ யென்று கூறுகிறது. மனத்தால்
நினைப்பதும் நினையாமையும், வாயாற் பேசுவதும் பேசாமையும், கைகால் முதலியவற்றால் செயல்புரிவதும்
புரியாமையும், கண்காது முதலியவற்றால் அறிவதும் அறியாமையும் வினையென்று சிற்றிலக்கணம் படிக்கும்போதே
சிறுவர்களுக்குப் பள்ளிகள் கற்பிக்கின்றன. தமிழில் உலகியல் இலக்கியங்களும் சமய இலக்கியங்களும்
வினையென்று கூறுவன அனைத்தும் முன்பு சொன்ன அறிவு அறியாமையும், செய்தல் செய்யாமையுமாகிய வினையே
யாகும். வினையெனவும் தொழில் எனவும் கூறப்படும் ஒன்றையே உலகியல் வழக்குத் தொழில் என்கிறது;
அறிவியல் வழக்கு வினை என விளம்புகிறது.
இவ் வினைகள்
வாழும் மனையின் கண்ணும், மனையின் புறத்தும் மக்களால் செய்யப்படுகின்றன; புறத்திலும் கட்டிடங்களின்
உள்ளிருந்தும் திறந்த வெளியிடங்களில் இருந்தும், திரிந்தும் மக்கள் தொழில் செய்கின்றனர்.
கால மாற்றத்தாலும், மக்கட் பெருக்கத்தாலும், வாழ்க்கை பற்றிய சிந்தனை வளர்ச்சியாலும்,
வாழ்வின் தேவைகள் பெருகிச் சூழ்நிலையைப் மாற்றிவிட்டன. அதனால் தொழில் வகைகள் எண்ணிறந்தனவாகப்
பெருக்கமடைந்துள்ளன. அறிவுத்துறையும் தொழில்துறையும் நாடோறும் விரிந்து கொண்டே போகின்றன.
இதனால் அறிஞர் கூட்டமும் வினைஞர் தொழிலாளர் கூட்டமும் எங்கும் பெருகியுள்ளது. அறிவு விரியவிரியத்
தொழில்வகை விரிவடைகிறது; அதற்கேற்ப வினை செய்யும் இடங்களும் விரிந்து வேறுவேறு உருவிலும் நிலையிலும்
அமைகின்றன.
வினை நிகழும் இடத்துக்கும்,
வினையின் வகைமைக்கும் ஏற்ப வினையாளர் உடையும் வேறுபடுகின்றது. குளிர்நிலத்து வினையாளர்
உடையும் வெப்பநிலத்து வினையாளர் உடையும் ஒரு தன்மையன அல்ல. கட்டிடங்கட்கு உள்ளே இருந்து வேலைசெய்யும்
தொழிலாளர் உடைக்கும் புறத்தே நின்றும் திரிந்தும் கிடந்தும் தொழில் செய்வோர் உடைக்கும்
வேறுபாடு வேண்டப்படுகிறது. சுருங்கச் சொன்னால் செய்யும் தொழில்வகைக்கேற்பத் தொழிலாளர் வேடம்
புனைகின்றனர். ஒவ்வொரு தொழிற்கும் ஒவ்வொரு வேடம் அமைந்திருக்கிறது.
ஒரு தொழிற்குரிய உடையை (வேடத்தை), வேறு தொழிற்குரிய
வினையாளர் பூண்பது இல்லை; அவ்வேடம் மேற்கொண்ட வினைக்கு இடையூறு செய்கிறது. மேலும், வெற்றாளாய்
இருப்பவன் மனம், வேலைக்குரிய ( தொழிலுக்குரிய ) வேடத்தை, ( உடையை ) அணிந்தவுடன் அதற்குரிய
நினைவும் செய்கையுமே நிறைந்துவிடுகிறது. இதனை நாடகங்களில் அரசவேடம் பூண்பவன் அதற்கேற்ப
நடிப்பதும், அவனே ஆண்டிவேடம் புனைந்தபோது அதற்கேற்பச் சொல்லும் செயலும் கொள்வதும் எல்லாரும்
நன்கறிந்தவை. இவ்வாறே ஆண்மகன் பெண் வேடம் கொள்ளினும், பெண்ணொருத்தி ஆண்வேடம் பூணினும்
நடிப்பு மெய்ப்பாடும் சொல்லும் செயலும் வேறுபடுவதைக் காண்கின்றோம். வேடத்துக்கேற்ப மக்களுக்கு
உண்டாகும் மனமாற்றத்தை ‘வேடநெறி’ என அறிஞர் அறிவிக்கின்றனர். “வேடநெறி நில்லார் வேடம்
பூண்டு என் பயன், வேடநெறி நிற்போர் வேடம் மெய் வேடமே” என்று திருமூலர் தெரிவிக்கின்றார்.
வேடந்தோறும் வேடநெறி வேறுபடுவதால் ஒரு தொழிற்குரிய வேடத்தை வேறு தொழிலாளன் மேற்கொள்வது
குற்றமென்றும், நெறிப்படுத்துவது அரசு முறையென்றும் கூறலுற்று, “வேடநெறி நில்லார் தம்மை விறல்
வேந்தன் வேடநெறி செய்தல் வீடதுவாமே” என்று திருமூல நாயனார் வற்புறத்துகின்றார். திருவேடநெறியை
நோக்கிய ஞானசம்பந்தர், இறைவன் திருவேடத்தைக் காட்டி, “அருந்தவத்தோர் தொழும் அடிகள்
அடிகள் வேடங்கள்”, “மானம் ஆக்குவ்வன, மாசுநீக்குவ்வன, துளக்கமில்லாதன, தூயதோற்றத்தன,
விளக்கமாக்குவ்வன” என்றும், வேட நன்னெறியை “விண்ணுலாவும் நெறி, வீடு காட்டும் நெறி, மண்ணுலாவும்
நெறி, மயக்கும் தீர்க்கும் நெறி” என்றும், “பங்கம் என்னப்படா புகழ்கள் என்னப்படும்” என்றும்
விரியக் கூறித் தெளிவித்தார். மெய்வேடம் போற்றற்குரியது என்ற கருத்தினால், சிவனடியார் திருவேடத்தைச்
சிவமென்றே தேறி வழிபடுக என மெய்ண்ட தேவநாயனார் அறிவுறுத்துகின்றார். இந்நாளிலும் நாடகத்திலன்றிப்
பிறகால இடங்களில் பொய்வேடம் பூண்டு திரிபவரை அரசு தண்டிப்பது, வேட நெறியை ஒருவகையில் வற்புறுத்தற்கே
எனத் தெளியலாம். கால மாற்றத்தால் வேடமும் வேடநெறியும் விலகிச் செல்லத் தலைப்பட்டமையின்,
வேடம் என்ற சொல் பொய்ப்பொருள் படுவதாகிவிட்டது. இந்நிலையில் சிவநெறித தொண்டு பூண்ட
மணிவாசகர், சிவபோக வாழ்வில் தமக்குண்டாகிய அன்பு மிகுதியை உலகியலில் வைத்து எண்ணி, “நாடகத்தால்
உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்”;
என் அன்பு உண்மையாம் வண்ணம் “இடையறா அன்பு உனக்கு என் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்” எனப்
பரவுகின்றார். இதே நினைவு வடலூர் வள்ளலாற்கும் எழுகிறது. தனது வேடமும் ஆண்மகன் பெண் வேடம்
பூண்டு திரிவது போல்கிறது; என் வேடம் மெய்வேடமும் நெறியும் மெய்ந்நெறியுமாக அருளுக என முறையிடுகின்றார்.
2340. நிலைகாட்டி ஆண்டநின் தாட்கன்பி
லாதன்பில் நீண்டவன்போல்
புலைகாட் டியமனத் தேன்கொண்ட
வேடம் புனைஇடைமேல்
கலைகாட்டிக் கட்டு மயிர்த்தலை
காட்டிப்புன் கந்தைசுற்றி
முலைகாட்டி ஆண்மகன் பெண்வேடம்
காட்டு முறைமையன்றே.
உரை: இறைவனே, நின் திருவடிக்கு உண்மையன்பு இல்லாமல், மிக்க அன்புடையவன்போல் புறத்தார் காணத் தோற்றும் மனமுடையனாகிய யான் கொண்டிருக்கும் வேடம் ஆண்மகன் பெண்வேடம் பூண்டு தோன்றும் முறைமையாக இருக்கிறது; மெய்யே அன்புடையனாக நிலவுமாறு அருள்க. எ.று.
உலகின் நில்லா இயல்பு கண்டு நிலைபேறுடையது திருவடிக்கீழ் பெறும் பேரின்ப வாழ்வே என உணர்வின்கண் காட்டி ஆட்கொண்ட குறிப்புத் தோன்ற, “நிலைகாட்டி யாண்ட நின்தாள்” என வுரைக்கின்றார். நிலையாதவற்றை நீக்கி நிலைத்த இன்பம் தரும் திருவருள் பெற்றவர் அதனிடத்தே நன்றியுணர்வால் பேரன்பு செலுத்துவது இயல்பு; யான் அந்த அன்பினைச் செய்திலேன்; செய்யாமையோடு, மெய்யன்பு மிகவுடையவன்போல் நினைத்துப் புறத்தார் பலரும் காணத் திரிகின்றேன். அங்ஙனம் திரியுமாறு என் மனம் என்னை இயக்குகிறது; “அதன் வழியில் உள்ளேன் என உரைக்கலுற்று,” தாட்கு அன்பு இலாது அன்பில் நீண்டவன்போலும் மனமுடையேன்” என்று புகல்கின்றார். பொய்த்தொழுகுதல் புலைத்தொழில் இனத்தைச் சேர்ந்ததாதலால் “புலை காட்டிய மனத்தேன்” எனக் கடிந்து கொள்கின்றார். பெண் கோலம் இனிது விளங்குதல் வேண்டிப் புனைவனவற்றைப் “புனையிடைமேல் கலை காட்டி கட்டு மயிர்த்தலை காட்டிப் புன்கந்தை சுற்றி முலைகாட்டி ஆண்மகன் பெண் வேடம் காட்டும் முறை” எனவுரைக்கின்றார். இல்லாத முலைக்காகக் கந்தையைப் பந்துபோல் சுற்றிக் கட்டுவது தோன்ற, “புன்கந்தை சுற்றி முலை காட்டி” என்று மொழிகின்றார். பொய்யன்பு கொண்டு நடிக்கும் குற்றம் உண்டாதல் கூடாது என முறையிடுவது இத் திருப்பாட்டின் பயன் என அறிக. (170)
|