172

      172. இறைவனது திருவருள் அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் இரண்டிலும் உடனாய் ஒன்றாயும் கலந்திருப்பது என ஞான நூல்கள் கூறுகின்றன; அந்த அருள்வெளியில் புவனங்களை அனைத்தும் ஒடுங்கியுறைகின்றன. அங்ஙனம் இருக்க, நாட்டு மக்கள் உள்ளத்தில் அருளொளி விளங்க நின்றாலன்றி மெய்யன்பர்களின் மெய்ம்மை இயல்புகளை அறிதல் அவர்கட்கு இயலாது என்பதைக் கேட்பவர்க்கு, அருள் வெளியிலே கிடக்கும்போது அதன் ஞானவொளி சிறப்பாக விளங்க வேண்டுமென்பது எற்றுக்கு? அஃது இன்றியே இன்பமாக வாழ்தல் இயலாதோ? என்ற வினாக்கள் எழுகின்றன. அதனை முன்னுற வுணர்ந்த வடலூர் அடிகள். அருளின்றேல், மனம் பொறிவழிச் சென்று துயர் நிறைவிக்கும்; நல்வாழ்வு அமையாது; குணங்கள் செம்மையுறா;

பிறவி அடுத்தடுத்துப் போந்து வருந்தும்; உயிரறிவை மறைக்கும் மலம் நீங்காது என்று உரைக்கின்றார்.

 

2342.

     நயப்படும் ஓர்நின் அருளெனக்
          கின்றெனில் நாய்மனமென்
     வயப்படு மோதுயர் மண்படு
          மோநல்ல வாழ்வைஎன்னால்
     செயப்படு மோகுணம் சீர்ப்படு
          மோபவம் சேரச்சற்றும்
     பயப்படு மோமலம் பாழ்படு
          மோஎம் பசுபதியே.

உரை:

     பசுபதியே, எல்லாராலும் விரும்பப்படும் ஒருவனாகிய நினது திருவருள் எனக்கு இல்லையாயின் நாய்போல் அலையும் இயல்பினதாகிய மனம் என் வழி நில்லாது; துயர் வகைகள் ஒழிதற்கு இடமில்லையாம்; என்னால் நல்ல வாழ்வை நடத்த முடியாது; என் குணங்கள் சீர்ப்படா; அதனால் பிறிவித் துன்பங்கள் அடுத்தடுத்து வந்தவண்ணம் இருக்கும்; அறிவை மறைக்கும் மலமும் கெடாது நிலைபேறு கொள்ளும்; யான் என் செய்வேன். எ.று.

     “உரையுணர் விறந்த ஒருவ போற்றி” என்றும், “ஒழிவற நிறைந்த ஒருவ போற்றி” என்றும் சான்றோர் போற்றுதலால், “ஓர்நின்” என்று அடிகளார் உரைக்கின்றார். 'ஓர் நின் நயப்படும் அருள்' என இயையும், இறைவன் திருவருளை எல்லாவுயிரும் விருப்புதல்பற்றி “நயப்படும் அருள்” என்று கூறுகின்றார். அவ்வுயிருள் ஒருவனாதலால் யானும் நயக்கின்றேன் என்பது குறிப்பு. நயத்தல் - விரும்புதல்; எல்லா வுயிர்க்கும் எல்லாப் பொருட்கும் திருவருள் பொதுவகையில் இடமாயினும் சிறப்புவகையில் ஞானவொளியாய் நின்று நலந்தீங்குகளைக் காட்டி உய்தி பெறுவிப்பது பற்றிச் சிறப்பருளே இங்கே அருள் எனக் காட்டி உய்தி பெறுவிப்பது பற்றிச் சிறப்பருளே இங்கே அருள் எனக் குறிக்கப்படுகிறது. இறைவனை அறிதற்கும் அறிந்து அவன் தாளை வணங்குதற்கும் அவன் அருளே துணையென்பது சான்றோர் பேருரை. “அவன் அருளே கண்ணாகக் காணினல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே” என்று நாவுக்கரசரும், “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று வாதவூரடிகளும் கூறுகின்றனரன்றோ? திருவருள் கைவருமாயின், பொறிபுலன்களின் வழிச்சென்று பல தலைப்பட்டுத் திரியும் மனம் அறிவின் வழி ஒருங்கி, நிற்கும், “பொறி புலன்களின் போக்கறுத்து உள்ளத்தை நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள், அறிப்புறும் அமுதாயவன் ஏகம்பம், குறிப்பினாற் சென்று கூடித் தொழுதுமே” என்பர் திருநாவுக்கரசர். மனம் ஒருமைப்படின் சிந்தைக்கண் சிவனருட் செந்தேன் பெருகி இன்பம் செய்யும்; துன்பம் நெருங்குதற் கிடனின்றிக் கெடுமாதலால், “துயர் மண்படுமோ” என்று அவலிக்கின்றார். மண்படுதல்-கெட்டழிந்து மறைந்து போதல்; “எண்ணத்தில் மண் விழுந்தது” என்றாற்போல. அருளொளியால் அறிவின்கண் தெளிவும் நெஞ்சின்கண் இன்பமும் உடைய வாழ்வினும் நல்வாழ்வு பிறிதில்லையாகலின், “நல்ல வாழ்வை என்னால் செய்யப்படுமோ” என்று வள்ளலார் வாய் விட்டுரைக்கின்றார். “எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவி கண் என்றிவை நின்கணே வைத்து மண்ணின்மேல் வாழ்வதே நல்வாழ்வு” என மணிவாசகப் பெருமான் வரைந்து கூறுவது காண்க. திருவருளால் இத்தகைய நல்வாழ்வு அமைந்துவிடின், பிறவிக்கேதுவாகிய குணமும் செயலும் அறவே இல்லையாம் என்பதை வற்புறுத்தவே, “குணம் சீர்ப்படுமோ, பவம் சேரச் சற்றும் பயப்படுமோ” என்று கூறுகின்றார். வாழ்வுக்குரிய மனமொழி மெய்களாகிய கருவிகள் குணதத்துவத்தின் வழி நிற்பனவாகலின் 'குணம் சீர்ப்படுமோ' என அஞ்சுகின்றார். தில்லையில் சிவபரம்பொருளின் திருகூத்தைக் கண்டபோது, நம்பியாரூரர் எய்திய சிவபோகப் பெருவாழ்வை எடுத்துரைக்கும் சேக்கிழார் பெருமான், “ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள, அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக” எனக் கருவிகளையும் கரணங்களையும் அவற்றின் மேலுள்ள குணத்தையும் முறைப்படுத்தி உரைப்பார்; அம்முறையிலேயே அடிகளாரும் இத்திருப்பாட்டில் முதற்கண் மனத்தையும், இறுதியில் குணத்தையும் உரைக்கின்றார். பவம் - பிறப்பு; ஈண்டு அது பிறவித் துன்பத்தின் மேற்று. திருவுடை அருள்வாழ்வும் அருட்குணமும் ஒருவர்பால் அமையுமாயின் பிறப்புத் துன்பம் விளக்கற்றம் காணாது அஞ்சி நீங்கும் இருள்போல மாய்ந்து கெடும் என்பாராய், “பவம் சேரச் சற்றும் பயப்படுமோ” என எடுத்துரைக்கின்றார். பிறப்புத் தோன்றுதற்கு மூல காரணம் மலம்; அதன் மறைப்பில் இருக்குங்காறும் பவமாகிய பிறப்பு அறாது; அதனால்தான் வடலூர் வள்ளல் அதனை இறுதிக்கண் வைத்து “மலம் பாழ்படுமோ” என்று ஏங்குகின்றார். மலம் பாழ்படுதல் அதன் மறைக்கும் ஆற்றல் கெட்டு வறுத்த வித்துப் போலுதல்.

     இதனால், அருள் இன்றாயின் மலம் கெடாது, பிறவித் தொடர்பு நீங்காது, நல்வாழ்வு எய்தாது என்று அறிவுறுத்துவது பயன் என உணர்க.

     (172)