173
173. இல்லாதவர் இரத்தலும், உடையவர் ஈதலும், மக்களுலகில், என்றும் உள்ளதோர் இயல்பு. இரப்பவருள்ளும்
உழைத்து வாழ்தற்கு வழியில்லாத வகையில் உறுப்புக் குறைபட்டாரும், மூத்து முதிர்ந்தோரும் இரப்பது
முறை; உழைக்கும் திறுமுடையவர் இரத்தலை மேற்கொள்வாராயின், உடையவர் அவர்க்கு ஈவது மக்களிடையே
மடிமையை வளர்க்கும் அறமல்லாத செயலாகும். அதன் வளர்ச்சி நன்மை விளையும் நன்புலத்தில்
களையை வளர்க்கும் கொடுமையாகும். உழைப்புக்கு வாய்ப்பின்மையால் வறுமையுறுவோர்க்கு வாய்ப்பளித்து
உதவுதல் செல்வமுடையார்க்குச் சீரியதோர் அறமாகும். செல்வர் அதனைச் செய்யாதொழிவது, செல்வத்தைச்
சீரழிக்கும் பகைக் கூட்டத்தை வளர்ப்பதோர் பண்பில் செயலாகும். இதனை எண்ணியே, ஈதலும்
இசைபட வாழ்தலும் செல்வர் செல்வத்தால் பெறும் ஊதியம் என்று திருவள்ளுவர் சிறக்கவுரைத்தார்.
உடல் வருந்த உழைப்பதுதான் உழைப்பு என்பது அறியாமை. அறிவுத்துறையிலும் கலைத்துறையிலும் நிகழும்
உழைப்பும் உழைப்பாகும். இங்ஙனம் அறிவு, கலை, தொழில் ஆகியவற்றால் நடைபெறும் உழைப்பு நாட்டில்
பொருளை விளைவித்து, மக்கள் வாழ்வைச் சிறப்பிக்கும் சீர்மையுடையதாகும். உழவுமுதல் ஞானச் செல்வம்
வேண்டி யோகம் புரிவது ஈறாக யாவும் உழைப்பின் வகைகளாகும். அதனால்தான் “உழைப்பின் வாரா
உறுதிகள் உளவோ” என்று வினவுகின்றார், உலக வாழ்வைப் பற்றறத்துறந்த பட்டினத்தடிகள்.
உழைப்பால் உயர்ந்த
செல்வர் உள்ளம் செம்மை நிறைந்த திருவுடையதாகும். அவர்களுடைய உணர்வும் மொழியும் உழைப்பின்
வெம்மையால் ஒளி மிக்கு விளங்கும். சோம்பலுள்ளத்தில் தோய்ந்து தீய நினைவுகளைத் தோற்றுவிக்கும்
மடிமையிருள் உழைப்பால் மிக்கொளிரும் உள்ளத்தின் ஒளிமுன் நில்லாது; இடையறாது சுழன்றோடும்
இருப்புருளையில் துருப்பிடிப்பதில்லாமையோடு ஒளி குன்றாது நின்று திகழக் காண்கின்றோமன்றோ?
உ.ழைப்பால் ஒளிபெறும் உள்ளத்தில் இருளும் அறமும் அன்பும் பண்பும் சேர இருந்து, திருநாவுக்கரசர்
கூறும், “திருநின்ற செம்மையை”ச் செய்து கொண்டிருக்கும். சிறியோர் உள்ளத்தின் சிறுமை கண்டு
பற்றித் தன்னடிப்படுத்திச் செருக்காகிய இருட்கிணற்றில் தள்ளிக் கீழ்மைப்படுத்தும் செல்வம்,
உழைப்பிடை யுயரந்த உள்ளத்தின் மாண்புக்கு அடிமைப்பட்டு ஏவின செய்யும் அடிமையினும் அடிமையாய்ப்
பணிசெய்யும். பணிவு பெருமை தருவதால் உழைப்பால் உயர்ந்தோரை அடைந்த செல்வம், அவர் ஏவல்
வழி நிற்கும் செயலால் அருட்செல்வம் என்று இசைபெறுகிறது; சிறியோரைச் சேர்ந்து அவர் உணர்வை
ஏவல் கொள்ளும் செல்வம் நன்றியில் செல்வம் என்ற வசை பெறுகிறது.
அறத்துறையில்,
உழைப்பால் உயர்ந்தோருள், ஞானத்துறையில் அயராது உழைத்துப் பெருஞானச் செல்வராகிய திருமூலர்.
அந்நாளில் ஞானியர் சூழலிற் பல்கிக் கிடந்த ஞானங்கள் பலவற்றையும் தொகுத்து “தான் பெற்ற
இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற கருத்தினராய்த் திருமந்திரம் என்ற பெயரால் நாட்டவர்க்கு
நல்கினார்; அவரைப் போலவே திருஞான சம்பந்தர் திருநாவுக்கரசர் முதலியோர் திருப்பாட்டுக்களாக
அள்ளி வழங்கினர்.
பொருள் துறையில்
பொய்ம்மையின்றி உழைந்து மேன்மையுற்றோர் அன்பும் அருளும் நிறைந்த உள்ளத்தினராய், கல்விச்
செல்வத்தையும் கலைசெல்வத்தையும், வாழவகையில்லோர்க்குத் தொழில் தந்து வாழ்க்கைச் செல்வத்தையும்
வழங்கினர். உரிமையமைந்த வாழ்வு வேண்டி உடல் பொருள் உயிர மூன்றையும் தந்துதவிய செல்வரும்
உண்டு.
அப் பெருமக்களைக்
காண்டற்கும் அவர் சொற்களைக் கேட்டற்கும் அவரோடு இணங்கியிருத்தற்கும் பன்னூறாயிரம் மக்கள்
மொய்ப்பதுண்டு; மொய்த்ததுண்டு. அவர்கள் தாம் காண்பதோடு தம்மை அவர்கள் காண்பது பெருநலம்
தருவதென்று பேணி விரும்பியவர் எண்ணிறந்தோர்.
அறமும் அன்பும்
அருளும் நிறைந்த உலகப் பெருமக்களைக் காண்டற்குப் பன்னூறாயிர மக்கள் விரும்புவ ரெனின், அறமும்
அன்பும் அறிவும் அருளுமே உருவாய் அமைந்த சிவபெருமானைக் காண்பதற்குப் பல்லாயிரங்கோடி மக்களும்
விரும்புவர். பரஞானிகட்கன்றிக் காணவொண்ணாத அப் பரமனைக் கண்டு அருள்பெற முயல்கின்றார்,
வடலூர் வள்ளல். தான் அவனைக் காண இயலாதாயினும், தன்னையேனும் அப்பெருமான் கண்டருளவேண்டுமென
விரும்புகின்றார். அவனது அருட்பார்வை தன்மேற் பட்டாலும் போதும் என நயக்கின்றார். உலகியற்
பெருஞ்செல்வர்கள் தம்மை அருளி நோக்குவாராயினும், வெகுண்டு நோக்குவராயினும், நோக்கம் தம்மேற்பட்டால்
போதும் என எண்ணுவது உலகமக்களின் பொதுப்பண்பு. அப்பண்பினாலே வடலூரடிகள், எனது அவல நிலை கண்டு
அன்பு கொண்டாலும், இந்நிலையை எய்துதற் கமைந்த என் குற்றம் கருதி வன்பு கொண்டு வெறுத்து நோக்கினாலும்
அதன் பயனாக யான் உற்ற வருந்தும் துன்பத்தின் கொதிப்படங்கும் என்ற எண்ணத்தால் ஏங்கிப்
பாடுகின்றார்.
2343. சோபங்கண் டார்க்கருள் செய்வோய்
மதிக்கன்றிச் சூழ்ந்திடுவெந்
தீபங்கண் டாலும் இருள்போம்இவ்
வேழை தியங்கும்பரி
தாபங்கண் டாய்அருள் செய்யாதென்
குற்றந் தனைக்குறித்துக்
கோபங்கண் டாலுநன் றையாஎன்
துன்பக் கொதிப்பறுமே.
உரை: ஞானத்தால் சிவசொரூபத்தைக் கண்ட பெருமக்களுக்கு அருள் புரியும் சிவபெருமானே, நிலவின் ஒளிக்கு மாறுபட்டு முற்றவும் நீங்காமல் சூழ்ந்து நிற்கும் இருள், சுடுகின்ற சிறுவிளக்கின் ஒளி கண்ட மாத்திரத்தே நீங்கிவிடும். அதுபோல் ஏழையாகிய யான் உற்று மயங்கும் இரக்கநிலை கண்டு அருள் சிறிது புரிந்தவழி நீங்கிவிடும்; அதனைச் செய்யாமல், இதற்குக் காரணமான குற்றமிகுதிபற்றி நீ வெகுண்டு நோக்கினாலும், அந் நோக்கத்தால் என் துன்பத்தின் வெம்மை தணியும் எ.று.
சிவ நெறியில் ஆன்மதரிசனம் பெற்ற சிவஞானிக்கு, ஆன்ம சுத்திக்கண் சிந்தையில் தோன்றும் 'சிவசோபை', இங்கே சோபம் எனப்படுகிறது. இதனை ஆத்ம சுத்தியைப் பயப்பிக்கும் சிவ தரிசனத்தில் விளங்கும் சிவப்பிரபை என்பதும் உண்டு. சிவதரிசனமும் ஆன்ம சுத்தியும் உடனிகழ்ச்சியாதலின், “சோபங்கண்டார்க்கு அருள் செய்வோய்” என்று கூறுகின்றார். அறிவுப் பேற்றுக்குப் படிமுறையில் அமைந்த கேட்டல், சிந்தித்தல், தெளிதல் என்ற மூன்றாலும் முறையே தத்துவக் கூறுகளைக் கேட்பது தத்துவ வுருவம் என்றும், அவற்றைச் சிந்திப்பது தத்துவக் காட்சி யென்றும், அவற்றின் வேறாயது ஆன்மா எனத் தெளிவது தத்துவ சுத்தி யென்றும் கருதப்படும். தத்துவத் தொகுதியின் வேறு எனத் தெளியப்பட்ட ஆன்மாவின் உண்மை நிலையைக் காண்பது ஆன்ம ரூபமமாகும்; அந்நிலையில் சிவப்பிரபை தோன்றி ஆன்ம தரிசனம் செய்விக்கும். அங்கே சிவம் தோன்றித் தன்னைக் காண்பிக்கு முகத்தால ஆன்மசுத்தி எய்துவிக்கிறது. ஆன்மசுத்தியும் சிவதரிசனமும் முன்பின் அன்றி உடனிகழ்வதால், ஆன்மா சிவயோக போகங்கட்குச் செல்லுகிறது. இதுவே 'தசகாரியம்' எனவும் ஈரைஞ்செயல் எனவும் சைவநூல் கூறுவதாம். இதனை இத்துணை நுணுக்கமாகக் காண்பார்க்கு மயூர நிருத்தனம் என்னும் முறைமைபற்றி, சிவநெறியில் வன்மையாக ஊன்றிக் கொண்டு, ஏனைப் பல்வேறு சமயங்களையும் சமநோக்குடன் நன்கு மதித்துச் சமரசம் பேசுகின்றார் வடலூர் வள்ளலார் என்பது தெளிவாகும். 'மதிக்கு அன்றிச் சூழ்ந்திடும் இருள்' என இயைக்க. அன்றுதல் - மாறுபடுதல். தியங்குதல் - அறிவு மயங்குதல். பரிதாபம் - இரங்கத்தக்க மெலிவு. பரிதாபம் கண்டு சிறிதே அருள் செய்க என்பார், 'கண்டாய்' என முறையிடுகின்றார். முறையீடெல்லாம் சுருக்கமும் விளக்கமுமுடையதாக இருத்தல் முறையாகும். தியங்கும் பரிதாப நிலை எய்தியதற்குக் காரணம் குற்றம் என்பது. அதுகொண்டு கோபமுற்று நோக்கினாலும் போதும்; அந்நோக்கத்தில் இயல்பாகவே நிறைந்திருக்கும் அருளால், துன்பக் கொதிப்படங்கும் என்பார், அருள் செய்யாது என் குற்றம் குறித்துக் கோபம் கொண்டாலும் என்னாமல், கோபமுற்று நின் கண்ணால் நோக்கினாலும் என்று பொருள் அமையுமாறு “கோபம் கண்டாலும்” என உரைக்கின்றார். சுடுவது துன்பத்துக்கு இயல்பு. “துன்பம் சுடச்சுட நோற்கிற்பவர்க்கு” என வரும் திருக்குறள் காண்க.
இதனால், இறைவனே, நீ அருளி நோக்கினும், வெகுண்டு நோக்கினும், அந் நோக்கம் அருட்பயனே பெறுவிக்கும் என முறையிடுகின்றார். (173)
|