174

      174. இறைவன்பால் அன்புடையாரை இறைவன் என மதித்து வழிபடுவது அறம் எனத் தெய்வநெறிச் சமயங்கள் பன்னூறாண்டுகளாக வற்புறுத்துகின்றன. இறையன்புடையார் அவ்விறைவனை நினைந்த வண்ணமிருத்தலால், அவர் நெஞ்சம் இறைவற்குக் கோயிலாகிறது; இறைவன் அதன்கண் இடையறவின்றி எழுந்தருளுகின்றான். இறைவன் திருக்கோயிலைக் கண்ட மாத்திரையே அவனது இருப்புணர்ந்து வழிபாட்டு நினைவு எழுவதும், கைகள் தாமே குவிவதும் இயல்பாக நிகழ வேண்டும் என்பர். அவ்வாறே இறையன்புடையாரைக் காணும்போது அவர் திருமேனியும் இறைவனுறையும் திருக்கோயில் என்ற உணர்வெழுந்து உள்ளத்தில் நிறையவும், உடம்பும் அவரை வழிபடுதற்கு விரையவும் வேண்டும். இந்நெறியில் நின்று பயின்ற சான்றோர் அன்பர் வழிபாடு ஆலய வழிபாடு போலும் அருமையுடையது என்றனர். “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்ற திருமூலர், வருவாரை மகிழ்வொடு வாய்திறந்து வருக என வரவேற்கும் கோபுர வாயில்போல நமக்கு வாய் அமைந்துளது என்பாராய், “வள்ளற் பிரானார்க்கு வாய் கோபுர வாயில்” என வுரைக்கின்றார்.

 

      இனி, திருநாவுக்கரசர் முதலியோர் சிவன் திருவடிக்கண் பதிந்த நெஞ்சுடையவர் அடியராவர்; அவர் சிவனுக்குரிய தொண்டுகளையே புரிவதுபற்றித் தொண்டர் எனப்படுவர்; அத் தொண்டு சிவம் கலந்திருத்தலால், அத் தொண்டர்க்குத் தொண்டராய் வணங்கி வழிபாடு செய்வது சிவபுண்ணியம் என்ற கருத்துப்பட, “சிலம்பலம் பாவரு சேவடியான் திருமூலட்டானம், புலம்பலம் பாவரு தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம்” எனவும், “திண்ணிய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானன், எங்கள் புண்ணியன் தன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே” எனவும் விளக்கினர். தொண்டர்க்கு அன்பு செய்யும் தொண்டு துன்பத்துக் கேதுவாகிய தீவினைகளைத் துடைத்தெறியும் என்பது தோன்ற, “விண்டொழிந்தன தம்முடை வல்வினை, இறைவனை, மங்கையோர் பங்கனை, வலஞ்சுழி இடமாகக் கொண்ட நாதன் மெய்த் தொழில்புரி தொண்டரோடு இனி திருந்தமையாலே” எனத் திருஞானசம்பந்தரும் எடுத்துரைக்கின்றார். தொண்டராயினார்க்குச் சாதியின சமய வேற்றுமைப் பகுப்பு இல்லை. இந்நாளில் சைவ சமய நிலையங்களில் அவ்வேற்றுமை புகுந்து சைவம் இறந்துபடவும், சைவர் ஒருமை சிதைந்து வறுமைக்குரியராய்க் கெட்டழியவும் செய்துவிட்டது. அதனால் மண்ணில் “தொழப்படுந் தேவர் தொழப்பட” விளங்கிய சைவர், அத்தேவராம் அவர்களைத் தொழுது வணங்கி அழுது தொலையும் அடிமை நிலையை அடைந்தனர். சிவநெறியன்பும், சேர்ந்து தொழுது  சிவம் பெருக்கும் ஒழுக்கமும் இடம் கொண்டிருந்த சைவ வுள்ளத்தில், அழுக்காறும் அவாவும் நிலை கொண்டன. தீயவர் பலர் சிவவழிபாடும் சைவ நூல் அறிவுமுடையாய்த் தோற்றம் செய்து சாதியினவுணர்வென்னும் நஞ்சு புகுத்திச் சென்ற காலத்தின் பழுதிலாத் திறத்துக்கும் எதிர்காலத்தின் சிறப்புக்கும் கேடு செய்தனர். இவ்வாற்றால் சிவநெறி பேணிச் சைவவொழுக்கம் தலைக்கொண்டொழுகும் சால்பு உடைந்தொழிந்தது. சிவனடியாரை நயப்பதும், சிவத்தொண்டை வியந்து சிறப்பித்துப் போற்றுவதும் சைவரிடத்தே தேய்ந்து போயின.

 

      இந்த இழிநிலையை, சென்ற நூற்றாண்டிலே தலைதூக்கிய கொடுமையை வடலூர் அடிகள் கண்டு வருத்தம் மிகுந்தார். இவ்வவலத்துக்குரிய காரணத்தை ஆராய்ந்தார். சிவவேடம் புனைந்து, சைவநூற் கருத்துக்களை மொழிந்து “சிவத்துரோகம்” செய்யும் சிற்றினம் பெருகிச் சிறப்பும் செல்வாக்கும் பெறுதற்கு இடம் தந்தது திருமுறைகளையும் சிவாகமங்களையும் கல்லாமை என்பது கண்டார். கற்றாங்கு நிற்கமாட்டாதார் பல நூல்களை ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் பெரியராயினோர் கல்லாத பேதையரே யாவர். அவரது பேதைமை பெருமை பெற்றதற்கு காரணம் “மனம் முகிழ்த்த சுருள்நீக்கி மலர்விக்கும்” கல்வியைப் பொதுமக்கள் கற்றலைச் செய்யாமை என்பது தெளிவாயிற்று. குறைபட்ட கல்வியும், மிடிபட்ட வாழ்க்கையும் உடையோர் கூட்டம் அப் பேதைகளின் அடிக்கீழ் ஒதுங்கி அழிவு வேலைக்கு ஆக்கம் செய்தது. அருள் அமைந்த கலைவியும், பொருள் அமைந்த வாழ்வும் இல்லாமை காரணமாதல் வள்ளற் பெருமான் திருவுள்ளத்தில் தெள்ளத் தெளியப் புலனாயிற்று. உருவுடைய பொருளாயின் மெய்ம்முயற்சியாலும் தொழிலாலும் திருத்தலாம்; அருவாகிய மனத்தைத் திருத்துதற்குத் திருவருள்தான் துணை. அதனால் சிவன்பால் முறையிடுகின்றார்.

2344.

     எல்லா முடைய இறையவ
          னேநினை ஏத்துகின்ற
     நல்லார் தமக்கொரு நாளேனும்
          பூசை நயந்தியற்றிச்
     சொல்லால் அவர்புகழ் சொல்லாதிவ்
          வண்ணம் துயர்வதற்கென்
     கல்லாமை ஒன்றுமற் றில்லாமை
          ஒன்றிரு காரணமே.

உரை:

     எல்லாமுடைய இறைவனே, நின்னை ஏத்தும் நல்லார்க்குப் பூசை செய்து, அவர் புகழைச் சொல்லாமல் இவ்வாறு துயரப்படுதற்குக் காரணம் கல்லாமை, இல்லாமை என்ற இரண்டுமல்லது வேறில்லை. எ.று.

     உலகங்களையும் அவற்றினுள் உள்ள பொருள்களையும், உயிர்கள் தங்கும் உடம்புகளையும் உடம்பின் உள்ளுறு கருவி கரணங்களையும் படைத்து அளித்தவனாதலால், இறைவனை, “எல்லாம் உடைய இறைவனே” என்று குறிக்கின்றார். உலகுடல் பொருள்போல உயிர்கள் படைக்கப்படுவன அல்ல. “என்று நீ அன்று நான்” என்பது உயிரியல் புரைக்கு உண்மையுரை. உயிர்கட்கென உலகுடல் வாழ்வு படைக்கப் பட்டது; உலகில் உயிர்களை வாழச்செய்த இறைவன், வாழும் உயிர்கள் செய்யும் வினைக்குரிய பயன்களை நுகரச் செய்கின்றான், பயன்கள் தாமே சென்று உயிரையடையவதோ, உயிர் தாமே அப்பயன்களை அறிந்து நுகர்வதோ இல்லையாதலால் பயன்களை அறிந்து செய்த உயிர் ஒழுங்காக நுகருமாறு ஊட்டுவதுதான் இறைவனது இறைமை. அதனால்தான், “எல்லாம் உடையவனே” என்று மொழியாமல், “எல்லாம் உடைய இறையவனே” என்று வள்ளலார் வாய் மலர்கின்றார். “அவ்வினையைப் பேராமல் ஊட்டும்” பிரானின் நுகர்வர் எனச் சிவஞானபோதம் கூறுவது காண்க. இறைவனை ஏத்துவதுபோல எவர்க்கும் எப்பொருட்கும் இடுக்கண் விளைவிக்காத நற்செயல் வேறு உலகில் இல்லாமையால், ஏத்துவோரை “நல்லார்” என உரைக்கின்றார். பூசை - வழிபாடு; இது பழைமை வாய்ந்ததொரு தமிழ்ச்சொல்லெனப் பேராசிரியர் ஜான் சார்பெண்டியர் ஆராய்ந்து கூறியுள்ளார். (இண்டியன் ஆண்டிக்குவாரி. தொ. 6. பக். 93. மே. 1927.)

     நன்மதிப்புடன் வரவேற்று ஓம்பும் செய்கை பூசையென்ற கருத்துப் படப் பரிமேலழகர், “தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார்” என்ற குறட்பா வுரையில், “தாம் இன்புறுதலாவது நிகழ்வின்கண் சொற்பொருள்களின் சுவை நுகர்தலானும், புகழ் பொருள் பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும் அதனான் இடையறாத இன்பம் எய்துதல்” எனவுரைப்பது நோக்கத்தக்கது. கல்லாமை - மனவுணர்வை வளர்க்கும் கலைநூல் கற்றலைச் செய்யாமை. வயிறு வளர்க்கும் கருத்தே கற்பவர் கற்பிப்பவர் நோக்கமாயினமையின் உண்மைக் கல்வியைக் கற்பது இல்லையாயிற்று; அதனால் கற்ற கல்விக்கும் செய்வினைக்கும் தொடர்பற்றமையால், கற்றாங் கொழுகுவோர் நாட்டில் குன்றினர். மனவுணர்வு கல்வியால் உரம்பெறாமையால் போலிக்கல்வி புகுந்து தொழிற்கிடையே உயர்வு தாழ்வு தோற்றுவித்துப் பொருள் மிகுவிக்கும் தொழிலைப் புறக்கணிக்கச் செய்தமையால், நாட்டில் “பொருளில்லாமை” தலைமையிடம் பெற்றது. நாடு முற்றும் வறுமை நாடாயிற்று. அறிவு இவ்வாறு அறைபோகியதால் இறையன்புடையாரை ஏத்தி, திருவருட் செந்நெறிச் சிவம் பெருக்கும் செம்மை தவறிவிட்டமை தோன்ற, “இவ்வண்ணம் துயர்வதற்கு என் கல்லாமை ஒன்று, மற்றும் இல்லாமை ஒன்று, இரு காரணம்” என வழக்கம்போலத் தம்மேல் ஏற்றி வள்ளலார் உரைக்கின்றார். துயர்வதற்குக் கல்லாமை ஒன்று இல்லாமை ஒன்று இரு காரணமாம் என முடிக்க. “பெயர்க்குரிய மறவின் செவ்வின் இறுதி” “தொகையின்றியலாது” (தொல்) என்பது பற்றி இரு காரணமே என்று பாடுகின்றார். இவை நீங்க அருள்க என்பது இப்பாட்டின் பயன்.

     (174)