175
175. அருள்புரிதல் வேண்டும்; அருட்கு இடம் இறைவன் என எண்ணி முறையீடு செய்கின்றோம். அருட்பேற்றுக்கு
ஏற்ற அறிவும் செயலும் நம்பால் அமைந்திருக்க, அவனையே நினைந்து புலம்புவது நன்றாகாதென நன்னெஞ்சுடைய
நல்லறிஞர் உரைக்கின்றார்கள். அதுவும் நன்கு சிந்திக்கத்தக்கதே. சிந்தனைக்கண் சிந்திக்க
அறிவும், செயல்பட மனமுதலிய கருவிகளும் உள்ளன. இக்கருவிகள் மாயையால் செய்யப்பட்டவை. மாயை
ஓர் அறிவில்லா ஒளிப்பொருளாயினும் செய்யும் செயலின்கண் இன்பம் சுரந்து, செய்பவன் அறிவை
மயக்கும் இயல்பினது. அம்மயக்கிடை நெஞ்சம் வீழ்ந்து மயக்குங்கால் அறிவிடைக் குற்றமும் குறைகளும்
பெருகிவிடுகின்றன. அவைகள் ஆறுபோலவும் நெஞ்சம் அதன் பெருக்கிடைப் பட்ட துரும்பு போலவும்
அலைப்புண்டு அலைவுறுகிறது. அல்லலும் அலைதலும் இன்றித் தெளிவுறும்போதுதான் நெஞ்சம்
பளிங்குபோல் ஒளித்தெறிக்கும் பொருளாகத் திகழும். அறிவு அதனைக் கருவியாகக் கொண்டு அருளின்
பேரொளி, பெருஞ்சோதி தன்பால் வருதல் கண்டு அதற்கு இடமாகும் சிவத்தை அறிந்து அது நோக்கிச்
செல்லும். பேரருட்குச் சிவம் சீரிய இடமாதலை இனிதுணர்ந்து அலைவின்றிச் சென்று சேரும்; இதனை
வடலூர் வள்ளல் எடுத்துரைத்து முறையிடுகின்றார்.
2345. பிறையாறு கொண்டசெவ் வேணிப்
பிரான்பதப் பேறடைவான்
மறையாறு காட்டுநின் தண்ணரு
ளேயன்றி மாயைஎன்னும்
நிறையாறு சூழுந் துரும்பாய்ச்
சுழலும்என் நெஞ்சினுள்ள
குறையாறு தற்கிடம் வேறில்லை
காண்இக் குவலையத்தே.
உரை: திங்களும் கங்கையும் கொண்ட சடையையுடைய பெருமானே, நின் திருவடிப் பேறு எய்துதற்கு அறிவு நூல்களால் காட்டப்படுவது நினது தண்ணிய அருளேயாகும்; ஆனால், அதற்கிடையே மாயை என்னும் நிறைந்த ஆறு என்னுள் வளைந்து வளைந்தோடுகிறது, அதன்கண் எனது நெஞ்சு சிறு துரும்பாய்க் கிடந்து தடுமாறிக் குற்றமும் குறையும் மிகுந்து வெதும்புகின்றமையால், அத் தண்ணருளே என் வெப்பம் தணியும் நல்லிடம்; இவ்வுலகில் அது தவிர வேறில்லை என்றவாறு.
சடையின்கண் பிறைத் திங்களும் கங்கையாறும் இருத்தல்பற்றி, “பிறையாறு கொண்ட வேணி” என்றும், அவற்றைத் தாங்கி அவையிரண்டற்கு முள்ள குற்றத்தையும் தாங்கி உலகிற்குத் தண்ணொளியும் தண்ணீரும் எய்துவித்த தலைமைபற்றிப் பிரான் என்னும் அடிகளார் அறிவிக்கின்றார். அப்பெருமான் திருவடியைக் கண்டாரைக் காண்பதரிதாதலால், அவர் உரைத்த மறை நூல்களைக் காண்க; அவற்றைக் காணின் திருவடிப் பேற்றுக்குத் திருவருளின் இன்றியமையாமை விளங்கும் என்பாராய், “பதப்பேறு அடைவான் மறையாறு காட்டும் தண்ணருள்” என அழகுற அறிவிக்கின்றார். “கீதங்கள் பாடுதல் ஆடுதலல்லால் கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை” என மணிவாசகப் பெருமான் உரைத்தருளுதல் காண்க. அவர் காணப்படாவிடினும் அவர் கண்டுரைத்தருளிய நூல்கள் காட்டுகின்றன என்ற குறிப்பு. பதப்பேறு அடைவதற்கு “மறையாறு காட்டும்” எனத் தெரிவிக்கின்றார். அதன் கண்ணும், மறையும் திருவருளைக் காண்டற்குற்ற நெறியைக் காட்டுவதல்லது, அவ்வருளையே காட்டாது என்ற உண்மை புலப்பட, “மறையாறு காட்டும் நின் தண்ணருள்” என்று இயம்புகின்றார். மாயாகாரியத்தால் மயக்குண்டெய்தும் வெம்மை தணிய வேண்டுதலின் “தண்ணருள்” எனவுரைப்பது சிந்தித்தற்குரியது. பிற மொழி வாயிலாக வேதாந்திகள் கூறும் மாயை “அநிர்வசனியம்”; தமிழ் மொழி வாயிலாகச் சான்றோர் கூறும் மாயை, உடல் கருவி கரணங்களையும் உலகையும் படைத்தற்கு முதற் காரணமாகக் கொள்ளப்படும் அறிவில்லதொர் அரும்பொருள். அறிவை மயக்கும் தன்மை அதற்கு நிறைவாக உண்டு. அது வெளிப்படவே, “மாயை என்னும் நிறையாறு” எனக் கூறுகின்றார். உடம்பும் அதனை இயக்கும் நெஞ்சும் அம்மாயையால் ஆகியவை; அதனால் உயிர்க்கு உறுதுணையாய்ச் செயல்படும் நெஞ்சம் மாயை வயப்பட்டிருப்பது தோன்ற “நிறையாறு சூழும் துரும்பாய்ச் சுழலும் என் நெஞ்சு” என நினைப்பிக்கின்றார். மாயை மயக்கினால் குற்றங்கட்கு இடனாய் அலவுற்று வெம்மை மிக்கு வெதும்பும் உள்ளத்துக்கு இடம் திருவருள் என்பது தெளியப்பட வொன்றாகையால், “நெஞ்சின் உள்ள குறை ஆறுதற்கு இடம் வேறில்லை காண் இக் குவலையத்தே” என்று கூறுகின்றார். கு - நிலம்; வலையம் -வளையம்; வலையம் என்பது தமிழிலிருந்து வட மொழியிற் புகுந்த சொல்.
இதனால், குற்றம் குறைகளால் உண்டாகும் துன்பவெப்பம் தணிவதற்கு இறைவன் திருவருளையன்றி வேறிடம் என்று வற்புறுத்துவது பயனாதல் அறிக. (175)
|