176
176. தொல்காப்பியர் திருவள்ளுவர்
காலத்து வாழ்ந்த சான்றோரும் அவர்கட்கு முன் வாழ்ந்தோரும் எல்லாம் வல்ல பரம்பொருள் ஒன்று
உண்டு என்று உணர்ந்து அதன் திருவடி சேர்தலே மக்கட்குப் பிறவிப் பயன் என்று அறிவித்தனர்.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் திருவடி சேராதார்” எனத் திருவள்ளுவர் முடிந்த
முடியாக மொழிகின்றார். அவர்கட்குப் பின்வந்த திருமூலர் முதலியோரும் ஞானசம்பந்தர் நாவுக்கரசர்
முதலிய பலரும் பரமன் திருவடியைச் சிறப்பித்துப் பாடிப் பலரும் உணரச் செய்துள்ளனர்.
இறைவன் திருவடியை
உணர்த்தும்போது அதன் உணர்வரும் தன்மையை ஒரு வரலாற்றின் வாயிலாகக் காட்டுகின்றார். பௌராணிக
நெறியில் தேவர்கட்குத் தலைமைத் தேவர்களாகத் திருமாலையும் பிரமனையும் வைத்து அவர்களில் பிரமன்
படைப்புத் தொழிலையும் திருமால் காத்தற் றொழிலையும் செய்வர் என உரைத்துள்ளனர். பிரமன்
எக் காலத்தும் வேதம் ஓதுவதே தொழிலாகக் கொண்டவன்; அதனால், அறிவிலும் மிக வல்லவன். பிரமனைப்
பயந்தவன் திருமால் வேதங்களைக் கவர்ந்து சென்ற அசுரர்களைக் கொன்று அவற்றை மீட்டவன் அப்பெருமான்.
அவன் கண்ணனாகப் பிறந்து தனது தொழிலைச் செய்கையில் அருச்சுனனுக்குக் கீதையை உபதேசித்த ஞானமூர்த்தி
எனப் பாரதம் பாடிய வியாசனார் விளம்புகிறார். இவ்வாற்றால் தலைமைத் தேவர்களான இவ்விருவரும்
ஞானநூல்களை ஓதிக் காத்த உரவோர் என்று தெளிகின்றோம். ஆயினும், ஒருகால் இவ்விருவரும் சிவபிரானுடைய
முடியையும் அடியையும் காண முயன்று தமது முயற்சியில் வெற்றி பெறாராயினர். திருமால் முடிவில் சிவன்
திருமுன் வணங்கி நின்று, “ஐயனே, உன் திருவடி காண்பது அரிது” என உரைத்தார். இதனால் சிவபரம்பொருளின்
திருவடியைக் கண்டு வழிபடுவது மன்னுயிர்க்கு அரிதென்பது தெளிவாயிற்று. இவற்றைக் கருத்திற் கொண்ட
வடலூர் வள்ளல், இந்நிலைமைகளை எடுத்துரைத்து இறைவனைத் திருவடி காணும் பேற்றுக்கு நெறியருள் என
முறையீடு செய்கின்றார்.
2346. மாலறி யாதவன் அன்றேஅத்
தெய்வ வரதனுநின்
காலறி யாதவன் என்றால்அக்
காலைஎக் காலைஎமைப்
போலறி யாதவர் காண்பார்முற்
கண்டமெய்ப் புண்ணியர்தம்
பாலறி யாதவன் நானிது
கேட்டுணர் பாலனன்றே.
உரை: திருமாலை அறிவறியாதவன் என்றல் கூடாது; அத் தெய்வத் தலைவனும் நின் திருவடியை அறிந்திலன் என்று புராணிகர் கூறுகின்றார்கள் என்றால், அத் திருவடியை எங்களைப் போல் அறிவறியாதவர் எப்போது காண்பார்கள்? முன்னை நாட்களில் கண்டு மகிழ்ந்த மெய்ப்புண்ணியர் தம்மையடைந்து திருவடி காணும் நெறியறியாதவனாகிய நான் இதனைக் கேட்டறியும் பான்மையன்; ஆதலால், திருவடி காணும் நெறி யருளுக. எ.று.
திருமாலாகிய தெய்வம் ஞானவடிவின னாதலால், அவனை 'அறியாதவன்' என்பது முறையன்று என்பது உலகறிந்த உண்மையாவது பற்றி, “மால் அறியாதவன் அன்றே” என உரைக்கின்றார். தொழுதார்க்கு வரம் தந்து உய்விக்கும் பெருமான் அத் திருமால் என்ற கருத்தை உலகவர் அறிதற்பொருட்டுத் “அத் தெய்வ வரதன்” என எடுத்துரைக்கின்றார். வரதன் - அருளாளன். அத்தகைய ஞானவானைப் புராணிகர் சிவனது திருவடியைக் காணாதவன் என்கின்றார்கள் என்பது புலப்பட, “நின் கால் அறியாதவன் என்றால்” என இயம்புகின்றார். உலகம் காக்கும் தலைமைத்தெய்வமாகிய அத்திருமாலே காணமாட்டாதது நின் திருவடியெனில், யாமோ, எமைப் போல்பவரோ ஒருபோதும் காணமுடியாதே என்றற்கு, “அக்காலை எக்காலை எமைப்போல் அறியாதவர் காண்பர்” எனக் கட்டுரைக்கின்றார். அறியாதவர், இங்கே ஏதுப்பொருளில் வந்த வினைப் பெயர். எக்காலை - எப்போது. முன்னை நாட்களில் வாழ்ந்த சான்றோரை, “முற்கண்ட மெய்ப்புண்ணியர்” எனக் குறிக்கின்றார். பன்நூறு ஆண்டுகட்குமுன் வாழ்ந்து முதல்வனை யுண்ர்ந்து அவன் திருவருள் ஞானத்தால் திருவடிக்காட்சி பெற்றவர்; அவர்கள் அது பெறுதற்குரிய சிவபுண்ணியம் செய்த சிறப்புடையர்; அதுபற்றியே “மெய்ப்புண்ணியர்” என விளம்புகின்றார். “கழலார் கமலத் திருவடியென்னும் நிழல் சேரப்பெற்றேன்” (திருமந். 1600) என்பர் திருமூலர். “மாசில் வீணையும் மாலைமதியமும் வீசுதென்றலும் வீங்கிள வேனிலும், முசுவண்டறை பொய்கையும் போன்றதே, ஈசன் எந்தை இணையடி நீழலே” எனத் திருநாவுக்கரசரும் கூறினர். இவர்களையும் ஏனைப் பெருமக்களையும் நினைவிற்கொண்டே வடலூர் வள்ளல் “முற்கண்ட மெய்ப்புண்ணியர்” என மொழிந்தருள்கின்றார், அத்தகைய பெருமக்களை நேரிதற்கண்டு திருவடியை யடையும் நெறியறிந்து கொள்ளாதவன் எனத் தம்மை நம்மோடு உளப்படுத் துரைகின்றார். திருவடிப்பேற்றுக்குரிய ஞானம் திருவடி ஞானம். “திருவடி ஞானம் சிவமாக்குவிக்கும்” (திருமந். 1598) என்பர். திருவடிஞானம் பெறாமையைப் 'புண்ணியர்பால் அறியாதவன்' எனப் புலப்படுத்துகின்றார். உயிரறிவு, உணர்த்த உணரும் இயல்வினதேயன்றி எதனையும் தானே யுணரும் சால்புடையதன்று என்பது சைவநூல் முடிவு. அதனால், “நான் இது கேட்டுணர் பாலனன்றே” எனச் சொல்லுகின்றார். உணரற்பாலன் என்பதில் உள்ள உணரல் என்ற தொழிற்பெயர், விகுதியின்றி உணர் என முதனிலைத் தொழிலாய் நிற்கிறது. இறைவன் காட்டினாலன்றி உயிர்கள் காணமாட்டாச் சிறுமையுடையன என்பதை, “காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே” எனத் திருநாவுக்கரசர் தெரிவித்தருளுவது காண்க.
இதனால், இறைவன் திருவடிக் காட்சி பெற்று இருணீங்கி இன்பம் பெறுதற்கு ஞானம் அருளுமாறு முறையிடுவது காணலாம். “திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்” என்பது திருமந்திரம். (176)
|