177

      177.இவ்வாறு அருட்காட்சியில் தோய்ந்து இன்புற்ற அடிகளார், தமக்கு அந்த அருள் பெருகும் வாழ்வை அளிக்குமாறு அடுத்து வேண்டுகிறார்.

2347.

     ஒன்றேஎன் ஆரூயிர்க் கோருற
          வேஎனக் கோரமுதே
     நன்றேமுக் கண்ணுடை நாயக
          மேமிக்க நல்லகுணக்
     குன்றே நிறைஅருட் கோவே
          எனது குலதெய்வமே
     மன்றே ஒளிர்முழு மாணிக்க
          மேஎனை வாழ்விக்கவே.

உரை:

     எனது ஆருயிர்க்கு உறுதிப் பொருளாயிருக்கும் ஒன்றே; ஒப்பற்ற உறவாயிருக்கும் பெருமானே; ஆரா இயற்கைத்தாகிய அவாவைக்கெடுத்து அமைதிதரும் அமுதமே; நன்மையல்லது பிறிதொன்றும் அறியாத நன்பொருளே, மூன்று கண்கொண்ட தலைவனே, குணங்கள் மிகுந்த நலம் சலியாத குன்று போல்பவனே, அருளே நிறைந்த முதல்வனே, அடியேனுக்குக் குலதெய்வமாக விளங்குபவனே, பொன்மன்றில் திருக்கூத்து இயற்றும் கூத்தப்பெருமானே, என்னை இந்த அருளின்பத்திலே இருத்தி வாழ்விக்குமாறு வேண்டுகிறேன். எ.று.

     உடலோடு கூடி உலகில் வாழ்வது உயிர்; அங்ஙனம் வாழ்ந்தாலன்றி அதற்கு உய்தி கிடையாது; வாழ்வுக்கு உறுதி தருவன என உலகியல் உணர்வோர் அற முதலாக நான்கு கூறுவர்; ஆகம வழி நின்று அறிவால் உய்தி பெற விழைவோர்க்கு அருள் ஒன்றே வேண்டுவது. அது புலப்படவே, “ஒன்றே என் ஆருயிர்க்கு” என உரைக்கின்றார். உலகியற் பொருள் வாழ்விலும் மேலுலகிற்குரிய அருள் வாழ்விலும் மக்களுயிர் தனித்து வாழ்வதில்லை. உள்ளத்தால் சிலரை நெருங்கி உறவுகொண்டு துணை பெறுவது இயல்பு. அவ்வகையில் தனக்கு உறவாகுவோர் சிவனையல்ல தில்லை என்று கூறுவராய், “எனக்கு ஓர் உறவே” என உரைக்கின்றார். இருவகை வாழ்வையும் உடம்போடு கூடி நின்றே வாழ்தல் வேண்டும். வாழ்தற்கு உணவு இன்றியமையாதது; பொருள் வாழ்வின் உணர்வு மேன்மேலும் பொருள்மேல் அடங்காத ஆசையைப் பெருக்கித் துன்பம் விளைக்கிறது; அருள் வாழ்வுக்கு ஞான வமுது வேண்டப்படுகிறது. அதுவும் சிவமேயாதல் கண்டு “எனக்கு ஓர் அமுதே” என மகிழ்ந்து கூறுகிறார். நல்லனவும் தீயனவும் நிறைந்த வாழ்வில், இன்றியமையாதவை யாயினும் மிகினும் குறையினும் நோய் செய்வது பலவாய் நிலையாய் உள்ள பொருள்களின் பண்பு. சிவமாகிய பரம்பொருள் ஒன்றாய் நிலையுடையதாய் இருப்பதுபற்றி, அதனை “நன்று” என நவில்கின்றார். இருகண் பெற்றும் நலம் செய்யும் தெளிவுக்காட்சி பெறாத மண்ணகத் தலைவர் போலாது மூன்று கண் கொண்டு தெளிவுக் காட்சியுடன் வாழ்வளித்தருளும் வண்மைபற்றி “முக்கண்ணுடை நாயகமே” என மொழிகின்றார். குணக் குன்றமாகவும் அருள் நிறைந்த தலைவனாகவும் இருப்பதன்றி, தனக்கும் தன் வழிவருவார்க்கும் தனித்தெய்வமாய் அருள் புரியுமாறு வேண்டுவார். “எனது குலத் தெய்வமே” எனப் பரவுகின்றார். ஞான அம்பலத்தில் அருளொளி பரப்பி ஆடல் புரியும் பரமன் மாணிக்க வண்ணனாய் விளங்குதல் பற்றி, “மன்றே ஒளிர் முழு மாணிக்கமே” என வேண்டுகின்றார். இது பற்றியே மணிவாசகர் கூத்தப் பெருமானை மாணிக்கக் கூத்தன் எனப் போற்றுகின்றார்.

     இங்ஙனம் ஆர்வமொழிகள் பல பகர்ந்து பரவுவது தன்னைத் திருவருட் செல்வ வாழ்வில் இருத்தி அளிக்க வேண்டும் என்பதற்காக என்பது பயனாம்.

     (177)