178
178. உலகியல் வாழ்வு மக்களினத்தோடு கலந்து பொதுவகையில் ஒருவர்க்கொருவர் உதவியும் உதவிபெற்றும்,
கலந்தும் கலவாமலும், ஒத்தும் ஒவ்வாமலும் இயலுவதாகும். இதனைச் சமுதாய வாழ்வு என இந்நாளில் அறிஞர்
கூறுவர். இதுவேயன்றித் தனிவாழ்வு ஒன்று உண்டு. அது, கணவன் மனைவி என்ற இருவரால் உருவாகி, மக்கள்,
உறவினர், பெற்றோர் உடன்பிறந்தார் ஆகிய கிளைகளுடன் வாழ்வதாகும். இதனைக் குடும்ப வாழ்வு
என்பர். குடும்பங்கள் பல சேர்ந்தது சமுதாயம். சமுதாய வாழ்வாகிய உலக நடையே பெருந்துன்பம்
தருவதென இதுகாறும்
கூறிவந்த வள்ளற்பெருமான் குடும்ப வாழ்வும் துன்பம் தருவதும் கண்டு அதனை வெளிப்படுத்தித் திருவருள்
வழங்குமாறு முறையிடுகின்றார்.
குடும்பத்தில் நிகழ்வனவற்றைத் தொகுத்தும் வகுத்தும் நோக்குவோமாயின் உழைத்துப்
பொருளீட்டலும், அதனை உண்பதும் உண்பிப்பதும் உறங்குவதும் மகப்பெறுதலும் அடிப்படையாக இருப்பது
காணலாம். உழைத்தலும் பொருளீட்டலும் மெய்வருத்தமின்றி ஆவதில்லை; ஈட்டியவற்றைக் காத்தலும்
துன்பம்; இவ்வாறே ஒவ்வொன்றும் துன்பம் தருவதே. பொருள்வினை செய்தற்கு இன்றியமையாத அறிவுக்கு
வளம் தரும் கல்வியும் துன்பம் எனப்படுமாயின் வேறு கூறுவது மிகை. இன்பம் தருவதாயினும் தொடக்கம்
துன்பமே என்பர் குமரகுருபரர். உறக்கமும் நன்கு அமையாதவழித் துன்பமே; உணவும் பொருந்தாமல் மிகைப்படுமாயின்
துன்பம் தருகிறது. மக்களைப் பெறுவதும் வளர்ப்பதும், கல்வி தந்து நன்னடை பெறுவிப்பதும் மிக்க
துன்பமே யாகும். வாழ்க்கைத் துணையாக வந்த மனைவி மாண்பிலளாயின், மக்கள் அறிவறியும் திறம்
பெறாராயின், உண்டாகும் மனநோய்க்கு எல்லையிராது. கருத்து வேறுபாட்டால் பகையும், செய்வினைக்குறையால்
வறுமையும் இடையூறும் விளைவிக்கும் துன்பம் வேறு. உழைப்பு மிகுதியும் உணவின் மிகுதி குறைவும்,
கடுமழை, கடுவெயில், கடுங்காற்று முதலியனவும் உடற்கு உண்டாக்கும் நோய்வகை பயக்கும் துன்பம் பெரிது.
இவற்றின் வேறாகக் காமவெகுளி மயக்கங்கள் நின்று குற்றம் புரிவித்துத் துன்பம் செய்கின்றன.
முதுமையில் கட்பார்வை குறைவதாலும் காது கேளாமை அடைவதாலும் பற்கள் வீழ்ந்து தெளியப் பேசமாட்டாமை
எய்துவதாலும், உடல்வலி குன்றியவழிப் பிறர் துணையும் ஆதரவுமின்றி இயங்கமாட்டாமை தோன்றுவதாலும்
துன்பங்கள் மிகுகின்றன. இவை ஒருபாலாக, உற்றார் உறவினர் நண்பர் முதலிய தொடர்புடையார்க்கு
உண்டாகும் வறுமையும் சிறுமையும் நோயும் பிறவும் நினைவைக் கலக்கி வருத்தம் விளைவிக்கின்றன.
இவற்றையெல்லாம் எண்ணுகிறார் வடலூர் அடிகள். “இலக்கம் உடம்புக் கிடும்பை” என்ற திருக்குறள்
நெஞ்சில் தோன்றுகிறது. உடம்பொடு கூடி உலகிற் பிறப்பதே துன்பம் என நினைக்கின்றார்.
“எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர்” என்று அருணகிரியார் உரைப்பதை உணர்கின்றார்;
பாடுகின்றார்.
2348. தாழ்வேதும் இன்றிய கோவே
எனக்குத் தனித்தபெரு
வாழ்வே நுதற்கண் மணியேஎன்
உள்ள மணிவிளக்கே
ஏழ்வேலை என்னினும் போதா
இடும்பை இடுங்குடும்பப்
பாழ்வே தனைப்பட மாட்டேன்
எனக்குன் பதமருளே!
உரை: கோவே, பெருவாழ்வே, நுதற்கண் மணியே, மணி விளக்கே, இடும்பை தரும் குடும்ப வேதனைப்படமாட்டேன்; எனக்கு உன் திருவடி தந்தருள்க எ.று.
இன்றிய - இல்லாத; அன்மை இன்மை அடியாகவரும் அன்றி, அன்றிய, இன்றி இன்றிய என்பன குறிப்பு வினைகள். தாழ்வு எய்துதற்குரிய வேண்டுதல் முதல் வேண்டாமை இலாத பெருமானாகலின், “தாழ்வேதும் இன்றிய கோவே” என்று கூறுகிறார். கோ-குறைவு நிறைவுகள் ஓரளவு பொருந்திய தலைவன். தன்னை மண்ணகத்தே வாழ்வுதந்து வாழச் செய்தமை தோன்றத் “தனித்த பெருவாழ்வே” என்று பேசுகின்றார்; மணிவாசகப் பெருமான் “வாழ்முதல்” என்பர். நுதலிடத்தே கண்ணுடையனாதலின் “நுதற்கண்” என்றும், கண்ணிடத்து மணியுள்ளமையின் “நுதற்கண் மணியே” என்றும் ஆர்வத்தோடு உரைக்கின்றார். மனத்தை மணியெனத் திருநாவுக்கரசு சிறப்பித்தலால் “உள்ளமணி” என்றும், ஒளிபரப்பி இருள் கொடுப்பது விளங்க “மணி விளக்கே” என்றும் இசைக்கின்றார். குடும்பவாழ்வில் கடலலை போலத் தொடர்ந்து துன்பங்கள் வந்து தாக்கியவண்ணம் இருத்தலால், “ஏழ்வேலை என்னினும் போதா இடும்பை” என மிகுத்துரைக்கின்றார். துன்பக் காலத்து ஒரு நாள் எழுநாள் போலத் தோன்றுவதுபோலச் சிறு துன்பமும் கடல்போலப் பெருகித் தோன்றுவதுபற்றி, குடும்பவேதனை எழுகடலினும் பெரிது என்றற்கு இவ்வாறு கூறுகின்றார். பிற துன்பங்களால் அறிவு ஒளிபெறும்; துன்பம் சுடச்சுட நோற்பவர்க்கு அறிவு பொன்போல் ஒளிபெறும் எனத் திருவள்ளுவர் உரைப்பர்; குடும்பத் துன்பம் மேன்மேலும் அறிவைக் குடும்பத் தொல்லைக்குள் ஆழ்த்தி நாளும் பெருகும் விழைவு வெறுப்புக்கட்கு இரையாக்கி அறிவை இருள்படச் செய்வது காட்டற்குக் குடும்ப பாழ் வேதனை என்று விளக்குகின்றார். மாட்டேன் என்பது மறுத்தலன்று; பொறுப்பதற்கு வேண்டிய ஆற்றல் இல்லாமையைத் தெரிவிக்கிறது. திருவடிஞானம் பெறப்படுமாயின் இருள் செய்யும் குடும்பப் பாழ.வேதனை நில்லாது கெடும் என்பாராய்ப் “பதம் அருளே” என்று கூறுகிறார். திருவடி என்னாமல் பதம் என்பதில் ஒரு நயம். பதம் என்பது காலமும் இடமும் குறிக்கும் இயல்புடையது. திருவருள் ஞானம் பெற்று இன்புறும் சிவரூப சிவதரிசனம் பெறும் காலத்தையும், சிவயோகத்தால் சிவபோகம் பெறும் இடத்தையும் குறிக்கிறது என்க. எப்பொருளும் அருட்சத்தியின் தோற்றமெனக் கண்டு, அதற்கு முதல் சிவம் என உணர்ந்து, அச் சிவத்தைத் தன் சிந்தையிற் காண்பது சிவரூபம்; கண்டபின் நில முதலிய தத்துவங்களுட் போகாமல், தன்னிலையில் நில்லாமல், சத்தியிடத்தும் அழுந்தாமல் தற்பரமாய்ப் பரமானந்தம் சேர்வது சிவதரிசனம்; தப்பினைச் செய்வதும் அதுவே, நினைப்பும் அதுவே, உணர்ச்சியும் நுகர்ச்சியும் அதுவே, அதுவன்றி ஓரணுவும் அசையாது எனக் கொண்டு அப்பொருளோடே இசைவது சிவயோகம்; தனக்கென ஓர் செயலின்றித் தானதுவாய் நிற்ப, நாதனாகிய சிவன் பேதமற நின்று தானாக்கிக் கொள்வது சிவபோகம். இவற்றின் விரிந்த பண்புகளை, உண்மை நெறி விளக்கம், தச காரிய விளக்கம் முதலிய நூல்கள் உரைக்கின்றன.
இதனால், குடும்ப வேதனையிற் பட்டு ஆழ்ந்து அறிவு பாழ்பட்டு ஆற்ற்ல இழந்தமையால், இனிப்படமுடியாது என்று சொல்லி திருவடிப் பேறும் பதமும் அருளக என முறையிடுவது பயனாதல் காண்க. (178)
|