179
179. பெண்மயக்கில் ஆழ்ந்து திரிவோரையும் அருட்பேற்றில் இச்சை மிகுந்து அலமருவோரையும்
அருள்வள்ளல் ஆழ்ந்து நோக்குகின்றார். இருவர் உள்ளங்களும் ஒரு நிலையாகவே தோன்றுகின்றன. ஆனால்,
பெண் மயக்குற்றார் மேனியில் துயரமும் அருள் வேட்கையினார் மேனியில் உவகையும் காணப்படுகின்றன.
உள்ளும் புறமும் ஒப்ப உவகை தரும் வேட்கையை நோக்கி உள்ளத்தே சிறிதுபோதில் மாய்ந்து கெடும்
சிற்றின்பத்தையும், புறத்தே துன்பத்தையும் தோற்றுவிக்கும் பெண்மயக்கு ஒவ்வாது தாழ்வுபடுதலைக்
காட்டுகிறார். உலகு அது கண்டு “ஆம்” என்கிறது; ஆமாயின் அருட்பேற்றில் ஆர்வம் கொள்க என அறிவுறுத்துவாராய்,
உலகு நோக்கியோடும் நெஞ்சினை நேர்பட நிறுத்தி மொழிகின்றார்.
2349. வண்டுகொண் டார்நறுங் கொன்றையி
னான்றன் மலரடிக்குத்
தொண்டுகொண் டார்தஞ் சுகத்துக்கும்
வாழ்க்கைச் சுழலிற்றள்ளும்
பெண்டுகொண் டார்தம் துயருக்கும்
ஒப்பின்று பேசில் என்றே
கண்டுகொண் டாய்இனி நெஞ்சேநின்
உள்ளக் கருத்தெதுவே.
உரை: கொன்றைமாலை சூடும் சிவனது அருள் வேண்டித் தொண்டு மேற்கொண்டவர் எய்தும் சுகத்துக்கும், பெண்டு கொண்டார் எய்தும் துன்பத்துக்கும் ஒம்புப் பேச இடமில்லை என்பதை, நெஞ்சே நீ கண்டு கொண்டாயாதலால் உன் கருத்து யாது, உரைப்பாயாக. எ.று.
வண்டு கொண்டு ஆர் கொன்றை - வண்டினம் தேனுண்டு பாடும் கொன்றை மலர். நறுங்கொன்றை - நறுமணம் கமழும் கொன்றை. தொண்டு - அன்பால் பணிபுரிதல். இறைவன் திருவடிக்குத் தொண்டு செய்வோர் ஞானம் எய்தி இம்மை மறுமை அம்மைகளில் அயரா இன்பம் எய்துவர். பெண்டுக்குத் தொண்டு பூண்டார், உறுதிப்பொருள் எனப்படும் அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றை இழந்து துன்புறுவர். “அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ணேவல் செய்வார்கண் இல்” என்பர் திருவள்ளுவர். உலகில் வாழ்வார்க்கு இன்றியமையாத அறமுதலியன இல்வழி, அவை எய்தி வீடுபேற்றுக்குச் சமையுறுங்காறும் பிறந்து பிறந்து உழல வேண்டுமாதலால், அதனை “வாழ்க்கைச் சூழல்” என்று கூறுகின்றார். உள்ளங்களைக் கவர்கின்ற வகையில் அருள் வேட்கையும் மகளிர் வேட்கையும் ஒத்த இயல்பினவாகத் தோன்றுதலால், “ஒப்புப் பேசில்” என உரைக்கின்றார். அருள வேட்கையின் இயல்பை, “நெக்கு நெக்குள் உருகி யுருகி, நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும், நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி, நானா விதத்தால் கூத்தும் நவிற்றிச் செக்கர் போலும் திருமேனி திகழ நோக்கி சிலிர் சிலிர்த்துப் புக்கு நிற்பதென்று கொலோ” என மணிவாசகர் கூறுமாறு காண்க. “பயன் பொருளாகப் பேசில் பெண்டு கொண்டார்க்கும் தொண்டு கொண்டார்க்கும் “ஒப்பு இன்று” என்று கண்டு கொண்டாய்” என நெஞ்சிற்குரைக்குமாற்றால் உலகிற்குணர்த்தி, அருள் வேட்கையுற்று இறைவன் திருவருள் பெறுக என முறையிடுகின்றார். (179)
|