181

      181. இறைவன் திருமேனியில் உமாதேவியின் கூறும், கையில் மானும் இருப்பது காண்கின்ற வள்ளலார் கற்பனைத் துறையில் கருத்தைச் செலுத்துகிறார். உமாதேவிபால் மான்போன்ற சாயல் கண்டு அவளை மான் என்று சான்றோர் பாராட்டுவது நினைவுக்கு வந்தது. மனத்தைக் குதிரையாகக் கூறுவர் புலவர். “உள்ளம்போல உற்றுழியுதவும் புள்ளியற் கலிமா” எனத் தொல்காப்பியரும் கூறுவர். இம் மூன்றையும் கொண்டு அழகிய சொல்லோவியம் ஒன்று வள்ளற்பெருமான் வரைகின்றார்.

2351.

     மைகொடுத் தார்நெடுங் கண்மலை
          மானுக்கு வாய்ந்தொருபால்
     மெய்கொடுந் தாய்தவர் விட்டவெம்
          மானுக்கு மேவுறஓர்
     கைகொடுத் தாய்மயல் கண்ணியில்
          வீழ்ந்துட் கலங்குறும்என்
     கொய்கொடுத் தாழ்மன மானுக்குக்
          காலைக் கொடுத்தருளே.

உரை:

     மலை மகளாகிய மானுக்கு மெய்யில் ஒரு கூறு கொடுத்தாய்; தாருகவனத்து முனிவர் விடுத்த மானைக் கையில் பற்றிக் கொண்டாய்; என் மகனாகிய மானுக்கு நின் காலைக் கொடுத்தருள்க. எ.று.

     மை தீட்டிய நீண்ட கண்களை, “மைகொடுத்து ஆர் நெடுங்கண்” எனக் குறிக்கின்றார். மலைமான் - மலைமகளாகிய உமாதேவியை மலைமான் என்பது பொருத்தமாகும். அம்பிகைபால் அன்பு கொண்டு தன் மெய்யில் இடப்பாகத்தை அளித்த அருட்செயலை வியந்து “ஒருபால் மெய் கொடுத்தாய்” எனக் கூறுகின்றார். ஒருபால் மெய்யென்பதை “மெய்யில் ஒருபால்” என மாற்றிக்கொள்க. தவர் - தவம் செய்பவர். தாருகவனத்து முனிவர்களை இங்கே “தவர்” என உரைக்கின்றார். அவர்கள் வேள்வியொன்று செய்து ஒரு மானை உண்டாக்கிச் சிவனை அச்சுறுத்தி வெருட்டுதற் பொருட்டு அவர்பால் விட்டனர். அதனைக் குறித்தற்கே “தவர்விட்ட வெம்மான்” என்று கூறுகின்றார். கொடுமைப் பண்புடையது அத் தவர் விட்டமான்; அதனால் அதனை “வெம்மான்” என விளக்குகின்றார். வெருண்டு ஓடாதபடி கையில் அந்த மானை நன்கு பற்றியிருப்பது விளங்க, “மேவுற” என இசைக்கின்றார். மலைமானுக்கு மெய்யும், வெம்மானுக்குக் கையும் கொடுத்தாய்; என் மனமாகிய மானுக்கு நின் திருவடியைத் தந்தருள்க என வேண்டுபவர், “என் மனமானுக்குக் காலை கொடுத்தருள்” என வேண்டுகின்றார். காம வெகுளி மயக்கங்களில் ஒன்றான மயக்கத்துள் வீழ்ந்து கலங்குகின்ற மனத்தை, “மயல் கண்ணியில் வீழ்ந்துள் கலங்குறும் என் மனமான்” என்றுரைக்கின்றார். கொய்கொடுத்து ஆழ்மனம் - கொய்யப்பட்ட மலரும் கொய்யப்பட்ட களியும்போல அகப்பட்டு வருந்தும் மனம் எனப் பொருள்படும்.

     இதனால் ஆசை வலையில் அகப்பட்டுச் சிக்குறும் என் மனத்துக்குத் திருவடி தந்து வீடருள்க என வேண்டுவது பயனாதல் காண்க.

     (181)