185

      185. திருவருளாலன்றி உயிர் உடல் கருவி கரணங்களைக் கொண்டு உலகில் வாழ இயலாமைபற்றி அதனைப் புரிவது கடனாகக் கொண்டான் என்ற கருத்து, “தன் கடன் அடியேனையும் தாங்குதல்” என்ற திருநாவுக்கரசரின் அறிவுரையால் வற்புறுத்தப்படுகிறது. அம்மையாரும் “அருளே உலகெல்லாம் ஆள்விப்பது” என்று அறிவிக்கின்றார். இவற்றை நோக்கும்போது திருவருள் எவ்வுயிர்க்கும் பொதுவாக வேண்டப்படுவது என்று காணலாம். காண்போர், மக்களில் சிலரையே அருளாளரென்றும் திருவருள் பெற்ற அடியார் என்றும் கூறுவது ஏன் என்றொரு கேள்வி எழுப்புகின்றனர். திருவருள் நெறியில் நின்று செயற்கரிய செய்பவரே அருள் பெற்ற அடியார் என அறிஞர் அறிவிக்கின்றனர். அவரது விடை, செயற்கரிய செயலொன்றைச் செய்துமுடித்த பின்னன்றோ இவ்வுண்மை வெளிப்படுகிறது? செயலைத் தொடங்குமுன்பு அவ்வருளாளரை அறிய முடியாதே? முன்னறிந்து அப் பெருமக்களை அறிவது எங்ஙனம்? என்ற ஐயம் பிறக்கிறது. திருவள்ளுவர் இதற்கு விடை கூறுகிறார்; “நல்லாற்றால் நாடி அருளாள்க, பல்லாற்றால் தேரினும் அஃதே துணை” என்பது அவரது அறிவுரை. காணப்படும் மக்களின் குணஞ்செயல்களை நன்னெறிக்கண் நின்று ஆராய்க; அவ்வாராய்ச்சி அவர்பால் அமைந்திருக்கும் அருள் நலத்தைப் புலப்படுத்தும். அந்த அருளுணர்வை மேற்கொண்டு செயல்புரிக; எவ்வகையில் ஆராய்ந்தாலும் அந்த அருளே துணையாவது விளங்கும் என்றற்கே, “பல்லாற்றால் தேரினும் அஃதே துணை” என்று கூறுகின்றார். எனவே பெரியோர் பெருமையும் சிறியோர் சிறுமையும் நல்லோர் நன்மையும் தீயோர் தீமையும் அறிந்துகொள்ளுவதும் தள்ளுவதும் செய்தற்குத் திருவருட் காட்சிதான் சிறந்தது என்று காண்கின்றோம். உலகியல் வாழ்வுக்கே அருட்காட்சி இன்றியமையாதெனின் இறவா இன்ப வாழ்வுக்கும் அதனைக் காட்டும் அருளாளராகிய மெய்யன்பரைத் தெரிந்துகோடற்கும் திருவருள் மிகவும் இன்றியமையாது என்பதை வடலூர் அடிகள் தெளிந்து சொற்களால் நமக்கு உணர்த்துகின்றார். அருட்காட்சியை இந்நாளையோர் விஞ்ஞானப் போக்கு என்பர்; அது முற்றிலும் உண்மை.

2355.

     ஈடறி யாதமுக் கண்ணாநின்
          அன்பர் இயல்பினை இந்
     நாடறி யாதுன் அருளன்றி
          ஊண்சுவை நாவையன்றி
     மேடறி யாதுநற் பாட்டைக்கற்
          றோரன்றி மேற்சுமந்த
     ஏடறி யாதவை யேனறி
          யாஎன் றிகழ்வரன்றே.

உரை:

     ஒப்புரைத்தற்கில்லாத மூன்று கண்களையுடைய சிவபெருமானே, உண்ணப்படும் உணவின் சுவை நாவையன்றி அதன் மேலேயுள்ள வாய் அண்ணம் அறியாது; நன்கு கற்றோரையன்றி நல்லதொரு பாட்டின் நலத்தை அஃது எழுதப்பட்ட ஏடு அறியாது; அண்ணமும் ஏடும் அறிவில்லனவாதலால் அவை ஏன் அறியவில்லை என வெகுண்டு இகழ்பவர் இல்லை; அதுபோல, நின் அன்பர் இயல்புகளைத் திருவருள் உணர்வாலன்றி நாட்டவர் தாமே அறியார்.

     ஞாயிறு, திங்கள், தீ என்ற மூன்றும் சிவனுக்குக் கண்கள் என்பர். “பாதம் புவனி சுடர் நயனம், பவனம் உயிர்ப்பு ஓங்கும் ஓதம் உடுக்கை உயர்வான் முடிவிசும்பே உடம்பு வேதம் முகம் திசை தோள் மிகு பன்மொழி கீதம்” என்று சேரமான்பெருமாள் கூறுவது காண்க. ஞாயிறு முதலிய மூன்றிற்கும் ஒப்பு வேறில்லையாதலின், “ஈடறியாத முக்கண்ணா” என்று இசைக்கின்றார். ஈடு - ஒப்பு. அருண்ஞானத்தால் இறைவன் நல்லியல்பறிந்து அன்பு செய்யும் அருளாளரின் நலங்களை, நாட்டு மக்கள் அருளொளி பெறாமையின் அறியமாட்டாமையின், “நின் அன்பர் இயல்பினை நாடறியாது” என்று கூறுகின்றார். மாட்டாமைக்குக் காரணம் இது என்பாராய் “அருளேயின்றி” என்றார். நாட்டவர்பால் அருளுணர்வு இருக்குமாயின், அறிந்து போற்றிப் பாராட்டுவர்; அஃது இல்லாமையால், அறியாமையோடு இகழ்தலும் செய்கின்றனர் என்பது குறிப்பு. உண்ணப்படும் உணவு அண்ணத்தையும் பற்களையும் தொட்டு அறைபட்டு உமிழ் நீர் கலந்து வாய்நிறையப் பொருந்தினும் நா ஒன்றுதான் அதன் சுவையை அறியவல்லதாய் உளது; அதற்குக் காரணம் அண்ணத்திற்கில்லாத சுவையுணர்வு நாவின்பால் இருப்பது; அதுபோல நின் அன்பரது இயல்புகளை அருட்காட்சியுடைய அன்பர்களே அறிந்து போற்றிப் புகழ்கின்றனர்; எனவே அன்பர்களின் அன்புநலத்தை அருள் நலமுண்டானாலன்றி அறியுமாறு இல்லையாயிற்று. நன் பொருள் நிறைந்த அழகிய பாட்டு எழுதப்படினும், அதன் நலமறியும் அறிவேயில்லாத ஏடு அறியாது, அதுபோல அறிவில்லாத பொருள்களிலும் அருளாற்றல் ஒன்றாய்க் கலந்திருப்பினும் அவை அவ்வருளை அறியா; இக் கருத்தே “விளம்பிய உள்ளத்தின் மெய் வாய் கண் மூக்கு அளந்தறிந்தறியா” என்ற சிவஞான போதத்தில் உணர்த்தப்படுவது காண்க. மேலும் நாவும் ஏடுமாகிய உவமைகள் வேறு வேறு பொருள்களை விளக்கி நிற்பதால் அடுத்துவர வளமை யாகாமை அறிந்து கொள்க.

     இதனால், அருட்செல்வர்களாகிய மெய்யன்பர்களின் குணஞ்செயல்களை நாட்டார் அறிதற்கு அருள்ஞானப் பேரொளி அவர்கட்கு உண்டாதல் வேண்டும் என்பது பயன்.

     (185)