186
186.
குடும்பம் இடும்பைக்கே கொள்கலம் என்று சான்றோர் கூறுகின்றார்கள்; “ஓடி உய்தலும் கூடும் மன்,
ஒக்கல் வாழ்க்கை கட்குமாகாலே” என்று சங்கச் சான்றோரும் உரைத்துள்ளனர். ஆயினும், ஒருவனும்
ஒருத்தியுமாய், வேறு வேறு இடங்களில் பிறந்து, வேறுவேறு சூழ்நிலையில் வளர்ந்து, திருமணத்தால்
கணவனும் மனைவியுமாய்க் கூடிக் குடும்பத்தை நிறுவுகின்றார்கள். அவர்களுடைய இளமைத் துடிப்பும், காதற்காமவின்ப
விதிர்ப்பும் அவர்களின் அறிவுக்கண்ணை மறைக்கின்றன. முயன்று பெறும் பொருளும், செய்கின்ற
அறமும் இன்பம் பயக்கின்றன. குடும்பம் இன்ப நிலையமாய் மக்கட் செல்வத்தால் மகிழ்விக்கின்றது.
நாட்கள் சில சென்றதும், பொருட்குறையும் அறம்சாரா வறுமையும் எதிர்பாரா இன்னல்களும், கருத்து
வேறுபாட்டால் பகையும், உணவின் மிகுதி குறைவுகளால் நோயும் பிறவும் தோன்றிக் குடும்பவாழ்வு
துன்பநிலையமாய் மாறுகிறது. இங்ஙனமாகவும் குடும்பவாழ்க்கை விடுமாறின்றிப் பின்னிப் பிணிப்பதோடு
குடும்பத்திற் பிறக்கும் மக்களையும் குடும்ப வாழ்வில் ஈடுபடுத்துவதால் உற்றார் உறவினர் சுற்றத்தார்
ஊரவரோடு கூடி இன்புறுகின்றோம். சூடுண்ட பூனையேனும பின்னர் மிகக் குளிர்ந்த பால் கலந்த உணவைக்
காணினும் உண்டற்கு அஞ்சி நீங்குகிறது; என் மனம் அங்ஙனம் ஆகிறதில்லையே என வருந்தி, நின் திருவருள்தான்
நல்லறிவும் துணிவும் தருதல் வேண்டுமென்று முறையிடுகின்றார்.
2356. சூடுண்ட பூஞைக்குச் சோறுண்ட
வாய்பின் துடிப்பதன்றி
ஊடுண்ட பாலிட்ட ஊண்கண்ட
தேனும் உணத்துணியா
தீடுண்ட என்மனம் அந்தோ
துயரில் இடியுண்டும் இவ்
வீடுண்ட வாழ்க்கையில் வீழுண்ட
தால்எம் விடையவனே.
உரை: விடையவனே, சூடுண்ட பூனை பாலிட்ட ஊண்கண்ட போது வாய்துடிப்பதன்றி உண்ணத் துணியாது; குடும்பத் துயரால் நன்கு தாக்குண்டும், வீடு அமைத்துக் குடும்பம் நிறுவி வாழும் வாழ்க்கையை விரும்புகிறது; இவ்விருப்பினின்றும் நீங்கி உய்திபெறுதற்கு அருள் புரிக எ.று.
சுடச்சுடக் காய்ச்சிய பாலைக் கண்டு உண்மை தெரியாமல் வாய் வைத்துச் சூடுபட்டு நீங்கிய பூனையச் 'சூடுண்ட பூனை' என்பது உலக வழக்கு. பூனையைப் பூஞை, பூசையென்பது மரபு; பழையோர் செய்யுட்களில் வழங்குவது காணலாம். ஒருகால் சூடுண்டது பின்பு அப்பால் கலந்த சோற்றைக் காணினும் மனம் அச்சத்தால் வெகுண்டு நீங்கிவிடும்; எனினும் உண்பொருட்காட்சியால் நாவில் நீர் ஊறுதலால், வெறும் வாயை நாவால் நக்குவதும் வாயிதழ் துடிப்பதும் இயல்பாதலால் “வாய் துடிப்பதன்றி உணத்துணியாது” என்று கூறுகிறார். பால் கலந்த உணவு காண்பார் உள்ளத்தில் விழைவு மிகுவிப்பதாகலின் “ஊடுண்டபாலிட்ட ஊண்” என்று சிறப்பிக்கின்றார். உண்ணப்படுவது, ஊண்; படுவது, பாடு; சுடுவது சூடு என்றாற் போல முதனிலை திரிந்து வரும் வினைப் பெயர் வகையைச் சேர்ந்தது ஊண். வினைமுதனிலையின் முதனின்ற குறில் நீண்டு செய்வது செயப்படு பொருள் முதலியவற்றின்மேல் நிற்பது பற்றி வினைப்பெயர்வகை எனல் வேண்டிற்று. வாழ்க்கையில் ஈடுபட்ட மனம் சூடுண்ட பூனையினும் பேதைமை மிகுந்து “வாழ்க்கையில் வீடுண்டது” என்று இசைக்கின்றார். இடி, தீப்பிழம்பாய் வானத்தே மின் சக்தியின் திரட்சியால் உருவாவது; இடி வீழ்ந்த மரமும் பிறவும் வெந்தழிவது உலகறிந்தது. துயரில் இடியுண்டும் என்பது, துயரால் தாக்குண்டும், துயராகிய இடியால் தாக்குண்டு வெந்தும் எனப் பொருள்படும். பூனை உண்ணத் துணியாதவாறு போல வாழ்க்கையை மேலும் நுகரவிரும்பாது விடுதல் செய்யத்தகுவதாயிருக்கவும், விடாது அதனையே நுகர்ந்து உறைதற்குக் காரணம் கூறுவார், “வாழ்க்கையில் வீழுண்டதால்” என வுரைக்கின்றார். வீழ்தல் - விரும்புதல். “வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி” (1192) எனும் திருக்குறள் காண்க. இன்ப மிகுதியால் மைந்துற்று உயர்தலும், இன்பப் பொருளின் ஈர்ப்பின் வயப்பட்டுத் தாழ்தலும் மனத்துக்கு இயல்பு; இங்கே தாழ்வது பொருளாக வீழ்தல் என்னும் சொல் சான்றோரிடையே வழங்குகிறது. அது பற்றியே காதற் காம நுகர்ச்சியை விழைந்து, அதன்கண் தாழ்வாரை வீழ்வார், வீழ்ப்படுவார் எனப் பலவாய்ப்பாட்டில் திருவள்ளுவர் வழங்குகின்றார். “என்றும் தன் வாழ்க்கையதுவாகக் கொண்ட முதுபார்ப்பான் வீழ்க்கை பெருங்கருங் கூத்து” (கலி. 65) என்றும், “ஊர் இழந்தன்று தன் வீழ்வுறு பொருளே” (அகம். 119) என்றும் வரும் சான்றோர் வழக்குகளைக் காண்க. வீழ்வாரை வீழ்த்துவது வாழ்க்கையின் இயல்பாயின், நோவதிற் பயனின்றெனின், அற்றன்று; வாழ்க்கை வாழ்வாரை வீடுபெற்று உயர்த்தற்கமைந்தது என்றற்கு, “வீடுண்ட வாழ்க்கை” என வுரைக்கின்றார். வீடு பேற்றுக்குரிய நலமனைத்தும் தன்கண் உடையதென்பது தோன்றவே “வீடு உண்ட வாழ்க்கை” என்று விளம்புகின்றார். வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வ வாழ்வு பெறுவது ஒரு தலை எனத் திருவள்ளுவர் வற்புறுத்துகின்றா ரன்றோ?
இதனால், வீடு பேற்றுக்கமைந்த வாழ்க்கையை இடமாகக் கொண்டு தாழ்ந்து வீழ்கின்ற எனக்கு, அதனை நெறியாகக் கொண்டு உயர்தற்கு அருள் செய்தல் வேண்டும் என்பது பயனாயிற்று. (186)
|